கன்னியர்களுக்காக மன்றாடுங்கள்!

அர்ச். அவிலா தெரேசம்மாள் தன் கன்னியர்களிடம் : ''இப்போது உங்கள் சரீரங்களைத் தவிர கிறீஸ்துவிடம் வேறு சரீரமில்லை; உங்கள் கரங்களையும், பாதங்களையும் தவிர பூமியில் அவருக்கு கரங்களும் பாதங்களுமில்லை; உங்கள் கண்களின் வழியாகவே அவர் உலகத்தைத் தயவோடு பார்க்கிறார். நன்மை செய்யும்படி அவர் உங்கள் கால்களைக் கொண்டுதான் நடக்கிறார். உங்கள் கரங்களைக் கொண்டுதான் அவர் உலகை ஆசீர்வதிக்கிறார்" என்றாள்! துறவறக் கன்னிமை கிறீஸ்துநாதரின் பார்வையில் எவ்வளவு விலையேறப் பெற்றதாக இருக்கிறது!

ஆனால் இன்று, எவ்வளவு பரிதாபம்! சலேத் காட்சியில் தேவ அன்னை, ''துறவற மடங்களில் கன்னிமை மலர்கள் அழுகிக் கிடக்கும்" என்று இக்காலத்தைப் பற்றிக் கண்ணீரோடு முன்னறிவித்தார்கள். இதை இன்று நாம் கண்கூடாக காண்கிறோம்.

பெரும்பாலான 'அருட்சகோதரிகள் தங்கள் தேவ அழைத்தலின் உன்னதத் தன்மையை அறியாதிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.

அன்புக் கன்னியரே, நீங்கள் மடத்தில் நுழைந்த முதல் நாளை நினைத்துப் பாருங்கள்! எத்துணை ஆர்வத்தோடு மடத்தில் நுழைந்தீர்கள்! தெய்வீக மணவாளரின் மணவாளிகளாகவும், கீழ்ப்படிதலிலும், தரித்திரத்திலும், கன்னிமையிலும் அவரைப் பின் செல்ல வேண்டியவர்களாகவும் இருக்க அழைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை எவ்வளவு நன்றாக உணர்ந்திருந்தீர்கள்!

ஆனால் நாட்கள் செல்லச் செல்ல கன்னியர் மடங்களில்தான் எத்தனை சச்சரவுகள்! எவ்வளவு பகைமை! எவ்வளவு உலக நாட்டம்! மேலை நாடுகளில் நிறவெறி, நம் நாட்டில் சாதி வெறி!

அர்ச். அவிலா தெரேசம்மாள், அர்ச் மார்கரீத் மரியம்மாள், அர்ச். சியென்னா கத்தரீனம்மாள், அர்ச். பாஸி மரிய மதலேனம்மாள், அர்ச். குழந்தை சேசுவின் தெரேசம்மாள் இவர்களை முன்மாதிரியாகக் கொண்டு வாழ வேண்டிய நீங்கள், உலகின் கவர்ச்சிகளில் மயங்கிக் கிடக்கிறீர்கள்!

ஜெப, தவமும், சிலுவையும் இன்றி, சில நாட்கள் கூட தாக்குப் பிடிக்க முடியாத துறவற வாழ்வில் இவை பற்றி எந்த அக்கறையும் இன்றி வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.

தேவசிநேகத்திலும், ஆன்ம தாகத்திலும் நீங்கள் சிந்தும் ஒரு துளிக் கண்ணீரும் கூட ஓர் ஆன்மாவை மனந்திருப்ப வல்லது என்பதை எப்படி அறியாமல் போனீர்கள்?

உங்களுடையவும், பிறருடையவும் ஆன்ம அர்ச்சிப்பே உங்கள் துறவறத்தின் முதன்மையான நோக்கம் அல்லவா?

சேசு மரியாயின் திரு இருதயங்களுக்கு ஆறுதலாக இருக்க வேண்டிய நீங்கள், அதற்கு மாறாக, அத்திரு இருதயங்களைக் குத்தும் முட்களாக மாறியிருக்கிறீர்கள்.

இனியாவது உத்தம் கன்னியராக வாழப் பிரதிக்கினை செய்வீர்கள் என்றால், சேசுவும், கன்னியரின் இராக்கினியும் அகமகிழ்வார்கள்.

விசுவாசிகளாகிய நாமோ கன்னியர் மடங்களில் கடவுள் விரும்புகிற மறுமலர்ச்சி திரும்பி வரும்படி ஜெபிப்போம்.