அக்டோபர் 12

அர்ச். உவில்ப்ரெட் - மேற்றிராணியார் (கி.பி. 709) 

ஆங்கிலேயரான உவில்ப்ரெட் வாலிபப் வயதில் உரோமை முதலிய பெரிய நகரங்களுக்குச் சென்று உலக கல்வியையும் ஞானக் கல்வியையும் கவனத்துடன் கற்றறிந்தார். பிறகு இங்கிலாந்துக்குப் போய் உரோமையில் அனுசரிக்கப்படும் வேதாசார வழக்கங்கள் மற்ற தேசங்களிலும் அனுசரிக்கப் படும்படி பிரயாசைப்பட்டார். 

துவக்கத்தில் இவருடைய முயற்சி அனுகூலப்படாவிடினும், நாளாவட்டத்தில் ஆங்கிலேயர் மேற்கூரிய ஆசார வழக்கங்களை அனுசரித்து வந்தார்கள். இவருடைய புண்ணிய செயல்களைக் குறித்தும் இவருக்கிருந்த ஞானத்தினாலும், யார்க் என்னும் நகரத்திற்கு மேற்றிராணியாராக நியமிக்கப்பட்டார். 

அத்தேசத்து அரசன் உவில்ப்ரெட்டை இரு முறை அநியாயமாக நாடுகடத்தினான். அர்ச்சியசிஷ்டவரோ சற்றும் கலங்காமல் அந்நாட்டிற்கு போய் அந்நாட்டு அரசனையும் பிரஜைகளையும் சத்திய வேதத்தில் மனந் திருப்பினார். அவ்விடத்திலிருந்து ஆங்கிலேய நாட்டிற்குச் சென்று, கணக்கற்ற அஞ்ஞானிகளுக்கு வேதம் போதித்து ஞானஸ்நானம் கொடுத்தார். 

மழையின்றி பஞ்சத்தால் ஜனங்கள் வருந்துகையில், இவருடைய வேண்டுதலால் பெரு மழை சடுதியில் பெய்தது. இவருடைய அரிதானப் புண்ணியத்தையும் அதிசயமான புதுமைகளையும் கண்ட யார்க் நகரின் கிறீஸ்தவர்கள் உவில்ப்ரெட்டை தங்கள் நகருக்கு வரும்படி ஆசையுடன் மன்றாடியும், அத்தேசத்து அரசன் அதற்கு இணங்காததால், உவில்ப்ரெட் ஒரு சன்னியாச மடத்திற்குச் சென்று, அதில் சகல புண்ணியங்களிலும் ஞானக் கண்ணாடியாய் விளங்கி அர்ச்சியசிஷ்டவராக மரித்தார்.

யோசனை 

நாமும் திருச்சபையில் விலக்கப்பட்ட வழக்கம் மற்றும் ஆசாரங்களை அடியோடு ஒழித்து விடுவோமாக.