அக்டோபர் 13

அர்ச். எட்வர்ட் - அரசர் (கி.பி. 1066) 

இவர் ஆங்கிலேய இராச்சியத்தின் இராஜ புத்திரன். ஆனால் அந்த தேசத்தில் கலகமுண்டாகி அன்னிய தேசத்தார் அத்தேசத்தை அநியாயமாய் கைப்பற்றி ஆண்டதினால், எட்வர்ட் அந்நாட்டை விட்டு பிரான்ஸ் தேசத்திற்கு அடைக்கலம் புகுந்து, தன் உறவினரான ஒரு பிரபுவின் அரண்மனையில் வசித்தார். 

இவர் அவ்விடத்தில் சகல புண்ணியங்களிலும் முன்மாதிரிகையாகப் பிரகாசித்தார். இவருடைய சத்துருக்கள் மாண்டபின் எட்வர்ட் தமது தேசத் தாரால் அன்புடன் வரவழைக்கப்பட்டு, அத்தேசத்தை நீதி நியாயத்துடன் பரிபாலித்து வந்தார். 

பாழடைந்த தேவாலயங்களைச் செப்பனிட்டு புதுக் கோவில்களைக் கட்டுவித்து, அவைகளுக்கு வேண்டிய வருமானங்களை ஏற்படுத்தி பிரஜைகளுக்கு அவசியமான தேச சட்டங்களை உண்டாக்கி சகல ராலும் புகழப்பட்டார். கற்பென்னும் புண்ணியத்தை உத்தமமாய் அனுசரித்து வந்த இவர் தமது பிரபுக்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, புண்ணியவதியான ஒரு பெண்ணை மணமுடித்துக்கொண்ட போதிலும், இவர்கள் இருவரும் சாகும் மட்டும் கூடப்பிறந்தவர்களைப் போல ஜீவித்து வந்தார்கள். 

இவர் தரித்திரர் மட்டில் இரக்கம் வைத்து அவர்களுக்கு ஏராளமான தர்மம் புரிவார். தமது அரண்மனைக்கு வரும் ஏழை எளியவர்களிடம் அன்புடன் சம்பாஷித்து அவர்களுக்குத் தமது கையால் தர்மம் புரிவார். குஷ்டரோகிகளைக் குணப் படுத்தி, குருடருக்குப் பார்வை தந்து மற்ற வியாதியஸ்தரையும் சொஸ்தப் படுத்தினார். 

ஒரு நாள் ஒரு ஏழை இவரிடம் தர்மம் கேட்டபோது அவர் கையில் பணமில்லாததினால் தமது விரலிலிருந்த மோதிரத்தைக் கழற்றிக் கொடுத்தார். இவர் சாகக்கிடக்கையில் முன்பு ஏழையாகத் தர்மம் கேட்ட அர்ச். அருளப்பர் மேற்கூறிய மோதிரத்தை அவருக்குத் திரும்பக் கொடுத்தார். 

இவர் மிகவும் பக்தி வைத்திருந்த அர்ச். அருளப்பர், இவருக்கு அறிவித்த நாளில் பாக்கியமான மரணமடைந்து, மோட்ச முடியை சம்பாதித்துக் கொண்டார். இவர் மரணமடைந்த 36-ம் வருஷம் இவர் சரீரம் அழியாமலிருந்ததுடன், அதினின்று மதுரமான வாசனையும் வீசியது.

யோசனை 

இந்த உத்தம இராஜாவை நாமும் பின்பற்றி கோவிலுக்கும் தேவ ஆராதனைக்கும் தேவையான உதவி புரிவோமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்

அர்ச். பவுஸ்துஸும் துணை. வே.