அக்டோபர் 11

அர்ச். தாராக்குஸும் துணைவரும் - வேதசாட்சிகள் (கி.பி. 304)

தாராக்குஸ், ப்றோபஸ், அந்திரோனிகஸ் என்னும் இந்த மூன்று வேத சாட்சிகளும் வயதிலும் மொழியிலும் வேறுபட்டிருந்தும், விசுவாசத்தால் ஏக மனமுள்ளவர்களாய் உத்தம கிறீஸ்தவர்களாய் வாழந்து வந்தார்கள். 

இம் மூவரும் ஒரு ஊரில் சந்திக்கும்படி நேரிட்டது. இவர்களுடைய நல்லொழுக்கத்தைக் கண்ட சேவகர்கள் இவர்கள் கிறீஸ்தவர்கள் என்று சந்தேகப்பட்டு இவர்களைப் பிடித்து அதிகாரிகளிடம் கொண்டுபோய் விட்டார்கள். 

இம்மூவரும் கிறீஸ்தவர்களென்று அறிந்த அதிகாரி மும்முறை இவர்களை விசாரணை செய்து நயபயத்தைக் காட்டி வேதத்தை விடும்படி முயற்சித்தான். ஆனால் அவர்கள் அதற்கு சம்மதியாமல், வேதத்தில் உறுதியாயிருந்தமையால் அவர்களுடைய வாயில் அடிக்கவும், அலகு எலும்புகளை முறிக்கவும், கண் விழிகளைக் குத்தவும் கட்டளையிட்டான். 

அவர்கள் அதற்கு சற்றும் அஞ்சாமலிருந்ததை அதிபதி கண்டு, சினங்கொண்டு, அவர்களை கொடூரமாய் அடித்து சிறையிலடைத்தான். மறுபடியும் அவர்களை அழைத்துப் பொய் தேவர்களுக்குத் தூபம் காட்டும்படி கட்டளையிட்டான். 

அவர்களதற்கு இணங்காமல் போனதால் மறுபடியும் பலமாய் அடித்து ஒருவருடைய நாவை அடியோடு அறுக்கவும், இன்னொருவருடைய தலைத் தோலை உரிக்கவும், வேறொருவருடைய கண் விழியைக் குத்திப் பிடுங்கவும் சொன்னான். இதனால் வேதசாட்சிகள் முன்னிலும் வேதத்தில் தைரியமாய் இருப்பதை அவனறிந்து அவர்களை துஷ்ட மிருகங்களுக்கு இரையாகப் போடச் சொன்னான். 

பசியால் வருந்திய சிங்கம், கரடி முதலிய துஷ்ட மிருகங்கள் அவர்களுக்கு அற்ப தீங்கும் செய்யாததைக் கண்ட கொடுங்கோலன் கோப வெறிகொண்டு அவர்களை சிரச்சேதம் செய்தான்

யோசனை 

நாம் மெய்யாகவே சர்வேசுரனை சிநேகிப்போமாகில் நெருப்பும், வாளும், துன்பதுரிதமும், வியாதி, தரித்திரமும் அந்த சிநேகத்தை அழிக்க மாட்டாது.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்

அர்ச். கோமெர், து. 
அர்ச். ஏதெல்பர்க், க. 
அர்ச். கென்னி , ம.