ஜுலை 04

அர்ச். ஓதோ, அதிமே(கி.பி. 961) 

பிரபு குமாரனான ஓடோ என்பவர் சிறு வயதில் கிறிஸ்தவ வேதத்தை அறிந்து ஞானஸ்நானம் பெற்றதைக் கேள்விப்பட்ட அவருடைய பெற்றோர் தங்கள் குமாரன் மட்டில் கோபங்கொண்டு, அவரைத் தங்கள் வீட்டினின்று துரத்தி விட்டார்கள். 

ஓடோவின் நற்குணத்தையும் புத்திக்கூர்மையையும் கண்ட ஒரு இங்கிலீஷ் பிரபு இவரைக் கல்லூரிக்கு அனுப்பி உயர்ந்த கல்வி சாஸ்திரங்களைக் கற்கச் செய்தார். பிறருடைய ஆத்தும் இரட்சண்யத்தின் மீது ஆசை கொண்ட ஓடோ குருப்பட்டம் பெற்று ஆத்தும இரட்சண்யத்திற்காக உழைத்து வந்தார். 

மேற்கூறிய பிரபு ஓடோவைத் தமது ஆத்தும் குருவாக நியமித்து அவருடன் சேர்ந்து நாள்தோறும் ஜெபஞ் செய்வார். துரை கடின வியாதியால் சாகக் கிடக்கும்போது ஓடோவால் மந்திரிக்கப்பட்ட இரசத்தைக் குடித்து நொடிப்பொழுதில் சுகமடைந்தார். 

இவருடைய புத்தியையும் பக்தியையும் கண்ட அரசன் இவருக்குத் தன் இராச்சியத்தில் மேலான உத்தியோகம் கொடுத்து கான்டர்பரி நாட்டின் அதிமேற்றிராணியாராகச் செய்தார். விடாமுயற்சியுடனும் ஊக்கத்தோடும் ஓடோ சத்திய வேதத்திற்காக உழைத்து வந்தார். 

அக்காலத்தில் சில கிறீஸ்தவர்கள் தேவநற்கருணை மேல் விசுவாசம் இழந்து சந்தேகப்படுவதை அறிந்து, ஓடோ மகா பக்தியுடன் பூசை செய்கையில் நற்கருணையைப் பிட்கும்போது அதினின்று புறப்பட்ட இரத்தத்தை அவிசுவாசிகளுக்குக் காட்டி, அவர்களை விசுவாசத்தில் உறுதிப்படுத்தினார். 

ஓடோ 90 வயது வரை தமது மேற்றிராசனக் கிறீஸ்தவர்களை நற்புத்தியால் வேதத்தில் ஸ்திரப்படுத்தி, முகத்தாட்சண்யமின்றி குற்றவாளிகளுக்குப் புத்தி புகட்டி, புண்ணியவாளராய் மரித்து மோட்ச இராச்சியத்தில் பிரவேசித்தார்.

யோசனை 

தேவநற்கருணை சத்தியத்தில் நாம் தளராத விசுவாசம் கொண்டு இருப்போமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். யுல்ரிக், மே. 
அர்ச். சிஸோஸ், மு.
அர்ச். பெர்த்தா , வி. 
அர்ச். பின்டார், ம. 
அர்ச். போல்கான், ம..