ஜுலை 05

அர்ச். பீற்றர் - மேற்றிராணியார் (கி.பி. 1387) 

இராயப்பர் அல்லது பீற்றர் என்றழைக்கப்படும் இவர் செல்வந்தர்களின் கோத்திரத்தினின்று பிறந்து சிறு வயதிலேயே அர்ச்சியசிஷ்டவராய் காணப்பட்டார். ஆறாம் வயதில் தமது கற்பை சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுத்து புண்ணிய வாழ்வில் சிறந்து, கல்வி சாஸ்திரங்களைத் திறமையுடன் கற்றறிந்து 15-ம் வயதில் மேற்றிராணியார் பட்டம் பெற்றார். 

இவர் ஏழைகள் மட்டில் கொண்டிருந்த இரக்கத்தால் தம்மிடமிருந்த திரண்ட ஆஸ்தியை எல்லாம் விற்று அவர்களுக்கு கொடுத்தார். ஜெப நேரத்தில் ஒரு சம்மனசு போல காணப்படுவார். திருச்சபையால் குறிக்கப்பட்ட நாட்கள் தவிர வேறு அநேக நாட்களில் சுத்த போசனத்தையும் ஒருசந்தியையும் அனுசரிப்பார். 

இவர் ஒருபோதும் எவ்வித கனமான பாவத்தையும் செய்யாவிடினும் நாள்தோறும் பாவசங்கீர்த்தனம் செய்வார். ஜெப நேரத்தில் இவர் பல முறை பரவசமாவார். இரத்தம் வரத் தம்மை அடித்துக்கொண்டு முள் ஒட்டியானம், மயிர்ச்சட்டை முதலியவற்றைத் தரித்துக்கொள்வார். 

தம்மைத் தாமே இடைவிடாமல் பரித்தியாகம் பண்ணி சரீரமுள்ள ஒரு சம்மனசு போல காணப்படுவார். தேவதாயார் மட்டில் விசேஷப் பக்தி வைத்திருந்தார். இவருடைய அரிதானப் புண்ணியங்களையும் பக்தியையும் கண்ட பரிசுத்த பாப்பரசர் 16 வயதுள்ள அர்ச்.பீற்றருக்கு கர்தினால் பட்டம் கொடுக்கக் கட்டளையிட்டார். 

பீற்றரோ தம்மை முன்னிலும் அதிகமாகத் தாழ்த்தி சகல புண்ணியங்களிலும் ஞானக் கண்ணாடியாய் விளங்கி, அவர் உயிருடன் இருக்கும்போதே அர்ச்சியசிஷ்டவரென்று அழைக்கப்பட்டு, தமது 18-ம் வயதில் அவர் இடைவிடாமல் ஆசித்த நித்திய சம்பாவனையை சுதந்தரித்துக் கொண்டார்.

யோசனை 

நாமும் இந்த புண்ணியவாளரைக் கண்டுபாவித்து பரித்தியாக நாட்ட முள்ளவர்களாய் வாழ்வோமாக.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். மாட்வீனா, க. 
அர்ச். எடானா, க.