ஜுலை 03

அர்ச். போகாஸ் - வேதசாட்சி (கி.பி. 303) 

போகாஸ் தோட்ட வேலை செய்து வாழ்ந்து வந்தார். ஜெபஞ் செய்யாமல் எந்த வேலையையும் தொடங்க மாட்டார். வேலை செய்யும்போது தோட்டத்தைக் கொத்தி அதில் எரு போட்டு தண்ணீர் இறைக்கும்போது சர்வேசுரனைத் தியானிப்பார். 

பொய்ப்புரட்டு, பித்தலாட்டம் முதலிய கெட்டப் பழக்கங்கள் அவரிடத்தில் இருந்ததில்லை. ஏழை எளியவர்களுக்கு வேண்டிய தர்மம் செய்வார். வழிப்போக்கருக்கு தங்க இடம் கொடுத்து அன்புடன் அவர்களை உபசரிப்பார். இவருடைய தர்ம குணத்தை அவ்வூரார் மாத்திரமல்ல, தொலைவில் உள்ள ஊர் மக்களும் தெரிந்துகொண்டார்கள். 

அக்காலத்தில் வேத கலகம் உண்டானதினால் ஏராளமான விசுவாசிகள் இரத்தஞ் சிந்தி வேதசாட்சியானார்கள். போகாஸுடைய அரிதான தர்ம நடத்தையைப்பற்றிக் கேள்விப்பட்ட அரசாங்கம், இவ்வளவு முன்மாதிரிகையான குணமுள்ளவன் கிறீஸ்தவனாக இருக்க வேண்டும் என்று எண்ணி சில சேவகரை இவர் இருந்த ஊருக்கு அனுப்பி எவ்வித விசாரணையுமின்றி அவரைக் கொல்லும்படி கட்டளை இட்டது. 

சேவகர் போகாஸ் வீட்டிற்குப் போய், அவர் யாரென்பதை அறியாததினால், போகாஸ் என்பவரைத் தங்களுக்கு காட்டும்படி கேட்டார்கள். அவர் அதற்கு, நல்லது, அவரைக் காட்டுகிறேன், நீங்கள் சாப்பிட்டு இளைப்பாறுங்கள் என்று கூறி அவர்களுக்கு நல்ல விருந்திட்டு வெகு நேரம் ஜெபத்தில் செலவழித்தபின், நான் தான் போகாஸ்; இராஜக் கட்டளைப்படி என்னைக் கொல்லுங்கள் என்றார். 

அவர்கள் இப்பேர்ப்பட்ட தர்மவானைக் கொல்ல மனமில்லாத போதிலும், போகாஸின் ஆசைக்கிணங்கி அவர் தலையை வெட்டினார்கள்.

யோசனை 

நாம் எந்தக் காரியத்திற்காகவும் பொய் சொல்லக் கூடாது.

இத்தேதியில் வரும் வேறு திருநாட்கள் 

அர்ச். குதகன், வ. 
அர்ச். குந்தியான், ம. 
அர்ச். பெர்ட்ரான், மே.