பரிசுத்த வியாகுல மாதாவிடம் ஜெபம்!

 ஜூன் 5, 1943

சிலுவையடியில் எங்களை உம் மக்களாக ஏற்றுக்கொண்ட மரியாயே, எங்கள் கடவுளும், சகோதரருமான சேசுவின் திருமாதாவும், எங்கள் தாயுமான மரியாயே, உமது பிள்ளைகளின் குரலைக் கேட்பீராக.

ஓ எங்கள் மாதாவே, உம் திருமகன் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருப்பதும், உம் திருக்குழந்தையானவர் மரிக்கிறதைக் கண்டு உம்முடைய இருதயம் கிழிக்கப்பட்டிருக்க, நீரும் கடும் அவஸ்தைப் பட்டுக் கொண்டிப்பதுமான சிலுவையின் அடிவாரத்திற்கு நாங்கள் மிகுந்த சிரமத்தோடு ஏறி வருகிறோம். மரியாயே எங்களைப் பாரும். உம் திருமகனின் திரு இரத்தம் எங்கள் எல்லோர் மீதும் தெளிக்கப்படுகிறது. அவர் எங்களுக்கு வாழ்வும், இவ்வுலகிலும், மறுவுலகிலும் எங்களுக்கு சமாதானமும் தருவதற்காக, எங்களுக்காகவே மரித்தார். உம் திருமகனின் போதனைக்கு எதிர்த்துக் கலகம் செய்பவர்களாக வாழ்ந்ததால் நாங்கள் இழந்துபோன வாழ்வையும், நித்திய மீட்பையும், சமாதானத்தையும் மீண்டும் பெற்றுக்கொள்வதற்காக, எங்கள் நித்திய மீட்பின் அஸ்திவாரக் கல்லாயிருக்கிற உம்மை நோக்கித் திரும்புகிறோம்.

ஆம், இப்போது எங்களைத் தாக்குகிற வாதைக்கு நாங்கள் முற்றும் தகுதியுள்ளவர்கள் என்பதை அறிந்திருக்கிறோம். அனை வரிலும் அதிகத் தாழ்ச்சியும், பூரண பரிசுத்ததனமும் உள்ளவரா யிருந்த தேவரீரைப் போல நாங்களும் இருக்கும்படி இதை நாங்கள் தாழ்ச்சியோடு ஒப்புக்கொள்கிறோம். ஆனாலும், மாதாவே, தேவரீர் மாசற்றவராயிருந்தது மட்டுமின்றி, இரக்கமுள்ளவராகவும் இருக் கிறீர். ஆகவே, இரக்கமானவரையே இவ்வுலகிற்குக் கொண்டு வந்த மரியாயே, எங்கள் பேரில் இரக்கமாயிரும்.

எங்களைக் காப்பாற்றும் மரியாயே, எதிரியின் கடுங்கோபத்தினின்று எங்களைக் காப்பாற்றும்!

எங்கள் ஆலயங்களையும், எங்கள் இல்லங்களையும், உம்மைத் தனது இராக்கினியாகவும், பாதுகாவலியாகவும் ஏற்றுக்கொள்ளும் இந்த நகரத்திலுள்ள ஆலயங்களையும், வீடுகளையும் பாதுகாத்தருளும்.

சமுத்திரத்தின் நட்சத்திரமே, கடலின் ஆபத்துக்களிலிருந்து நீர் மிக அடிக்கடி பாதுகாத்து வந்திருக்கிற எங்கள் மக்களைக் காப்பாற்றும்.

உம் திருப்பாதங்களை வணங்கி நிற்கிற எங்கள் எல்லோரையும் காப்பாற்றியருளும்; நோயின் காரணமாக இப்போது இங்கே எங்களோடு இருக்க முடியாதவர்களும், தங்கள் ஆத்துமங்களோடும், தங்கள் துன்பத்தோடும் இங்கே இருப்பவர்களுமாகிய மக்களைக் காப்பாற்றும்.

தங்கள் பிடிவாதமுள்ள சித்தத்தால் இங்கு வராதிருக்கிற வழி தவறியவர்களும், அனைவரிலும் அதிக நிர்ப்பாக்கியருமாகிய உம் குழந்தைகளின் மீது இரக்கமாயிருந்து, அவர்களைக் காப்பாற்றும். ஏனெனில் நித்திய சத்தியமாகிய உம் திருமகனை இழந்து போன தால், ஒளியையும், வழியையும், ஜீவியத்தையும் அவர்கள் இழந்து போயிருக்கிறார்கள்.

ஓ மரியாயே, எங்கள் ஜெபங்களைக் கொண்டு, உமது இரக்கமுள்ள திரு இருதயத்திற்குள் ஊடுருவும்படியாக, இதோ நாங்கள் மனக்கசப்பு, கெடுமதி, பழிவாங்கும் உணர்வு, மற்றவர்கள் எங்களிடம் இருப்பது போலவே, நாங்களும் அவர்களிடம் கொடூர மானவர்களாக இருக்க வேண்டும் என்ற பழிவாங்கும் உணர்வு ஆகியவற்றை எங்களிடமிருந்து அகற்றி விடுகிறோம். இவ்வேளை யில், நாங்கள் அனைவரும் பிதாவினால் சிருஷ்டிக்கப்பட்டோம் என்பதையும், நாங்கள் அனைவரும் திருச்சுதனாகிய சர்வேசுர னுடைய சகோதரர்கள் என்பதையும், நாங்கள் அனைவரும் இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரனால் நேசிக்கப்படுகிறோம் என்பதையும் நினைவுகூர்கிறோம். இவ்வேளையில் எங்கள் பொருட்டு வேதசாட்சியாக மரித்த உம்முடைய திருக்குமாரன் சேசுநாதருடைய, ""பிதாவே, இவர்களை மன்னியும்'' என்ற ஜெபத்தை நினைவுகூர்கிறோம். நாங்களும் கடவுளால் மன்னிக்கப் படும்படியாகவும், உம்மால் இரட்சிக்கப்படும்படியாகவும் எல்லோருக்காகவும், எல்லோருக்கும் மேலாகவும் இந்த ஜெபத்தைச் சொல்கிறோம்.

மரியாயே வாழ்க! வியாகுல வாளால் குத்தித் திறக்கப்பட்ட உம்முடைய மாசற்ற இருதயத்திலிருந்து இரட்சணியத்தின் வரப்பிரசாதத்தை எங்கள் மீதும், எங்கள் நாட்டின் மீதும், மோட்சத்தின் மீதான பார்வையை இழந்தபின் சிதைவுகளுக்கு மத்தியில் மரித்துக் கொண்டிருக்கிற முழு உலகத்தின்மீதும் அனுப்புவீராக.

அர்ச். மரியாயே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். இரத்தம் சிந்துவதன் மூலம் கடவுளின் திருச்சித்தம் எங்களில் நிறை வேற வேண்டியிருக்குமானால், ஓ மரியாயே, நாங்கள் கடவுளின் நித்திய மகத்துவப் பேரொளிகளின் மத்தியில் உம்மைக் காணும்படி யாகவும், உமக்கு நன்றி கூறும்படியாகவும், எங்கள் மரண வேளையில் எங்கள் அருகில் இருப்பீராக. 

ஆமென்.


தூத்துக்குடி சகோ.ரோஜர் மொந்த்தினி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்...