ஏழாம் வேத கலாபனை. காலம் : கி.பி. 249 - 251.

நடத்தியது : உரோமைச் சக்கரவர்த்திடேஷியஸ். 
காலம் : கி.பி. 249 - 251.

"என் முன்னோர் கிறீஸ்தவத்தை அழிக்க எத்தனையோ முயற்சிகளைச் செய்தனர். அது இன்னும் அழியவில்லை. ஆனால் அவர்கள் கையாண்ட அத்தனை கொடுமைகளையும் நான் கையாளுவேன். அது அழிகிறதா இல்லையா பார்க்கிறேன்'' என்று சபதம் கூறினான் உரோமைக் சக்கரவர்த்தி டேஷியஸ்.

அவன் அதிகார பீடமேறியதும் முதல் வேலையாக உரோமை சாம்ராஜ்யமெங்கும் கிறிஸ்தவத்தை வேருடன் பிடுங்கி எறியுமாறு ஆணையிட்டான்.

சிறையில் வதைத்தல், பிரம்பு, சாட்டை முதலியவற்றால் அடித்தல், நெருப்பிலிட்டு வாட்டுதல், கொடிய விலங்குகளுக்கு இரையாகப் போடுதல், கொதித்த இளகிய தார் எண்ணெய்க்குள் அமிழ்த் துதல், பழுக்கச் சிவந்த இரும்பி இடுக்கிகளால் பிடுங்குதல், இன்னும் இரக்கமற்ற கொடிய வாதைகள் அனைத்தையும் கிறிஸ்தவர்களுக்குச் செய்யும்படி கட்டளையிட்டான்.

சித்திரவதையைப் பொறுக்க இயலாத பல கிறீஸ்தவர்கள் கிறிஸ்துவை மறுதலித்தனர். ஆனால் இன்னும் மிகப் பலர் தேவ வரப்பிரசாதத்தின் பலத்தைக் கொண்டும், திவ்விய நற்கருணையின் திடத்தைக் கொண்டும் எல்லாக் கொடிய வேதனைகளையும் தாங்கி உயிரையும் பலியாக்கி வேதசாட்சிகளாகி அழியாத நித்திய பேரின்பத்தை அடைந்தனர்.

இந்த ஏழாம் வேத கலகத்தில் அர்ச். பயியான் - என்ற பாப்பரசரும், ஜெருசலேம் மேற்றிராணியாரான அர்ச். அலெக்சாந்தரும், அந்தியோக்கியா ஆயரான அர்ச். பாபிலாஸ் என்பவரும் மிகச் சிறந்த வீர வைராக்கியமுடன் விசுவாசத்தைக் காப்பாற்றினர். தங்கள் மந்தைக்குச் சிறந்த முன்மாதிரிகையாக விளங்கினார்கள்.

இந்த வேத கலகத்தில் கிறீஸ்தவன் ஒருவனை பழுக்கக் காய்ந்த உலோகத் தகடுகளால் உடலை முழுவதும் சுட்டபின் பின்கை கட்டி உடல் முழுவதும் திறந்த காயத்தில் தேனை ஊற்றி, கடும் வெயிலில் நிறுத்தியும், தேனீக்களும், குளவி, கடந்தை போன்ற பூச்சிகளும் கொட்டும்படி செய்தும் கொடுமைப் படுத்தினார்கள் வேத விரோதிகள். ஆயினும் அக்கிறீஸ்தவ வேதசாட்சியின் விசுவாசம் சற்றும் தளரவில்லை !

மேலும் உரோமைச் சிறையிலிருந்து அர்ச் சிப்பிரியான் என்பவருக்கு மரணத்தை எதிர்பார்த்திருந்த கிறிஸ்தவர்கள் சிலர் எழுதிய கடிதம் அவர்களுடைய உறுதியையும் கிறிஸ்துநாதர் மேல் அவர்கள் கொண்டிருந்த அசைக்க முடியாத அன்பையும் எடுத்துக் காட்டுகிறது

''வேதனைகளுக்கும் சித்திரவதைகளுக்கும் நடுவில் கடவுளுடைய வரப்பிரசாதத்தினால், சேசுகிறீஸ்துவை அறிக்கையிட எங்களுக்குக் கிடைத்திருக்கும் பாக்கியத்தை விட மேலான பாக்கியம் என்ன உள்ளது? சர்வேசுரனுடைய திருக்குமாரனை, கிழிக்கப்பட்ட உடல்களோடும், மரண அவஸ்தையிலும் சுயாதீனமும், வெற்றியும் கொண்ட ஆன்மாக்களோடும் அறிக்கையிடுகிறோமே! இதனினும் சிறந்த சம்பாவனை எது?

இச்சிறையிலிருக்கும் நாங்கள் இன்னும் எங்கள் இரத்தத்தை ஆண்டவருக் காகச் சிந்தவில்லை. ஆனால் அப்படிச் செய்ய நாங்கள் தயாராயிருக்கிறோம். ஆதலால் ஆண்டவர் எங்களை மென்மேலும் உறுதிப்படுத்தும்படி எங்கள் ஒவ்வொருவருக்காகவும் மன்றாடுங்கள்...''

கிறீஸ்தவம் அழிகிறதா இல்லையா பார்க்கிறேன் என்ற டேஷியுஸ் 25ல் காத்ஸ் என்பவர்களால் கொல்லப்பட்டான். உலகமெங்கும் வேதகலாபனைகள் மூளும், மாளும். ஆனால் வேதமோ உலகமுள்ள வரைக்கும் வாழும்!