ஆறாம் வேத கலாபனை. காலம் : கி.பி. 235 - 238.

நடத்தியது : உரோமைச் சக்கரவர்த்தி மாக்ஸிமின். 
காலம் : கி.பி. 235 - 238.

6- வது வேத கலாபனையில் விளங்கிய அர்ச். ஜூலியன், அர்ச். பசலீயம்மாள் ஆகிய இருவரின் அபூர்வமான வாழ்க்கையையும், வேதசாட்சியத்தையும் இங்கு சுருக்கமாகக் கூறுவோம்.

மாக்ஸிமின் சக்கரவர்த்தியின் காலத்தில் கிறீஸ்தவர்களின் தொகை அதிகரித்திருந்தது. ஆகவே வேதத்துக்காக அவர்களைக் கொலை செய்தால் உரோமை சாம்ராஜ்யத்தின் ஜனத்தொகை குறையக்கூடும் என்று அவன் கருதினான். ஆயினும் சத்திய வேதம் பரவாமல் தடுக்கும்படி வேதத் தலைவர்களான மேற்றிராணிமார், குருக்கள், துறவிகள் ஆகியோரைப் பிடித்துக் கொல்வதில் அவன் கவனம் செலுத்தினான்.

அபூர்வத் தம்பதிகள் அக்காலத்தில் அந்தியோக்கியா பட்டணத்தில் ஜூலியன் என்ற கிறீஸ்தவ இளைஞர் ஒருவர் இருந்தார். அவர் தம் தந்தையின் போதனையின்படி புண்ணிய வாழ்வில் ஈடுபட்டார். தம் புண்ணிய வாழ்வுக்குப் பங்கம் நேரிடாதபடி தான் திருமணம் செய்வதில்லை என்று விரத்தத்துவ வார்த்தைப் பாடும் கடவுளுக்குக் கொடுத்தார்.

ஆனால் அவருடைய பெற்றோர் தங்கள் பிற்கால வாழ்வை எண்ணி, அவர் திருமணம் செய்யுமாறு கட்டாயப்படுத்தினார்கள். ஜூலியன் கடவுளை மன்றாடினார். அதன் பலனாக அவர் தம் விரத்தத்துவ வார்த்தைப்பாட்டைத் திருமண வாழ்விலேயே நிறைவேற்றும் வாய்ப்பு அளிக்கப்பட்டார். அது எப்படியென்றால்:

அவருக்கும் பசலீசம்மாள் என்ற நற்குணவதிக்கும் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்ததும் ஜூலியன் பசலீசம்மாளுக்குச் செய்த உபதேசத்தால் அவளும் மனம் மாறி, இருவரும் உடன்பிறந்தவர்களைப் போல் வாழ ஒப்புக்கொண்டார்கள். அப்பொழுது ஒரு பரலோகக் காட்சியும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. தங்கள் தீர்மானத்தில் அவர்கள் உறுதி கொண்டார்கள்.

ஜூலியனின் பெற்றோர் இறந்தபின் இவ்விருவரும் தங்கள் சொத்துக்களை ஏழைகளுக்குப் பங்கிட்டுக் கொடுத்து விட்டு, ஜூலியன் தம்மைப் பின் சென்ற சந்நியாசிகளுக்கு அதிபராகவும், பசலீஸ் அம்மாள் தன்னைப் பின்தொடர்ந்த அநேக கன்னியர்களுக்குத் தலைவியாகவும் சமாதானமாய்ப் பிரிந்து சென்றார்கள்.

அப்பொழுது சக்கரவர்த்தியான மாக்ஸிமின் 6-ம் வேதகலாபனையைத் தொடங்கினான்.

அக்கலாபனை அடங்குமாறு இவ்விருவரும் மன்றாடினார்கள். அப்போது நமதாண்டவர் பசலீசம்மாளுக்குத் தோன்றி அவள் தன் மரணத்துக்கு ஆயத்தம் செய்ய வேண்டுமென்றும், ஜூலியன் வேதசாட்சியாக மரிக்கப் போகிறார் என்றும் அறிவித்தார். அதன் படியே பசலீசம்மாள் நல்ல மரணமடைந்து கன்னியர் முடி பெற்றாள்.

ஜூலியன் பட்டணத்தின் அதிகாரியால் கைது செய்யப்பட்டு வேதத்தை மறுதலிக்கும்படியாக நிஷ்டூரமாய் அடிக்கப்பட்டார். ஆனால் ஜூலியன் எவ்வித வேதனைக்கும் பயப்படவில்லை. அவரை அடித்த சாட்டை அருகில் இருந்த சேவகன் ஒருவனின் கண்ணில் பட்டு அக்கண் குருடாயிற்று. ஜூலியன் குருடான கண்ணைக் குணப்படுத்திப் பார்வையடையச் செய்தார். உடனே அச்சேவகன் தானும் கிறீஸ்தவன் என்று அறிவித்து அதற்காகக் கொல்லப்பட்டான்.

நகர அதிகாரி இதனால் கோபமடைந்து வெறி கொண்டு ஜூலியனைத் தெருத் தெருவாய்க் கட்டி இழுத்து வரச் செய்தான். அதை வேடிக்கை பார்க்க சிறுவர்கள் கூடினர். அந்த அதிகாரியின் மகனும் அதில் இருந்தான். அவன் பெயர் செல்ஸ்,

இந்தப் பையனின் கண்களுக்கு ஓர் அற்புதம் காணப்பட்டது. தெருவில் கட்டி நடத்திக் கொண்டு போகப்பட்ட ஜூலியனைச் சுற்றி அநேக சம்மனசுக்கள் இளைஞர்களின் உருவத்தில் புடை சூழ்ந்து போவதை அவன் கண்டான். அந்த இடத் திலேயே அவன் ஜூலியனை அணுகி, ''நானும் கிறீஸ்தவனாகிறேன். எனக்கு ஞானஸ்நானம் தாரும்" என்று கேட்டான்.

அதிகாரி இதை அறிந்து கோபம் கொண்டு தன் மகன் என்றும் பாராமல் செல்ஸை மற்றவர்களுடன் சிறையில் தள்ளினான். சிறையில் செல்ஸ்-க்கு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது.

அதிகாரி தன் மகனுக்குப் புத்தி சொல்ல தன் மனைவியை அனுப்பினான். ஆனால் மகனின் நற்புத்தியைக் கேட்ட தாயும் மனந்திரும்பி ஞானஸ்நானம் பெற்றாள்! இறுதியில் தாயும் மகனும் ஜூலியனோடு வேதசாட்சிகளாய்க் கொல்லப் பட்டார்கள்.