அக்டோபர் 15

காணாமல் போன கர்த்தரை தேவாலயத்தில் கண்டடைதல்.

எருசலேம் தேவாலயத்துக்கு - தேவாலயம் யூதர்களுக்கு ஒன்று தானே - வருடம் மும்முறை யூத ஆண்மக்கள் போக வேண்டியவர்கள் . தூர தேசங்களில் உள்ளவர்கள் சாதாரணமாய்ப் பாஸ்கா பண்டிகைக்குத் தான் போவார்கள் .

பெண்கள் போவது கட்டாயம் இல்லாவிடினும் பக்தியின் நிமித்தம் பலர் செல்வது வழக்கம் . இயேசுநாதருக்குப் பன்னிரண்டு வயதானபோது எவ்வாண்டும் போல் இவ்வாண்டும் சேசு மரி சூசை மூவரும் எருசலேம் சென்று ஏழு நாள் தங்கின பின் திரும்பினர். ஏராளமான கூட்டம். திரும்புகையில் பெண்கள் தனித்தும், ஆண்கள் தனித்தும் போவது மரபு . இரவு தங்கும் இடத்தில் குடும்பம் குடும்பமாய்ச் சந்திப்பர். இயேசுநாதர் வேண்டுமென்றே இச்சமயம் வீட்டிற்குத் திரும்பாமல் ஆலயத்தில் தங்கி விட்டார் . தாயோடு மகன் வழக்கம் போல் போயிருப்பான் என்று சூசையப்பர் நினைத்துக் கொண்டார் . இயேசுவுக்குப் பன்னிரண்டு வயதாகி ' சட்டத்தின் குமாரன் ' ஆகி விட்டபடியால் தந்தையோடு போயிருப்பான் என்று கன்னித்தாய் கருதினாரா, அல்லது தன்னையும் தன் குடும்பத்தையும் மறந்து பக்திப் பரவசத்துடன் ஈடுபட்டவராய்ச் சென்றாரா ? என்னவானாலும் மாலை குடும்பம் குடும்பமாய்ச் சந்தித்த போது சூசையும் மரியும் இயேசுவைக் காணவில்லை  அவர்கள் மன உலகில் வானமே இருண்டு உருண்டது ; கோரப் புயல் வீசியது ; கவலை , கலக்கம் , வேதனை அவர்கள் உள்ளத்தைப் பிழிந்தெடுத்தன.

புலிவாய் பட்ட புருவையின் நெஞ்சம் நின்று விடுவது போல அவர்கள் இதயமும் நின்று விட்டதா ? சோகப் பெருக்கினால் என்ன செய்வது என்று அறியாமல் திகைத்துப் போய் சில நிமிடம் நின்றனர் . . தாயின் கண்ணீர் ஆறாய்ப் பிரவாகமெடுத்து ஓடியது . ' என் செய்வோம் ? என் செய்வோம் ? ' அங்கு தங்கிய கூட்டங்களில் எல்லாம் போய் தேடினர் . ஒவ்வொருவரையும் விசாரித்து வாடி வதங்கினர். எங்கு போய்த் தேடுவது என்று ஏங்கினர். தாம் பிறந்த பெத்லகேம் குகையைத் தேடிப் போயிருப்பாரோ ? தன் முன்னோடியான ஸ்நாபக அருளப்பரைத் தேடிப் போயிருப்பாரோ ? அங்கு போய்த் தேடலாம் என்று மாமரி நினைத்தாரா ?கொலைகார யூத அரசனான வஞ்சகன் பாலனைத் தூக்கிப் போய் விட்டானோ ? அவரை எவ்விதம் மீட்பது என்று அவர்கள் உள்ளம் அச்சத்தினால் அலைபாய்ந்தது . உள்ளத்தில் ஒலித்த சப்தத்துக்கிணங்கி எருசலேம் ஏகுகின்றனர் . இரவு , பயங்கரமான பாதை , தனியே இருவரும் துக்கமே உருவெடுத்து நடக்கின்றனர்

மறுநாள் முழுதும் எருசலேம் வீதிகளில் எல்லாம் சுற்றித் தேடி வருகின்றனர் . அன்று மாலை சங்கதி எட்டுகிறது. எங்கும் விசாரித்தார்கள் அல்லவா? ஒரு பெண் மகள் சொல்லுவாள் : "அம்மா ! உம் சாயலே தான் . அழகு சிந்தும் ஒரு பையன் , தேனினும் இனிய மொழியில் 'எனக்கு ஒரு வாய் அன்னம் கொடு' என்று நேற்று மதியம் கேட்டார். என் இல்லம் தங்கச் சொல்லி கெஞ்சினேன் . எனக்கு வேலை இருக்கிறதென்று போய் விட்டார் . அவர் என் இல்லம் வந்தபோது சூரியனே வந்தது போல் என் வீடு பிரகாசித்தது . அவர் போனவுடனே என் வீடு இருளடைந்தது " .

இன்னொரு நங்கை " அன்றலர்ந்த ரோஜா போல அழகு கொழிக்கும் சுந்தர வடிவன் நேற்று மாலை என் வீட்டு வாசல் வந்து அன்னம் இரந்தான். கல்லையும் கரைக்க்கக்கூடிய அவரது மலர் விழிப் பார்வையை என்னென்று இயம்புவது ? அந்தக் கண்ணின் சுந்தர சோதியை ஒரு முறை பார்க்க உலகையே விற்றுக் கொடுக்கலாம்" . தாயின் உள்ளத்தில் என்ன வேல் வீச்சு ! என் அருமைக் குழந்தை பசியால் நைந்து தெருத்தெருவாய் அலைந்து திரிந்திருக்கிறதே என்ற விசனம் ஒருபக்கம் . அவர் பெருமையைக் கேட்டு பூரிப்பு மறு பக்கம் . அனாதைசாலை ஒன்றில் உள்ள இரு சிறுவர்கள் " இன்று பகல் எங்களிடம் ஒரு செல்வன் வந்தான். அவன் கை நிறையப் பண்டம் . எங்களுடைய கண்ணில் தெரிந்த ஆசையைக் கண்டு , எங்களை அண்டி, எங்களுக்கு அவைகளைப் பரிமாறிப் போனார் . அவர் சம்மனசோ என்று நாங்கள் நினைத்தோம் " மகனின் பெருமையைக் கேட்கக் கேட்க துக்கத்தில் இருந்த மாமரிக்கும் சூசைக்கும் மகிழ்ச்சிக் கமலம் மலர்ந்தது .பக்திப் பரவசமான பலர் இவ்விதம் எழுதி வைத்தனர்

தேவாலயத்தை தரிசிக்க வேண்டும் என்பது மூன்றாம் நாள்  இவர்கள் உள்ளத்தில் ஓர் எண்ணம் . ஒரு பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் ஒரு பெருங்கூட்டம் . அங்கு சென்றனர் . அறிஞர்களும் பெரியார்களும் சிறுவர்களும் நின்று கவனமாய்க் கேட்டுக் கொண்டிருந்தனர் . ஆசனத்தில் சில சட்ட நிபுணர்கள் ; அவர்கள் மத்தியில் திவ்விய இயேசு . அவர் வாயிலிருந்து வரும் அமுத வெள்ளத்தைத் தான் அனைவரும் பருகிக் கொண்டிருந்தனர் . " என்ன ஞானமுள்ள குழந்தை " , " இவர் யார் பெற்ற பிள்ளை " " வானமே வடித்தெடுத்தார்ப் போன்ற பிள்ளை " என்று பலர் சொல்லிக் கொண்டிருந்தனர் . கன்னித்தாய்க்கும் கைத்தாதைக்கும் என்ன ஆச்சரியம் ! எவ்விதம் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிப் போயிருக்க வேண்டும் .

முதிர்ந்த பலமுள்ள ஏலியாஸ் போற்றிய சிறுவன் சாமுவேலும் ,யூதத்திரளை நிறுத்தி வைத்த செல்வன் தானியேலும் , தாயே உம் ஞாபகத்திற்கு இச்சமயம் வந்தனரா ? புண்ணியவாளரான சூசை , சில நாட்களுக்கு முன் எலிசபெத்தும் , சம்மனசுக்களும் , சிமியோனும் , அந்நாளும் , மூவரசரும் உமது மகனுக்கு அளித்த சாட்சியைக் கேட்டு சூசை தந்தாய், பரவசமானீரே; இன்று இயேசுவே தமக்குச் சாட்சியம் சொல்லுகிறார் . மக்கள் திரளும் அவர் பாதம் மடிந்து கிடப்பதைக்காண உமக்கும் நேசத்தாய்க்கும் எத்தனை பூரிப்பு ! தெய்வீகத்தின் ஞானமல்லவா பிடிவாதங்கொண்ட கர்விகளான இப்பரிசேயரின் மனத்தையும் கவர்கிறது?

இயேசு பெற்றோரைக் கண்டார். தாயிடம் தாவி வந்தார். மூன்று நாள் அங்கலாய்த்த மனம் இவ்வளவு சீக்கிரம் ஆறி விடுமா ? " மகனே , ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தீர் ? இதோ நானும் உம்முடைய தந்தையும் துக்கித்து உம்மைத் தேடினோமே " என்று தேவதாய் குழைந்து மொழிந்தார் . பட்டென்று பதில் வந்தது . " நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள் ? நான் என் பிதாவின் காரியங்களில் அலுவலாயிருக்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியாதா? "

மெய்தான் , இரவும் பகலும் ஒவ்வொரு வினாடியும் இயேசுவின் அலுவல் தேவ பிதாவை மகிமைப்படுத்துவதும் மனிதர் ஈடேற்றத்தை நிறைவேற்றுவதுமாம் . நம்முடைய அலுவலும் அதுதான் என்பதை நாம் மறந்தே போகிறோம் . அர்ச் சூசையப்பர் வளர்ப்புத் தந்தை . தாம் தேவ குமாரன் என்று தெளிவாய் நமக்கெடுத்து ஓதுகிறார்.

சிலுவையில் "பிதாவே , பிதாவே ஏன் என்னைக் கைவிட்டு விட்டீர் " என்று இயேசு புலம்பியபோது அவரது உள்ளத்தில் எவ்வளவு துக்கம் நிறைந்ததோ , அவ்வளவு துக்கம் மரியின் உள்ளத்தில் "ஏன் என்னைத் தேடினீர்கள் ?" என்று இயேசு கேட்டபோது பாய்ந்தது .

எனினும் இயேசு அவர்கள் கூடச் சென்று இன்னும் பதினெட்டு ஆண்டுகள் அவர்களோடு வசித்தபோது ஒவ்வொரு நிமிடமும் மரிக்கு என்ன மகிழ்ச்சி ? இப்பூவுலகில் புனிதர்களுக்கும் இன்பமும், துன்பமும் உண்டு . எனினும் துன்பத்தில் தான் இன்பம் பூத்துக் குலுங்குகிறது

சரிதை.

முன் கூறியது போல முத் ஆலன் ரோச் , செபமாலையைப் பேய் பிடித்தவர்கள் கழுத்தில் போடுவதனால் அநேகரிடமிருந்து பேயை ஓட்டியிருக்கிறார் . அதற்கு ஓர் எடுத்துக்காட்டு : பேய் பிடித்த ஒரு மனிதன் பற்பல பக்தி முயற்சிகள் வழியாக தன்னிடமிருந்த பேயைத் துரத்தப் பார்த்தான் . பேய் போனபாடில்லை . இறுதியில் செபமாலையைத் தரித்துப் பார்ப்போமே என்று அதைக் கழுத்திலிட்டான். அவனுக்குக் கொஞ்சம் ஆறுதல் ஏற்பட்டது . ஆதலால் இரவும் பகலும் அதைத் தரித்திருந்தான் . பேய்க்கு இது பெரிய சங்கிலி போல இருந்தது . அதன் பாரத்தைத் தாங்க முடியாமல் ஓடி விட்டது

செபமாலையைச் செய்வதால் மட்டுமல்ல . செபமாலையை நம் கூடவே வைத்திருப்பதாலும் பேயின் சற்பனைகளுக்குத் தப்பித்துக் கொள்ளலாமே . வேறு பல ஆபத்துக்களிளிருந்தும் செபமாலை அன்னை நம்மைக் காப்பாற்றுகிறார். ஆதலால் தான் எங்கிருந்தாலும் எங்கு போனாலும் செபமாலையை தன் கூடவே வைத்திருப்பதற்கும் திருச்சபை பலன்களை அளித்திருக்கிறது . செபமாலை மாதா சபையில் சேர்ந்தவர்கள் செபமாலையைத் தங்கள் மேலே வைத்திருந்தால் ஒவ்வொரு நாளும் பலன் அடையலாம்.

செபம்.

இழந்த மகனைத் தேடிய மாமரியே , உம் வழியாய்க் குழந்தை இயேசுவை எப்பொழுதும் தேடிக் கண்டடையும் பாக்கியம் எங்களுக்குக் கிட்டுவதாக . எல்லாக் குழந்தைகளிடத்தும் , குழந்தைகளுக்குரிய தேவைகளாலான வயோதிகர் , வியாதிக்காரர் , நாதியற்றவர்கள் , கபடற்றவர்கள், தனிமையின் துன்பத்தில் மிதக்கிறவர்கள் ஏழை எளியவர்களிடத்திலும் இயேசுவைக் காண உதவி செய்யம்மா .

எம் உள்ளத்திலே இயேசுவைக் காணும் வண்ணம் நாங்களும் சிறு குழந்தைகள் ஆவோமாக. செபமாலை இராக்கினியே , இயேசுவை எங்கு கண்டு பிடிப்போம் ? உம்மிடத்தில் தானே அவரைக் கண்டு பிடிக்க முடியும் . பிரமாணிக்கமாய்த் தேவ இரகசியங்களை தியானித்து செபமாலை செய்து வருவதனால் இயேசுவை உம்மிடம் எப்போதும் கண்டு மகிழ எங்களுக்கு உதவி செய்யும்.

ஆமென்.