அக்டோபர் 16

கர்த்தர் பூங்காவனத்தில் இரத்த வேர்வை வியர்க்கிறார்.

இந்த இரகசியத்தில் ஆண்டவர் வேதனை சாகரத்தில் மூழ்குகிறார். மரணமட்டும் அது நீடிக்கும் . பாடுகளின் ஒவ்வொரு சிறு அம்சமும் எப்போதும் அவர் வாழ்நாள் முழுவதுமே அவர் நினைவில் நின்றது . எனினும் நமது படிப்பினைக்கும் நலனுக்கும் அக்கசப்பான பாத்திரத்தின் சகிக்கொணாத தன்மையை முதல் முதல் கண்டது போல நமக்கு இங்கு காட்டச் சித்தமானார் . இயற்கையாய் எழும்பும் பயத்தையும் , நடுக்கத்தையும் தம் மனித சுபாவம் உணரச் சம்மதித்து , அதன் கோரத்தை விம்மலிலும் வேண்டுதலிலும் வெளிப்படுத்துகிறார் ; என்ன மனோ வேதனை !

ஒரு பெரிய கத்தோலிக்கரல்லாத உத்தியோகஸ்தர் புத்திக்கூர்மையுள்ளவர்; நேர்மையாளர் ; ஒரு நாள் கடின வியாதிக்கு ஆளானார் . சரீர வாதனையை விட இந்நோயால் அவருக்கு ஏற்பட்ட மனோவாதனை அதிகம் . இதை எழுதுகிற ஒருவரிடம் ," சுவாமி இந்த தாங்கொணா மனோவேதனையால் என்ன இலாபம் ?" என்று கேட்டார். அவர் கத்தோலிக்கராக இருந்தால் எவ்விதம் கடவுள் இவ்வாதனையை மனிதனுடைய ஈடேற்றத்திற்குப் பயன்படுத்துகிறார் என்று இக்காட்சியைச் சித்தரித்திருக்கலாம் . மனோ வாதனையின் இலாபத்தை இயேசு இங்கு காட்டுகிறார் . கிறிஸ்தவர்கள் அதை அறிய வேண்டும்

"இயேசு நமக்காகப் பாவம் ஆனார் " என்று துணிந்து புனித சின்னப்பர் கூறினார் . நாம் ஆராய்ந்தும் கண்டுபிடிக்க அரிதான விதத்தில் நமது பாவங்களின் பாரத்தை அவர் சுமந்து , அதன் வாதனையால் இரத்த வியர்வை சிந்தினார் . ஆறுதலைத் தேடி வந்த அவர் தூங்கும் அப்போஸ்தலர்களைக் கண்டார். விழிப்புள்ளவர்கள் பின் வந்த புனிதர்கள்; இயேசுவின் மனோ வாதனையில் அவர்கள் பங்கெடுக்கிறார்கள்

கிறிஸ்து எம்மனிதனும் பாடுபட்டதற்கு மேல் பாடுபடுகிறார் என்பதும், கிறிஸ்து கடவுள் என்பதும் இவ்விரு எண்ணமும் பாடுகளின் தியானங்களில் நம் உள்ளம் உலவ வேண்டும். இயேசுவைப் போல இப்பெரிய மனோ வாதனையை வேறொருவர் அனுபவித்ததாக எந்த வரலாற்று ஏட்டிலும் நாம் வாசித்தது கிடையாது . நம்மில் ஒவ்வொருவரும் உடலிலும் மனதிலும் வாதனையை அனுபவிக்க வேண்டும் . அதைத் தவிர்ப்பதற்காக உல்லாசங்களைத் தேடலாகாது . சோதனையில் விழாதபடி விழித்திருந்து செபம் செய்யுங்கள் . சிலர் மருந்திலும், மதுபானத்திலும்  மனோவாதனையை மாய்க்கத் தேடுகிறார்கள் . இது ஒரு சோதனை . வேறு பெரிய சோதனை ஆண்டவரது அன்பின் மேல் ஐயம். மேற்சொன்ன உத்தியோகஸ்தரின் மனைவி அடிக்கடி சொல்லுவாள் " சுவாமி , கடவுள் நல்லவர் நல்லவர் என்கிறீர்களே , ஏன் எங்கள் எல்லாரையும் இவ்விதம் வாதிக்கின்றார் ?"

வாதனைக்குள்ள காரணங்கள் உண்மையா என்ற சந்தேகம் வேறொரு சோதனை . வாதனைக்குக் காரணங்கள் நான்கு!

1. இறைவனுடைய நீதி
2. உலகத்தின் ஒழுங்கு
3. மனிதனுடைய பாவம்
4. பாவப் பரிகாரம்

இவைகளை நம்பாவிடில் வாதனையின் காரணங்களைக் கண்டுபிடிப்பது எவ்விதம்? மேற்சொன்ன உத்தியோகஸ்தரும் அவரது மனைவியும் அடிக்கடி கேட்பார்கள் :" சுவாமி , வாதனை பாவத்திற்குத் தண்டனை என்கிறீர்களே , நாங்கள் அவ்வளவு பெரிய அக்கிரமிகளா ?" அவர்கள் கிறிஸ்துவர்கள் அல்லாதபடியினால் இவைகளைக் கண்டுபிடிப்பது சிரமம் . சிறு பாவம் எனினும் பெரும் பொல்லாப்பு , கடவுளுக்கு துரோகம் , உலக ஒழுங்கின் நிலையைக் குலைக்கிறது . நீதியுள்ள இறைவன் அதைத் தண்டிக்க வேண்டும் . உலக ஒழுங்கின் நிலையைச் சரிப்படுத்தவேண்டும் . ஆதலால் பாவப் பரிகாரத்தை விதிக்க வேண்டும் . துன்ப சமயத்தில் சோதனைக்கு ஆளாகாவண்ணம் விழித்திருந்து செபிக்க வேண்டும் .
கடவுள் மனிதருடைய பாவங்களுக்காக , மனிதர்களை ஈடேற்றப் பாடுபடுகிறார் . நாம் அவருடைய ஞான சரீரத்தின் அவயங்கள் . அவரோடு பாடுபட வேண்டும். நமது துன்பத்தை அவருடைய பாடுகளோடு ஒன்றிப்போமேயாகில் நாமும் உலக ஈடேற்றத்தில் பெரும் பங்கு அடைவோம்.

பாடுகளின் பூங்காவில் ஆண்டவர் அக்கிரமத்தோடு மல்யுத்தம் புரிந்து வெற்றிமாலை சூடுகிறார். பயத்தை ஊட்டும் இரா நேரத்தில் மகா வாதனைக்கு ஆளாகிறார் . இன்றிரவு ஒரு நேரம் தான் - தம் வாதனையின் குரூரத்தைத் தாங்க முடியாமல் " என் ஆத்துமம் மரணமட்டும் வேதனையாயிருக்கிறது " என்றார்

இத்துன்ப நேரத்தில் மனிதர்களுடைய தோழமையையும் துணையையும் ஆறுதலையும் தேடுகிறார். அவ்வாறுதலை அச்சமயம் கொடுத்தவர் இலர். சில அறிஞர்களின் எண்ணப் பிரகாரம் அமலனின் கன்னித்தாய் அசன சாலையின் ஓர் அறையில் தனிமையில் செபத்தில் இருக்கிறார்.  தம் மகனின் துன்ப வாதனையை எல்லாம் காட்சியில் கண்டு பயம் , கலக்கம் , துன்பம் என்னும் வாதனைகளைஎல்லாம் இயேசுவோடு அவரும் அனுபவிக்கிறார் . எத்தனையோ புண்ணியவான் புண்ணியவதிகளுக்கு காட்சியில் தம் பாடுகளைக் காட்டிய ஆண்டவர் அக்கிருபையைத் தன் அன்னைக்கு அளிக்காமல் இருப்பாரா ? அப்போஸ்தலர்கள் தூங்கி விட்டனர்

உலக முடியுமட்டும் ஞான சரீரத்தில் இயேசுநாதர் ஆயாசப்படுவார் .அக்காலமெல்லாம் நாம் தூங்கலாகாது.

சரிதை.

1482 ஆம் ஆண்டில் ஜெர்மனி தேசத்தில் கோலோஞ் என்ற நகரில் முத் ஜேம்ஸ் ஸ்பெரெங்கன் செபமாலையை பற்றி மகா சாதுரியமாகப் போதித்தார். செபமாலை மாதா சபை ஒன்றை நிறுவ எத்தனம் செய்தார். இதுவரையில் பெரிய பிரசங்கிகள் என்ற பேர் வாங்கிய இரு குருக்களுக்குப் பொறாமைத் தீ பிடித்தது . தேவதாசன் மேல் உள்ள பொறாமையினால் செபமாலை செய்வதற்கு விரோதமாய்ப் பேசத்தொடங்கினர். தங்கள் வாய்ச் சாலகத்தால் செபமாலை மாதா சபையில் பலர் சேராவண்ணம் தடுத்தனர்
இருவரில் ஒருவர் செபமாலைக்கு விரோதமாய் ஒரு தனிப்பட்ட பிரசங்கம் தயாரித்து அடுத்த ஞாயிற்றுக்கிழமை செய்வதற்குத் தயாராக இருந்தார் . ஞாயிறு வந்தது . பிரசங்கம் செய்ய ஆளைக் காணோம் . சபையோர் வெகுநேரம் காத்திருந்து பின்னர் , பிரசங்கியாரை அழைத்து வர ஆள் அனுப்பினர் . பிரசங்கியார் செத்துக் கிடந்தார். கடைசி நேரத்தில் யார் உதவியும் இன்ற மரித்திருக்க வேண்டும்

மற்றொரு குருவுக்கு உள்ளத்தில் திகில் . ஆகிலும் வைத்தியர்கள் பிரேதத்தைப் பரிசோதித்து அது இயற்கையான சாவு என்றதும் துணிவு ஏற்பட்டது . தன் ஸ்நேகிதனுக்குப் பதிலாக தான் பிரசங்கம் செய்வதாகவும் செபமாலை மாதா சபை முனையாமல் தடுக்கப் போவதாகவும் திட்டமிட்டிருந்தார் . பிரசங்கம் செய்யும் நாள் வந்தது . நாழிகையாயிற்று . அந்நேரம் பிரசங்கியாருக்கு பச்சைவாதம் , கை கால் விளங்கவில்லை . நாவிலும் அசைவில்லை. இவர் தன் குற்றத்தை ஏற்று கொண்டு தனக்கு உதவி செய்ய தேவதாயை நோக்கி வேண்டிக் கொண்டார் . மரியன்னை தனக்குச் சுகத்தை கொடுப்பாரேயாகில் செபமாலை பக்தியைப் பரப்ப அதிகம் உழைப்பதாக தாய்க்கு நேர்ந்து கொண்டார் . தாய் இவருக்கு சுகத்தை அளித்தார் . அதிசயமாகத் திடீரென வேத விரோதியான சவுல் மனந்திரும்பி எவ்வளவு ஊக்கமாய் சத்திய வேதத்தை போதித்தாரோ அதே போல் இவரும் அதிக வாய் சாலகத்தோடு செபமாலை பக்தியை பரப்பினார் .

செபமாலை கிழவிகளுக்குத் தான் என்று வேடிக்கையாய்ப் பேசுகிறவர்கள் அங்கும் இங்கும் சிலர் இருக்கலாம் அவர்கள் எச்சரிக்கையாய் இருப்பார்களாக.

செபம்.

ஜெத்சமெனியில் உமக்கிருந்த ஆயாசத்தையும் ,அச்சத்தையும் கொண்டு இக்கட்டில் உள்ளோரையும் , பயந்தோரையும் திவ்விய இயேசுவே , தேற்றியருளும் . அப்போஸ்தலர்கள் தூங்கி விழ , உம் பாடுகளைக் கண்டு நீர் தனிமையில் ஏங்கியதை நினைத்து உலகமானது நித்திரையில் ஆழ்ந்திருக்கத் தனித்து தின்மையை எதிர்த்து நிற்பவர்களைத் தேற்றியருளும் . வரப்போகும் தீமையையும் ,சங்கடத்தையும் எதிர்நோக்கி அவதிப்பட்டு நீர் செபத்தில் நிலைத்திருந்ததை நினைவு கூர்ந்து , எதிர்பாராமல் வரப்போகும் தின்மையை எண்ணி நடுங்குகிறவர்களுக்கு ஆறுதல் அளித்தருளும் . வானதூதரின் தாழ்ச்சியை ஏற்றுக் கொண்ட உம் தாழ்ச்சியை கண்டு பிறருக்கு உதவி செய்யவும் , பிறர் உதவியைப் பெறவும் , மற்ற ஒவ்வொருவரிலும் உம்மைக் கண்டு உமக்கு ஆறுதலளிக்கவும் வேண்டிய அருளை எங்களுக்குத் தந்தருளும் . திவ்விய இயேசுவே , செபமாலை இராக்கினியே , இவ்வுலகம் துன்பம், கஷ்டம், தோல்வி ,ஏமாற்றம் , வாதனை நிறைந்தது . இவைகள் மோட்ச மாணிக்கங்கள் . நாங்கள் இவைகளை இழந்து போகாமல் பயனடையும்படி இயேசுவின் பாடுகளிலிருந்து தைரியம் பெற்று , அவைகளைப் பொறுமையாகவாவது இயேசுவின் பாடுகளோடு சேர்ந்து அனுபவிக்க கிருபை செய்யும் .செபமாலை இராக்கினியே துன்பப்படுவோருக்கு நீரே ஆறுதல்!

ஆமென்.