அக்டோபர் 14


கர்த்தரை தேவாலயத்தில் ஒப்புக் கொடுக்கிறார்கள்.

இஸ்ராயேல் மக்கள் எகிப்தை விட்டு ஓடிவரும் நாள் கர்த்தர் அவர்களுக்குக் கற்பித்திருந்ததாவது: இஸ்ராயேல் குடும்பத்தார் ஒவ்வொருவரும் ஓர் ஆட்டுக்குட்டியைக் கொன்று அதன் இரத்தத்தை வெளிக் கதவில் தடவ வேண்டும். அன்றிரவு தேவதூதர் இரத்தம் பூசப்பட்ட இல்லங்களில் ஏகாமல் இல்லாத இல்லங்களில், எகிப்தியர் வீடுகளில் இறங்கி தலைச்சனான ஆண் மகவைக் கொன்று விட்டனர் . இவ்விதம் இஸ்ராயேலர் காப்பற்றப்பட்டதால் இவர்களுடைய தலைச்சன் ஆண் குழந்தைகள் இறைவனுக்கு விசேஷ விதமாய்ச் சொந்தமானார்கள். அவர்களை ஆண்டவருடைய ஊழியத்திற்கு நேர்ந்து கொள்ள வேண்டும். ஆனால் ஆலய ஊழியத்திற்கு லேவி வம்சத்தார் தேர்ந்து கொள்ளப்பட்டதால் கடவுளுக்கு நேர்ந்து கொள்ளலாம் . வேறொரு சம்பவம் என்னவெனில் குழந்தையை பெற்றெடுத்த தாய் சட்டரீதியில் அசுத்தமானவளாகக் கருதப்பட்டாள். பேறு காலத்திற்குப் பின் நாற்பதாம் நாள் ஆலயத்தில் காணிக்கை செலுத்தி சுத்திகரம் செய்யப்படுவாள்.

யூதர்களுக்குப் பற்பல ஊர்களில் செபக்கூடங்கள் இருந்தாலும் அவர்களுக்கு ஒரே தேவாலயம் . அது எருசலேமில் இருந்தது. நாற்பதாம் நாள் குழந்தை சேசுவை கைத்தாதை சூசையும் கன்னித்தாயும் இங்கு கொண்டு வந்தனர். சாலமன் எழுப்பிய ஆலயத்தை விட இது மதிப்பில் குறைந்தது . எனினும் தீர்க்கதரிசிகள் இதை " அதைவிட மகிமை பொருந்தியது . ஏனெனில் தேவாதி தேவன் மெசியா அங்கு வருவார் " என்று சொல்லிப் போயினர்

இதோ ஆண்டவர் வருகிறார் . சிறு குழந்தையாக பெற்றோரால் தூக்கிக் கொண்டு வரப்படுகிறார் . கோவிலில் நேர்ந்து கொள்ளப்பட " அழிக்கவல்ல , நிறைவேற்றவே வந்தேன் " என்ற வாக்குக்கு இணங்கச் சட்டத்தை ஏற்படுத்தியவரே அதற்குப் பணிந்து நடந்து அதை நிறைவேற்றுகிறார் . எனினும் சட்டம் அவரைக் கட்டுப்படுத்தாது . அதே போல் சுத்திகரச் சடங்கு உட்படக் கன்னித் தாய்க்குத் தேவையில்லை . அசுத்தம் அல்லது குறை என்பது எந்த வழியிலும் அவளிடம் சிறிதளவும் இல்லை . ஆதலால் தம் மகனைப் பின்பற்றி அவரும் சட்டத்துக்குப் பணிந்து நடக்கிறார்.

அதனால்தானா முதல் கிறிஸ்தவர்களுக்குக் கீழ்ப்படிதலின் மேல் விசேச ஆர்வம் ? புண்ணிய சிகரத்தில் ஏறுவதற்கு ஏற்ற புத்திமதி கீழ்ப்படிவதாம் . பெற்றோர்கள் தங்கள் மக்களுக்கு கீழ்ப்படிதலின் கண்ணாடியாக இருக்க வேண்டும் . தாய் தகப்பனுக்கு மக்கள் எல்லா விதத்திலும் பணிந்து நடக்க வேண்டும். இருவரும் திருச்சபைச் சட்டங்களையும் , இறைவனின் கற்பனைகளையும் பிரமாணிக்கமாய்க் காப்பாற்ற வேண்டும் . ஊரில் பெரியவர்கள் , தலைவர் என்று சொல்லிக் கொள்ளுகிறவர்கள் பங்கு சுவாமியார் , ஆயருடைய திட்டங்களுக்கு செவிசாய்த்து நடக்க வேண்டும் . துறவற மடங்களில் தலைவர்களும் , தாய்மார்களும் ஒழுங்குகளை நுணுநுணுக்கமாய்   அனுசரிப்பதில் முதலில் நிற்க வேண்டும்

சிமியோனும் அன்னாளும் குரு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர் . இக்காலத்திலும் சில ஆலயங்களில் பார்க்கலாம், சில வயோதிகர்கள் கோவிலிலேயே கதியாய்க் கிடந்து செபமாலை சொல்லிக் கொண்டோ , தேவ நற்கருணைப் பேழையை நோக்கிக் கொண்டோ இருப்பார்கள். இவர்களைப் போலத்தான் சிமியோனும் அன்னாளும் தேவாலயத்தை ஓயாமல் தரிசனம் செய்து வந்தனர். அவர்களது பிரமாநிக்கமுள்ள உண்மையான வைரம் பாய்ந்த பக்திக்கு கடவுள் சன்மானம் அளிக்கச் சித்தமானார் . உலக இரட்சகரைக் கண்டு களித்தனர் . அந்நாளில் வேறு யாருக்கு இப்பாக்கியம் கிட்டியது ?

அர்ச் சூசையப்பர் எங்கே ? என்ன மறைந்த வாழ்க்கை , எவரும் அவரைச் சட்டை செய்ததாகத் தெரியவில்லை . தேவாதி தேவனுடையவும் , மேலுலக அரசியினுடையவும் , பிரமாணிக்கமுள்ள அன்பும் , கீழ்ப்படிதலும் அவருக்கு இருந்தன . இயேசுவைக் கையில் ஏந்தி நெஞ்சோடணைத்துக் கொஞ்சி விளையாடும் செல்வாக்கு அவருடையது . வேறென்ன வேண்டும் ? உன் ஜீவியத்தின் ,அக வாழ்வின் பேரின்பம் எவ்வளவு பெரியது ?
கர்த்தரைக் காணிக்கையாகக் கொடுத்த இலாபம் , பொருள் மாமரிக்கு எது ? 'உம் ஆத்துமத்தை ஒரு வாள் ஊடுருவிப் பாயும் .' சிறிது நாளில் எகிப்திற்கு ஓட வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் . அப்பிரயாணத்தில் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் என்ன பயம் ! என்ன கிலேசம் !

தம் மகனைப் பிதாவுக்கு நேர்ந்துகொண்டபோது அவரோடு அவரிலும் மனுக்குலம் முழுவதையுமே பிதாவுக்கு அன்னை நேர்ந்து கொண்டார். அவரது சித்தத்தை ,அவர் நோக்கப் பிரகாரம் நிறைவேற்றுவதற்காக .

இயேசு தாமே உண்மையும் , உயிரும் , வழியும் . அவரைப் பின்பற்றுகிறவர்கள் அவர் கற்றுக் கொடுத்த சத்தியத்தை ஏற்றுக் கொண்டு ,அவர் சீவியத்தை சீவித்து உலகின் எதிர்ப்பையும் , பழிச் சொல்லையும் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்க வேண்டும் . ஒவ்வொருவரும் தம் சொந்த எண்ணத்தையும் , நேர்மையற்ற நாட்டங்களையும் , வீட்டையும், வாசலையும் , உற்றார் பெற்றோரையும் விட்டு விட்டு சேசுவோடு சிலுவை மட்டும் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்

சரிதை.

கார்க்காசோன் என்னும் இடத்தில் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார் டொமினிக் . அல்பிஜென்சியன்  அபத்தத்தைத் தழுவிய ஒருவன் , பேய் பிடித்த அவனை அவரிடம் கொண்டு வந்தனர் . பன்னீராயிரம் பேருக்கு மேல் பிரசங்கம் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் முன்னிலையில் பேயோட்டும் சடங்கை நிறைவேற்றினார் . அர்ச் டோமினிக் கேட்ட கேள்விகளுக்குப் பேய்கள் பதில் சொல்லி வந்தன

" இவன் செபமாலையின் 15 தேவ இரகசியங்களுக்கு விரோதமாய்ப் பேசியவன் . நாங்கள் 15000 பேர் இவன் உடலில் வசிக்கிறோம் . நீர் செபமாலையைப் பற்றி போதிப்பதால் நரகம் அடித்தளம் வரை கிடுகிடுத்து நடுங்குகிறது . உலகில் உம்மை விட வேறு எவரையும் நாங்கள் அவ்வளவாக விரோதிப்பதில்லை. . செபமாலை வழியாக நீர் எத்தனையோ ஆத்துமங்களை எங்களிடமிருந்து பிடுங்கிக் கொள்ளுகிறீர்"

இன்னும் பற்பல கேள்விகளுக்குப் பதில் சொல்லின.

அர்ச் டோமினிக் தன் செபமாலையை பேய் பிடித்தவனின் கழுத்தில் அணிவித்து " மோட்சத்தில் இருக்கும் அற்சிஷ்டவர்களில் யார் மட்டில் உங்களுக்குப் பயம் அதிகம் ? யாரை உலகத்து மக்கள் அதிகம் நேசித்து வணங்க வேண்டும் என்று சொல்லுங்கள் ." என்றார் . இதைக் கேட்டவுடன் அவைகள் அலறின . அருகில் நின்ற மக்கள் பயந்து கீழே விழுந்தனர் . அந்த பேய்கள் ஒப்பாரி வைத்து அழுதன . இதைக் கண்ட மனிதரும் கண்ணீர் சிந்தினர் . அந்த அல்பிஜென்சியன் வாயால் அந்த பேய்கள் சொன்னது "

டோமினிக், டோமினிக் , எங்கள் மேல் இரக்கம் வையும் . எங்களில் ஒருவரும் உமக்குத் தீமை வருத்துவிக்க மாட்டோம் . எங்கள் வாதனை எவ்வளவென்று உமக்குத் தெரியாதா ? இன்னும் அவ்வாதனைகளை அதிகரிப்பதில் உமக்கு சந்தோசமா ? "

புனிதர் இதைக் கேட்டு அசைந்து கொடுத்து விடுவாரா? " பதில் சொல்லாமல் போக விட மாட்டேன்  " என்றார். " இரகசியமாய் உமக்கு மட்டும் சொல்வோம் " என்றன . " கூடாது , கூடாது . யாவரும் கேட்கும் வண்ணம் சொல்ல வேண்டும் " என்றார்.

பேய்கள் ஒரு வார்த்தையும் சொல்லாமல் ஊமையாய் இருந்தன . புனிதர் முழந்தாளில் இருந்து தாயைப் பார்த்து வேண்டிக் கொண்டார் . " மகா வல்லமையுள்ள கன்னிகையே , அதிசயத்துக்குரிய மாதாவே , மகா பரிசுத்த செபமாலையின் மூலமாய் உம்மைக் கெஞ்சிக் கேட்கிறேன் , எனக்குப் பதில் சொல்லும்படி மனுக்குலத்தின் பகைவர்களாகிய இவைகளுக்குக் கட்டளையிடும் "

இச்செபம் முடிந்தும் முடியாமுன் பேய் பிடித்தவன் வாய் , காதுகளில் இருந்து கொழுந்து விட்டு எரியும் நெருப்புச் சுவாலை வீசும் தணல்கள் தாவின . யாவருக்கும் நடுக்கம் எனினும் ஒருவருக்கும் ஆபத்தில்லை ." டோமினிக் எங்களை சும்மா விட்டு விடும் , நாங்கள் இவனை விட்டு ஓடி விடுகிறோம் . இக்கேள்விக்கு சம்மனசுக்கள் உமக்குப் பிரியமானபோது பதில் சொல்லுவார்களே . நங்கள் பொய்யர்கள் தானே . எங்களை ஏன் கேட்க வேண்டும் ? எங்கள் மேல் இரங்கி எங்களைப் போக விடும் " என்று அலறின

"ஞானத்தின் தாயே , எனக்குமுன் இருக்கும் இந்த சபையோருக்காகத்தான் உம்மை மன்றாடுகிறேன் . அவர்கள் செபமாலை சொல்லப் பழகி இருக்கின்றனர் . நான் கேட்ட கேள்விக்கு பேய்கள் உண்மையான பதில் சொல்ல வேண்டும் " உடனே அர்ச்சிஷ்டவர் மட்டும் பார்க்கும் வண்ணம் எண்ணிக்கையில்லா சம்மனசுக்கள் சூழ தேவதாய் தோன்றி தன் கையில் வைத்திருந்த பொற்கோலால் பேய் பிடித்தவனைத் தட்டி , " என் தாசன் தொமினிக்கிற்கு உடனே பதில் சொல்லுங்கள் " என்றார்

அப்போதுதான் அடிபட்ட நாய் குரைப்பது போல " நீர் தான் எங்கள் சத்துராதி , எங்கள் வீழ்ச்சிக்கும் நாசத்துக்கும் காரணம் . எங்களை இவ்விதம் வாதிக்கவா மோட்சத்திலிருந்து இங்கு வந்தீர். ? பாவிகளின் பாதுகாவலியே, நரகத்திற்கு விழவேண்டியவர்களை எங்கள் கையினின்று பறித்துக் கொண்டு போகிறவரே , மோட்சத்துக்கு நிச்சயமான பாதையாகிய நீர் எங்களை ஏன் வற்புறுத்துகிறீர் ? எங்களுக்குப் பிரியம் இல்லாவிடினும் எங்கள் வெட்கத்துக்கும் , நாசத்துக்கும் மெய்யான காரணம் யாரென்று யாவருக்கும் முன்னால் சொல்ல வேண்டுமா ? இருளின் அரக்கர்களாகிய எங்களுக்கு ஐயோ கேடு !

கிறிஸ்தவ மக்களே ! கவனமாய்க் கேளுங்கள் . இயேசுவின் தாய் எல்லா வல்லமையும் உள்ளவர் . பாவிகள் நரகில் விழாமல் காப்பாற்றக் கூடியவர் . எங்கள் தந்திர மந்திரங்களை எல்லாம் வெளியாக்கும் சூரிய ஒளி அவர் . எங்கள் கண்ணிகளையும் வலைகளையும் அறுத்தெறிந்து எங்கள் சோதனைகள் பயனற்றுப் போகச் செய்கிறவர் அவர். அன்னையின் சேவையில் பிரமாணிக்கமாயிருந்த ஓர் ஆத்துமமாவது நித்திய தண்டனைக்கு ஆளாகவில்லை என்றும் , எல்லா அற்சிஷ்டவர்களுடைய வேண்டுதலை விட அவருடைய  ( அந்த தாயினுடைய ) பெருமூச்சு ஒன்றே அதிக வல்லமையுள்ளது என்றும் , நாங்கள் ஒத்துக் கொள்ள வேண்டியது எங்கள் துர்பாக்கியம் . எங்களுக்கு விரோதமாக மரியாயினுடைய செல்வாக்கை உபயோகிக்காமல் இருந்திருந்தால் , திருச்சபையை முன்னரே அழித்திருப்போம். திருச்சபையிலுள்ள எல்லா துறவற சபைகளும் பெரும் ஆபத்திற்கு உட்பட்டு நாசமாய்ப் போயிருக்கும் .

ஐயோ ! இதையும் சொல்ல வேண்டுமா? செபமாலை செய்வதில் நிலைத்திருக்கும் எவனும் நித்திய ஆக்கினைக்கு உள்ளாக மாட்டான் . பாவங்களுக்கு மெய்யாகவே மனஸ்தாபப்படும் வரத்தை அவர் அப்பக்தியுள்ளோருக்குப் பெற்றுக் கொடுத்து , இறைவனிடமிருந்து இரக்கத்தையும் மன்னிப்பையும் அடையச் செய்கிறார் "

அங்குள்ள எல்லோரையும் புனிதர் செபமாலை செய்யச் சொன்னார் . "அருள் நிறைந்த மரியே " சொல்லி முடித்த ஒவ்வொரு முறையும் சிறு தீக்குழம்புகள் போன்ற கனல் போன்ற பலப்பல பேய்கள் அவனுடைய உடலிலிருந்து வெளியேறின . எல்லாப் பேய்களும் போய் அந்தப் பதிதன் முற்றும் விடுதலையானபின் சாதாரண மக்கள் கண்ணுக்கு இன்னும் மறைந்திருந்த தேவ தாய் கூடியிருந்த எல்லா மக்களுக்கும் ஆசீர் அளித்து மறைந்து போனார். மக்கள் உள்ளத்தில் காரணம் அறியா மகிழ்ச்சி பொங்கியது.

அநேக பதிதர்கள் மனந்திரும்பி செபமாலை மாதா சபையில் சேர்ந்தனர்.

செபம் 

நித்திய பிதாவே ! இயேசு மரி சூசையின் தாழ்ச்சியின் நிமித்தம் எங்களுக்குத் தாழ்ச்சியின் மகிமையைத் தந்தருளும். பாவிகள் மேல் சுமத்திய சட்டத்திற்கு பரிசுத்ததனம் கீழ்ப்படிந்த இரகசியத்தை நினைத்து எங்களிடம் தரித்திரத்தின் சிந்தையை ஊட்டியருளும்

செபமாலை இராக்கினியே , மகா பரிசுத்த கன்னித் தாயே , நாங்கள் வாழ்வின் சட்ட திட்டங்களுக்கும் , உத்தியோகத்தின் வகை வழிக்கும் , எங்கள் வாழ்வு நிலையின் ஒழுங்குக் கிராமத்திற்குக் கீழ்ப்படிய கிருபை செய்தருளும். எங்கள் நாட்டிலுள்ள துறவிகள் , கன்னியர்கள் தத்தம் சபையின் ஒழுங்குகளை அனுசரிப்பதால் புண்ணிய சிகரத்தில் ஏறும்படி கிருபை கூர்ந்தருளும் . செபமாலை மாதாவே!

ஆமென்.