அர்ச். பொனவெந்தூரின் நன்றியறிதல் ஜெபம்

மிகவும் மதுரமுள்ள ஆண்டவராகிய சேசுவே, என் ஆத்துமத்தின் உற்பனங்களில் எப்போதும் உம்மையே ஆசித்து, உம் பேரிலுள்ள நேசத்தால் உருகி, உம் பேரில் தாகம் கொண்டு, உமது முற்றங்களில் நேசமிகுதியால் தவித்துச் சோர்ந்து, உம்மில் கரைந்து போகவும், உம்மோடு இருக்கவும், என் இருதயம் உம்மையே ஏங்கித் தேடும்படியாகவும், அதை உமது நேசத்தின் அத்தியந்த சந்தோ­மும், ஆரோக்கியமும் உள்ள காயத்தாலும், உண்மை யானதும், சமாதானம் நிறைந்ததுமான அப்போஸ்தலிக்க சிநேகத்தாலும் ஊடுருவக் குத்தியருளும். 

சம்மனசுக்களின் அப்பமும், பரிசுத்த ஆத்துமங்களின் தேற்றரவும், சுபாவத்துக்கு மேற்பட்ட பொருண்மையுள்ளதுமான எங்கள் அனுதின அப்பமானவரும், இனிமையாவையும், சகல விதமான அருஞ்சுவைகளையும் உம்மிடத்தில் கொண்டிருக்கிறவருமாகிய தேவரீர் மீது என் ஆத்துமம் பசி தாகம் கொண்டிருக்கச் செய்தருளும்.  சம்மனசுக்களும் உற்றுநோக்க ஆவல் கொள்ளுகிறவராகிய உம்மீது என் இருதயமும் எப்போதும் பசியாயிருப்பதாக.  என் ஆத்துமத்தின் அந்தரங்க உற்பனங்கள் உமது மதுர சுவையால் நிரப்பப்படுவனவாக. 

ஜீவியத்தின் ஊற்றும்,  ஞானத்தினுடை யவும், அறிவினுடையவும் ஊற்றும், நித்திய வெளிச்சத்தின் ஊற்றும், பரலோக இல்லத்தின் பெருவெள்ளமும், சர்வேசுரனுடைய இல்லத்தின் செழுமையுமாகிய உம்மீது அது எப்போதும் தாம் கொண்டிருப்பதாக.  அது தாழ்ச்சியோடும், சாது அமரிக்கையோடும், நேசத்தோடும், இன்பத்தோடும், எளிமையோடும், பிரியத்தோடும், இறுதிவரைக்கும் நிலையான பிரமாணிக்கத்தோடும் உம்மீது என்றென்றும் நேசம் கொண்டு, உம்மைத் தேடிக் கண்டடைந்து, உம் பிறகே ஓடி, உம்மைப் பெற்றுக்கொண்டு, உம்மைப் பற்றித் தியானித்து, உம்மைப் பற்றியே சம்பாத்து, உமது திருநாமத்தின் மகிமைக்காகவும், ஸ்துதி புகழ்ச்சிக்காகவும் சகலத்தையும் செய்யக்கடவது.  

தேவரீர்தாமே என்றென்றைக்கும் என் நம்பிக்கையும், என் பூரண உறுதிப்பாடும், என் செல்வ மும், என் இன்பமும், என் சந்தோஷமும், என் ஆனந்தமும், என் இளைப்பாற்றியும், என் அமரிக்கையும், என் சமாதானமும், என் மதுரமும், என் சுகந்தமும், என் இனிய சுவையும், என் ஆகாரமும், என் தேற்றரவும், என் அடைக்கலமும், என் உதவியும், என் பாகமும், என் உடமையும் என் பொக்கி­முமாய் இருப்பீராக.  என் மனமும், இருதயமும் உம்மில் நிலைகொண்டு, உறுதிப்பட்டு, இனி என்றென்றைக்கும் உம்மில் வேரூன்று வதாக.  

ஆமென்.