நன்மை வாங்கிய பின் அர்ச். அக்குயினாஸ் தோமையாரின் ஜெபம்

ஓ பரிசுத்த ஆண்டவரே, சர்வ வல்லபரான பிதாவே, நித்திய சர்வேசுரா, தேவரீர் அடியேனுடைய எந்தப் பேறுபலனைக் குறித்தும் அல்லாமல், உமது நன்மைத்தனத்தில் அடியேன் மீது தயைகூர்ந்து, கொடிய பாவியும், உமது தகுதியற்ற ஊழியனுமாகிய என்னை எங்கள் ஆண்டவரும், உமது திருச்சுதனுமாகிய சேசுக்கிறீஸ்துநாதருடைய திருச்சரீரத்தாலும், திரு இரத்தத்தாலும் போக்கத் திருவுளமானீரே.  

நான் உட்கொண்ட இந்தத் திவ்விய நற்கருணையானது எனக்குத் தண்டனைக்குரிய நீதித் தீர்ப்பாக இல்லாமல், என் பாவமன்னிப்பிற்குரிய இரட்சணிய மன்றாட்டாயிருக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன். அது என் விசுவாசத்தின் கவசமாகவும், நல்மனத்தின் கேடயமாகவும் இருக்கக்கடவது. அது என் தீமைகளிலிருந்து என்னை வெறுமையாக்கி, சகல அசுத்த ஆசைகளும் என்னில் அவிந்து போகச் செய்வதாக. தேவசிநேகமும், பொறுமையும், தாழ்ச்சியும், கீழ்ப்படிதலும், இன்னும் சகல புண்ணியங்களும் என்னில் வளர அது துணை செய்வதாக. 

அது காண்பவையும், காணாதவையுமாகிய என் சகல சத்துருக்களின் கண்ணிகளுக்கு எதிராகவும் எனக்கு மிகுந்த பெலனுள்ள பாது காவலாயிருப்பதாக. அது என் மாம்சத்தினுடையவும், ஆவியினுடையவும் சகல தீய தாக்குதல்களினின்று முழுவதுமாய் என்னை விடுவித்து, ஏக, சத்திய தேவனாகிய உம்மோடு என்னை உறுதியாகப் பிணைக்கக்கடவது.  அது என் ஜீவியத்தின் மகிழ்வான முடிவாகவும் இருக்கக்கடவது.  

தேவரீர் உமது திருச்சுதனோடும், இஸ்பிரீத்து சாந்துவோடும், உமது புனிதர்களுக்கு உண்மையான ஒளியாகவும், சகல ஆசைகளின் நிறைவேற்றமாகவும், நித்திய ஆனந்தமாகவும், கலப்பற்ற சந்தோஷமாகவும், உத்தமமான பரலோகப் பேரின்பமாகவும் இருக்கிற வாக்குக்கெட்டாத பரலோக விருந்திற்கு என்னைக் கூட்டிச் செல்ல எனக்கருளும்படியாகவும் உம்மை மன்றாடுகிறேன். 

ஆமென்.