வாரீர் படைத்திடும் தூய ஆவி மக்கள் தம் இதயங்களில் சேரீர்


வாரீர் படைத்திடும் தூய ஆவி

மக்கள் தம் இதயங்களில் சேரீர்

நிரப்பும் அருட்பிர சாதத்தால்

நீவிர் வழங்கின இதயங்களில்


1. தேற்றரவாளன் என்பவரே

சீரிய இறைவனின் திருக்கொடையே

வற்றா ஊற்றே அக்கினியே

வளரன்பே ஞானப் பூசுதலே


2. தகைக் கொடை ஏழுக்குரியவரே

தந்தை வலக்கரத் திருவிரலே

சகப்பிதா வாக்கினைக் காப்பவரே

சர்வ சொல்வரம் நாவில் நிறைப்பவரே


3. ஐம்புலன் களுக்கொளி மூட்டிடுவீர்

அன்பினை இதயத்தில் பாய்ச்சிடுவீர்

தெம்பிலா உடற் கழிவில்லாத

சீர்மிகு வலிமையை ஏற்றிடுவீர்


4. துரிதமாய் எம்பகை வரைவிரட்டி

சுருக்காய் சமாதானம் அருள்வீரே

வரும்வினை களிலிருந் தகன்றிடவே

வழிநடத்தும் தலைமை வகித்தே


5. உம் வழியாகத் தந்தையையும்

ஓர் சுதன் அவரையும் அறிந்திடவே

தம்பிரான் இருவரின் திருஆவி

தாமென விசுவசித் திடஉதவும்


6. தந்தை இறைவனுக் கும்மகிமை

தாழ்விடத் துயிர்த்த சுதனுக்கும்

இந்தத் தேற்றர வாளனுக்கும்

என்றென்றும் மகிமை பெருகிடுக - ஆமென்