திருவெளிப்பாடு பரிசுத்த வேதாகம் பகுதி -9

இறுதிவரை நிலைத்து நிற்பவரே பேறு பெற்றவர்கள். அநேக நேரங்களில் பொய்யும், போலியுமே உண்மை போன்று காட்சி தருகின்றன. அதை நம்பி அதன் பின்னால் போகிறவர்கள் படுகுழியில் விழுகிறார்கள். கடவுளின் வார்த்தையை நம்பி எந்த மழை, வெள்ளம், புயலிலும். எதிர்த்து நின்று கடவுளை பற்றிக்கொண்டவர்கல். கடவுள் மட்டுமே ஆதாயம் என்று நினைத்தவர்கள், நிலைத்தவர்கள் பேறுபெற்ற மக்களாகின்றார்கள். அதே சமையம் அநீதி, தீமை, தீச்செயலுக்கு சொந்தக்காரனான கடவுளின் எதிரி தோற்கும் பொழுது கடவுளின் மக்களுக்கு மகிழ்ச்சி வரத்தானே செய்யும்.

(“ செம்மறியின் விருந்துக்கு அழைக்கப்பெற்றோர் பேறு பேற்றோர் “ பாடல் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதை கீழே காணலாம்)

திருவெளிப்பாடு தொடர்கிறது.

இதற்குப்பின் விண்ணில் பெரியதொரு கூட்டத்தின் முழக்கம் போன்ற பேரொலியைக் கேட்டேன். அக்கூட்டம், "அல்லேலூயா, மீட்பும் மகிமையும் வல்லமையும் நம் கடவுளுக்கே உரியன.

ஏனெனில், அவரிடும் தீர்ப்புகள் உண்மையானவை, நீதியானவை. தன் விபசாரத்தால் மண்ணகத்தைச் சீரழித்த, பேர்போன வேசிக்கு அவர் தீர்ப்பிட்டார்;

தம் ஊழியர்களின் இரத்தத்திற்காக அவளைப் பழிவாங்கினார்" என்று ஆர்ப்பரித்தது மேலும் அக்கூட்டம், "அல்லேலூயா, அவளை எரிக்கும் புகை என்றென்றும் மேலே எழுகிறது" என்றது.

இருபத்து நான்கு மூப்பர்களும் நான்கு உயிர்களும் அரியணையில் வீற்றிருக்கும் கடவுள்முன் அடிபணிந்து, "ஆமென், அல்லேலூயா" என்று தொழுதனர்.

அரியணையிலிருந்து வெளிவந்த குரல்; "கடவுளுடைய ஊழியர்களே, அவருக்கு அஞ்சுபவர்களே, சிறியோர்களே, பெரியோர்களே, நம் கடவுளைப் புகழுங்கள்" என்றது.

மேலும் பெரியதொரு கூட்டத்தின் ஆர்ப்பரிப்புப் போலும், பெரும் வெள்ளத்தின் இரைச்சல்போலும், இடி முழக்கம்போலும் தொனித்த பேரொலி ஒன்று கேட்டேன். அது சொன்னதாவது: "அல்லேலூயா, எல்லாம் வல்ல கடவுளாகிய ஆண்டவர் ஆட்சி செலுத்தலானார்.

நாம் அகமகிழ்ந்து களிகூர்ந்து அவருக்கு மகிமை அளிப்போமாக. ஏனெனில், செம்மறியின் மணவிழா வந்து விட்டது. அவருக்குரிய மணமகள் தன்னை அலங்கரித்துக்கொண்டாள்.

அணிவதற்குப் பகட்டானதும் தூயதுமான விலைமிக்க ஆடை அவளுக்கு அளிக்கப்பட்டது. அவ்விலைமிக்க ஆடையோ இறைமக்களின் நீதிச் செயல்களே."

பின்பு வானதூதர் என்னிடம் சொன்னதாவது:

"செம்மறியின் மணவிருந்துக்கு அழைக்கப்பட்டோர் பேறுபெற்றோர் என்று எழுது." மேலும், "இவை கடவுளின் உண்மை வார்த்தைகள்" என்று சொன்னார்.

பின்னர் நான் அவரைத் தொழுவதற்கு அவர்முன் அடிபணிந்தேன். அவரோ, "வேண்டாம், வேண்டாம், இயேசு சொன்ன சாட்சியத்தை ஏற்றுக்கொண்ட உன் சகோதரர்களுக்கும் உனக்கும் நான் உடன் ஊழியனே. கடவுளையே தொழுதல்வேண்டும்" என்றார். இயேசு தந்த அந்தச் சாட்சியமே இறைவாக்குகளுக்கு உயிர். திருவெளிப்பாடு 19 : 1-10

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !