ஞான ஒடுக்கப் பிரசங்கம். பாகம் -6. ஈடேற்ற அலுவல் - தாமதம் பொறாத ஒரு அலுவல்!

ஆதலால், நாம் இப்போதே நமது ஆத்தும ஈடேற்ற அலுவலைப் பார்க்கத் தொடங்க வேணும். அதுதான் நமது ஏக அலுவல். அதை நாம் ஒழிய வேறு ஒருவர் நமக்குப் பார்த்துத் தர முடியாது. அது தாமதம் பொறாத அலுவல். நாளைக்கு நாளைக்கு என்று விட்டு வைத்துக் கொண்டிருந்தால் அது முற்றாய்க் கை பறிந்து போய்விடும். சென்று போன தருணம் திரும்பி வராது. இந்த முழு முக்கியமான அலுவல் நம்முடைய நித்திய நன்மையையோ நித்திய கேட்டையோ பொறுத்த அலுவல் இருக்க, நாம் உலகத்தின் கஞ்சல் குப்பை போல கிடக்கிற பொருள் பண்டங்களை, இன்பங்களை மகிமைகளையே தேடிக்கொண்டிருந்து காலத்தைப் போக்குவோமா?

தன் வீடு பற்றி எரிகிறதைக் காணும் போது எவனாவது தாயம் விளையாடிக்கொண்டிருப்பானா? தன் சீவனுக்கு மோசம் வருகிற ஆபத்தான தருணத்திலே எவனாவது பகிடி சேட்டை பண்ணிக்கொண்டிருப்பானா? இரான் இரான். அப்படியாகையால், பிரியமானவர்களே, உங்கள் ஒரேயொன்றான, அருமையான, விலைமதிக்கக் கூடாத சீவியத்தின் காலம், நெருப்புப் பற்றியெரிந்து அழிந்து போவது போல் கடந்து போய்க்கொண்டிருக்க, நீங்கள் நாலு நாளைக்கு மேல் நில்லாத உலக காரியங்களிலே அமிழ்த்திக் கிடப்பது என்ன? உங்கள் ஆத்துமத்துக்கு காலாதி காலமாய் முடியாத கேடு வரத்தக்க நிலையில் இருந்து கொண்டு, உலக வீண் வேடிக்கை விநோதங்களிலே நாட்போக்குவது என்ன?

இதோ இன்று உங்களுக்கு நல்ல ஒரு காலம் தொடங்குகிறது. இந்த ஞான ஒடுக்கம் உங்கள் நித்திரைத் தூக்கத்திலிருந்து உங்களைக் கிள்ளி அருட்டி, இதுவரைக்கும் நீங்கள் முழு முயற்சியோடு தேடாமல் விட்டிருந்த ஆத்தும ஈடேற்ற அலுவலை இனியாவது கவனிக்கப் பண்ணுவதாகும். ஞான ஒடுக்க நாட்களானவை, சருவேசுரனுடைய வரப்பிரசாதம் ஆகிய மழை ஆத்துமம் என்கிற நிலத்திலே ஏராளமாய்ப் பொழிகிற ஒரு காலமாம். நிலத்தைக் கொத்தி, களை பிடுங்கி, நல் விதையை விதைத்தால் மாத்திரம் அதற்கு மழையினால் பிரயோசனம் உண்டு.

தேவ வரப்பிரசாதம் உங்கள் ஆத்துமங்களுக்கு நன்மை செய்யத்தக்கதாக, நீங்கள் அவைகளை மவுனத்தினாலும் செபத்தினாலும் தவக்கிரியைகளினாலும் ஆயத்தப்படுத்தவேணும். உங்களுடைய ஊக்கமான பிரயாசையும் சேராவிட்டால், ஞான ஒடுக்கத்தின் வரப்பிரசாதங்கள் கடல் மேற் பெய்த மழை போலவும் காட்டில் எறித்த நிலவு போலவுமே வீண் ஆகிவிடும்.

ஆதலால், கூடியளவில் உலக வீண் பராக்குகளையும் கதை கண்ணிகளையும் தவிர்த்து, இருதயம் என்கிற மறைவிடத்திலே ஒளித்திருந்து, ஆண்டவரைப் பிரார்த்தியுங்கள். உங்கள் நிலைமையை ஆராய்ந்து பாருங்கள். மனந்திரும்பப் பிரயாசப்படுங்கள். இதற்கு செபமே அதிக முக்கியமான காரியம். இன்றியமையாத காரியம்.

என் இரட்சணியத்துக்காகச் சிலுவையில் அறையுண்ட ஆண்டவரே, என் ஈடேற்றத்தைப் பற்றிய கவலையை எனக்குத் தாரும். என் பாவங்களுக்காக நான் மெய்யான மனஸ்தாபப்பட அருள்புரியும். இரக்கமுள்ளவரே, என்னை மனந்திருப்பியருளும்; அப்போதுதான் நான் மனந்திரும்புகிறவன் ஆவேன் என்று இந்தச் சாரப்பட அடிக்கடி செபியுங்கள். அதிகமாய்ச் செபம் பண்ணுங்கள். செபத்தோடு தவத்தையும் சேர்த்து, கண்ணை ஒருங்கள்; காதை ஒறுங்கள்; விசேஷமாய் நாக்கை ஒறுங்கள். மவுனமும் செபமும் தவமும் சேருமானால் தப்பாமல் ஆண்டவருடைய வரப்பிரசாதத்தினால் மனந்திரும்புவீர்கள்; சருவேசுரனை முழு மனதோடும் நேசித்து அவருக்காகவே சீவித்து, அவருடைய திருக் கற்பனைகளை எல்லாம் சுமுத்திரையாய் அனுசரிக்கத் தொடங்குவீர்கள். அளவில்லாத தயாபரரான அவரும் உங்களுக்கு அருளின் மேல் அருள் கூட்டி, தமது அன்பிலே நீங்கள் நாளுக்கு நாள் வளரச்செய்து, உங்களுக்குத் தமது இணையில்லாப் பாக்கியமாகிய பேரின்ப முக தரிசனத்தையும் தந்தருளுவார்.

இயேசுவுக்கே புகழ் !!! மரியாயே வாழ்க