ஞான ஒடுக்கப் பிரசங்கம். பாகம் -5. ஈடேற்ற அலுவல் - தாமதம் பொறாத ஒரு அலுவல்!

ஈடேற்ற அலுவல்தான் நம்முடைய முக்கியமான ஒரே அலுவல். அதை ஒவ்வொருவனும் தான் தானே செய்து முடிக்க வேண் டியது; அது பிறரைக்கொண்டு பார்ப்பிக்கத்தக்க ஒரு அலுவல் அல்ல. இந்த இரண்டு துறையையுங் கண்டுகொண்டோம்.

இனி அந்த அலுவலை நாம் எப்போது பார்க்க வேணும்? பிற்காலம் பிற்காலம் என்று வைத்துக்கொண்டிருக்கலாமா? ஒருபோதுமில்லை. அது இப்போதுதானே செய்ய வேண்டிய ஒரு அலுவல்; நாளைக்கு என்று வைக்கத்தக்கது அல்ல. அது ஒரு நிமிஷமாவது தாமதம் பொறாதது. எப்படியென்றால், பிரியமான கிறிஸ்தவர்களே , நமக்குக் கிடைத்திருக்கிற ஒவ்வொரு நிமிஷத்தையும் நமது ஈடேற்ற அலுவலுக்காக என்றே சருவேசுரன் தந்தருளுகிறார். ஆனபடியால், ஒவ்வொரு நிமிஷமுந்தானே நாம் அவருக்கு ஊழி யம்பண்ணி நம்முடைய ஆத்துமத்தைப் புண்ணியங்களால் அலங்கரித்துக்கொண்டிருக்க வேண்டியது.

வட்டிக்கு எடுத்த முதலுக்கு ஓயாமலே நாள்தோறும் வட்டி பெருகிக்கொண்டிருப்பது போல, நாம் சருவேசுரனுக்குச் செய்ய வேண்டிய ஊழியத்தின் கடனும் நாள் வீதம், மணித்தியால வீதம், நிமிஷ வீதம் பெருகிக் கொண்டு வருகிறது. இன்றைக்கு ஆண்டவரைச் சேவியாமல் நாளைக்குச் சேவிப்போம் என்று இருந்தால், நாளையிற் கடன் ஒரு புறங் கிடக்க, இன்றையிற் கடனும் தீர்க்க வேண்டிய கடன் தானே. வட்டிக்கு எடுத்த பணத்தை இந்த மாதம் இறாமல் மற்ற மாதம் இறுப்போம் என்று வைத்திருந்தால், இந்த மாதத்தின் வட்டி இல்லாமற் போய்விடுமா? மற்ற மாதத்தானோடு இந்த மாத வட்டியையுங் கூட்டியே இறுக்க வேண்டி வருமே. அதுபோல், பிற்காலம் சருவேசுரனுக்கு ஊழியம் பண்ணுவோம் என்று இருந்தால், அது பிற்காலத்துக்கு உரிய கடன். அதனால் இப்போது நடக்கிற இக் காலத்தின் கடன் அற்றுப் போகாது.

அல்லாமலும் பிற்காலம் என்றது மிகவும் சந்தேகமான ஒரு சாமான். சருவேசுரன் அதை நமக்குத் தருவாரோ, அல்லது, நாம் இப்போது அவருக்குக் காட்டுகிற நன்றி கேட்டுக்கு நீதியான ஒரு தண்டனையாக, அதை நமக்குத் தராமல் சீக்கிரத்திலே மரணத்தை வரவிடுவாரோ - சொல்லக்கூடியவர் யார் ? நாம் மரணத்தின் நடுவே சீவிக்கிறோம். நமது சீவியத்தின் நடுவே மரணம் வந்து நம்மை இறாஞ்சிக்கொண்டு போய்விடும். வயது வந்துதான் சாவோம் என்று சொல்லிக்கொண்டு இருக்க ஏதுவில்லை.

''ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு''. இராசாக்களென்ன பிரபுக்களென்ன, பாப்புமாரென்ன விசுப்புமாரென்ன, கப்பற்காபரென்ன பிச்சைக்காரரென்ன, சகலருக்கும் மரணம் காத்திராம்பிரகாரமே வரும். தமோக்கிளிஸ் என்ற கிரேக்கனுக்கு ஒரு புத்திமானான பெரியவன் சம்பிரமமான விருந்து கொடுத்தானாம். தமோக்களில் அந்த விருந்தின் நயத்தையும் பெரியவனின் செல்வ சம்பத்தையும் புகழ்ந்து பேசிக்கொண்டிருக்கும் வேளை, திடீரென்று கண்களை ஏறெடுக்கவே, தன் தலைக்கு மேலே உறை கழித்த கூரிய வாளொன்று ஒரு மயிரிற் தொங்க விட்டிருக்கிறதையும் அது எப்போது அறுந்து விழுந்து தலையைப் பிளக்குமோ என்ற நிலையிற் கிடக்கிறதையும் கண்டு அங்கம் நடுங்கி உள்ளம் பதறத் தொடங்கினானாம்.

இப்படியே நமது தலைக்கு மேலும் மரணம் என்கிற வாள் தொங்கிக் கொண்டிருக்கிறது. ஆதலால், பிறகு பார்த்துக் கொள்ளுவோம் என்று ஆத்தும ஈடேற்ற அலுவலைப் பின் போடுவதைப் போல பெரிய மதியீனம் இல்லை. ஓர் வேளை, நாம் ஒருக்கால் ஆத்துமத்தை இழந்தபின் மறுபடியும் அதை ஈடேற்றிக்கொள்ள இடமிருந்ததானால், பின் போட்டு வைத்தும் பார்க்கலாம். அப்படியோ இடமுமில்லை. ஒரு கண் கெட்டுப் போனால், மற்றக் கண்ணாவது பார்க்க உதவும். ஒரு கை ஒரு கால் இல்லாவிட்டால், மற்றக் கை காலாவது வழங்கும். இந்த அவயவங்கள் இல்லாமல் சீவிப்பவர்களும் உண்டு. ஆனால், ஆத்துமத்தை ஒரு தரம் இழந்து போனால், பிறகு ஈடேற் றுவதற்கு வேறு ஆத்துமம் இல்லையே. ஒரு சீவிய காலத்தை தனக்கு மோசம் ஆக்கிக்கொண்டால், ஆதாயம் ஆக்குகிறதற்கு வேறு சீவிய காலம் இல்லையே.

இயேசுவுக்கே புகழ் !!! மரியாயே வாழ்க