இயேசு தெய்வம் அனுபவித்த நெஞ்சை உருக்கும் இரகசிய வாதனைகள் 15

நம் இயேசுதெய்வத்தின் வேதனைகள் கொடிய தொடர்ச்சியான நீண்ட வேதனைகள். நாம் சிலுவைப்பாதையில் தியானிப்பது மட்டுமல்ல. துக்க தேவ இரகசியங்களில் தியானிப்பதுமட்டுமல்ல. நம் பரிசுத்த வேதாகமத்தில் வரும் இயேசுவின் திருப்பாடுகளில் வரும் வேதனைகள் மட்டுமல்ல. அதையும் தாண்டியது நம் தலைவர் அனுபவித்த கொடூர வேதனைகள். அநேக புனிதர்கள் இயேசுவின் பாடுகளை அதிகமாக தியானிப்பது நம் தெய்வத்தின் அளப்பறிய அன்பையும், புண்ணியங்களை சம்பாதித்து பாவிகளை மனந்திருப்பியும் உள்ளார்கள்.

இன்னும் சில புனிதர்கள் புனித அசிசியார், புனித தந்தை பியோ போன்றோர்கள் இயேசுவின் பாடுகளில் பங்காளிகளாக விரும்பி அவரின் திருக்காயத்தை தங்கள் உடல்களில் தாங்கி நம் தெய்வம் இயேசு அனுபவித்த பாடுகளை தாங்களும் அனுபவித்து லட்சக்கணக்கான ஆன்மாக்களை மீட்டார்கள். இப்போது தஞ்சை மறைமாவட்ட்த்தில் வாழும் ரோசி என்ற அருட்சகோதரி இயேசு கிறிஸ்துவின் ஐந்து திருக்காயங்களை தன்னுடலில் வாங்கி இயேசு தெய்வத்தின் பாடுகளை தாங்கி வேதனைகளை அனுபவித்து ஆன்மாக்களை மீட்டு வருகிறார்கள். ஏனெனில் “ சிலுவையிலேதான் மீட்சியுண்டு.. தேடும் வானக மாட்சியுண்டு “

அதே வழியில் இயேசுவின் பாடுகளை அதிகமாக நேசித்த புனித கிளாராம்மாள் சபையைச் சேர்ந்த முத். மரிய மதலேன் என்ற கன்னிகைக்கு கீழ்வரும் வெளிப்படுத்துதல் அருளப்பட்டது. இவர்கள் உரோமையில் வாழ்ந்தவர்கள்.

இயேசு மரிப்பதற்கு முந்தைய இரவில் அவர் பூங்கானத்தில் பிடிபட்டபின் வெளியில் தெறியாமல் அவருக்கு செய்யப்பட்ட இரகசிய உபாதைகளைப்பற்றி தனக்கு கொஞ்சம் வெளிப்படுத்தும்படி, முத். மரிய மதலேன் நமதாண்டரிடம் அன்போடு கேட்டு வந்தாள் அவருடைய விருப்பத்தை ஆண்டவர் ஏற்றுக்கொண்டு பின் வருமாறு அவரிடம் கூறினார். உலகில் உள்ள சகல மனிதர்களையும் விட அதிக ஈனமானவன் நான்தான் என்று யூதர்கள் கருதினார்கள். அதனால்,அவர்கள்,

1. என் இரு கால்களையும் ஒரு கயிற்றினால் கட்டி, மாடிப் படிக்கட்டுகள் வழியாக என்னைத் தரதரவென்று இழுத்துக்கொண்டு மிகவும் அசுத்தமான குமட்டல் வரக்கூடிய நிலவறைக்குள் அறைக்குள் என்னை தள்ளினார்கள்

2. என் ஆடைகளைக் களைந்து என் உடல் முழுவதிலும் கணுக்கள் உள்ள இரும்புச் சாட்டையால் தேள் கொட்டுவது போல் கொட்டினார்கள்.

3. என்னை மண்ணில் கிடத்தி என் தேகத்தை ஒரு கயிற்றினால் கட்டி ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு இழுத்துச் சென்றார்கள்.

4. ஒரு மரத்துண்டின் மீது ஒரு சுறுக்கு முடிச்சில் கட்டி அந்த முடிச்சு அவிழ்ந்து நான் கீழே விழும்படி என்னைக் கட்டித் தொங்கவிட்டார்கள். முடிச்சு அவிழ்ந்து நான் கீழே விழுந்தேன். இந்தச் சித்திரவதையைத் தாங்க முடியாமல் நான் ரத்தக் கண்ணீர் வடித்தேன்.

5. என்னை ஒரு மரக்கம்பத்தில் கட்டி வைத்து பற்பல ஆயுதங்களைக் கொண்டு என் உடலைத் துளைத்தார்கள்.

6. என்னைக் கற்களால் அடித்தும் எரியும் தீப்பந்தங்களால் சுட்டெரிக்கவும் செய்தார்கள்.

7. என்னை செருப்பு தைக்கும் குத்தூசிகளால் துளைத்தார்கள். கூரிய ஈட்டிகளால் என் தோல், சதை மற்றும் ரத்தக் குழாய்களைக் க குத்திக் கிழித்தார்கள். என் இரத்த நாளங்கள் கிழிந்தன.

8. ஒரு கம்பத்தில் என்னைக் கட்டி வெறும் கால்களோடு, நெருப்பாய் தகதகத்த ஒரு உலோகத் தகட்டின் மேல் நிற்கச் செய்தார்கள்.

9. ஓர் இரும்பு மகுடத்தை என் தலைக்குச் சூட்டி, மிக மிக அசுத்தமான ஒரு துணியால் என் கண்களைக் கட்டினார்கள்.

10. கூர்மையான ஆணிகள் நிறைந்த ஒரு நாற்காலியின் மீது என்னை உட்காரச் செய்து என் உடல் முழுவதும் ஆறாத காயங்களை ஏற்படுத்தினார்கள்.

11. என் காயங்களில் ஈயத்தையும் பிசினையும் ஊற்றினார்கள். அதன் பிறகு ஆணிகள் நிறைந்த நாற்காலியில் என்னை அழுத்தினார்கள். அப்போது அந்த ஆணிகள் என் சதையைத் துளைத்துக் கொண்டு இன்னும் ஆழமாக உள்ளே சென்றன.

12. எனக்கு மிகுந்த அவமானமும் வேதனையும் உண்டாகும்படி என்னுடைய பிடுங்கி எறியப்பட்ட தாடி மயிர்க்கால்களின் துவாரங்களில் ஊசிகளால் குத்தினார்கள். பின்பு என் இரு கைகளையும் என் முதுகின் பின்புறம் கட்டி சிறையின் வெளியே என்னை அடித்தும் உதைத்தும் இழுத்துச் சென்றார்கள்.

13. என்னை ஒரு சிலுவையின் மீது தூக்கியெறிந்து நான் மூச்சுவிட திணறும்படி என்னை இறுக்கிச் சிலுவையுடன் சேர்த்துக் கட்டினார்கள்.

14. நான் சிலுவையில் பூமியின் மீது படுத்திருக்கும்போது என் மீது ஏறி மிதித்துச் சென்று என் மார்பைக் காயப்படுத்தினார்கள். பிறகு ஒரு முள்ளை எடுத்து என் நாக்கின் உள்ளே குத்தினார்கள்.

15. மிகவும் அசுத்தமான கழிவுப் பொருட்களை என் வாயில் ஊற்றி, என்னை மிக மிக அருவறுப்பான மொழிகளால் தூற்றினார்கள். ‘‘எனக்கு ஆறுதல் அளிக்க யாராவது ஒருவரைத் தேடினேன்; ஆனால் யாரும் கிடைக்கவில்லை.

’’ பின்பு இயேசு அந்த சகோதரியைப்பார்த்து கூறியதாவது:

‘‘ஒவ்வொருவரும் இந்த பதினைந்து வகை சித்திரவதைகளையும் மதித்து வணங்கவேண்டும் என்று அறிவி. அவை ஒவ்வொன்றும் போற்றப்பட வேண்டும். யார் ஒருவர் இந்தப் பாடுகளில் ஒன்றையேனும் மிகுந்த அன்போடு எனக்குக் ஒப்புக்கொடுத்து, பக்தி விசுவாசத்தோடு நாள்தோறும் என்னை நினைக்கிறார்களோ அவர்களுக்குத் தீர்ப்பு நாளன்று முடிவில்லாத மகிமையை சன்மானமாக அளிப்பேன்’’ என்கிறார், இயேசு. ஒரு ஜெபமும் கற்றுக்கொடுத்தார் அது திருக்குடும்ப பக்திமாலையில் உள்ளது.

எங்கள் மீது அளவு கடந்த அன்பினால் ஒரு சிறு முனுமுனுப்பின்றி அத்தனை கொடிய வேதனைகளையும் எனக்காக, எங்களுக்காக தாங்கிய தெய்வமே ஒரு வேதனை அல்ல. உமது அத்தனை வேதனைகளையும், பாடுகளையும் நாள்தோறும் தியானிக்க தயாராக இருக்கிறோம்.

"என்னைப் பின்செல்ல விரும்புகிறவன், தன்னையே மறுத்துத் தன் சிலுவையை நாள்தோறும் சுமந்துகொண்டு என்னைப் பின்தொடரட்டும் “ லூக்காஸ் 9 : 23 – நம் இயேசு தெய்வம்..

நமக்காக எத்தனையோ இன்னல்களை தாங்கிய, தன் இன்னுடலைப் பலிப்பொருளாக மாற்றிய நம் அன்பு, நேச இயேசுவுக்காக, வாழ்க்கையில் நமக்கு வரும் சிலுவைகளை சுமப்போம். அவருக்கு சாட்சியாக வாழ்வோம். அதற்கான வரத்தை எங்களுக்குத்தாரும் இயேசு சுவாமி...

எங்கள் பெயரில் தயவாயிரும் ஸ்வாமி...தயவாயிரும்..

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !