மாதா அப்போஸ்தலர்கள் சபை (Society of Apostles of Mary) தூத்துக்குடி


Rev. Fr. Antony Xavier

மண்ணில் : 28.03.1925, இறைப் பணியில் : 25.03.1952, விண்ணில் : 27.03.2008

அன்னையிடம் வா!

"அழிந்து கொண்டிருக்கிற உலகமே, உன் அன்னையிடம், தேவதாயிடம் வா” என்று சங்க நாதம் எழுப்பியவர் சங். அந்தோணி சேவியர் சுவாமி. கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை. உலகம் அழிவுபாதையை நோக்கி செல்கிறது. அறிவியல் அறிஞர்களோ, பொருளாதார வல்லுனர்களோ, சமூக வாதிகளோ உலகிற்கு சமாதானத்தைக் கொண்டுவர முடியாது. இக்காலத்தில் தீமைகளால் சிக்கித் தவிக்கும் உலகம் உண்மையான அமைதியை பெற வேண்டுமானால் அது தேவ அன்னையிடம் திரும்பி வர வேண்டும். ஏனெனில் பாத்திமாவில் தோன்றிய தேவ அன்னை "நான் மட்டுமே உங்களுக்கு உதவ முடியும்...!" என்று கூறி, மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு பரிகார அன்பு செலுத்தப்பட வேண்டும் என்ற சமாதானத்திற்காக வழியை வழங்கினார்கள். ஆம்! அன்பே, பரிகார அன்பே உலகத்தை வெல்ல முடியும்; காக்க முடியும் என்பதை உணர்ந்த தந்தை அந்தோணி சேவியர் அவர்கள் அதற்காகவே தன்னை முழுவதும் அர்ப்பணித்தார்கள்.

இளம் குருக்களை உருவாக்கும் சிற்பி :

கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரத்தில் 28.03.1925-ம் நாளன்று பிறந்த தந்தையவர்கள் திருச்சி குருமடத்தில் குருத்துவ கல்வி கற்று, 25.03.1952ல் குருப்பட்டம் பெற்றார். முதலில் 1952-ம் ஆண்டு மணப்பாட்டில் உதவி பங்குக் குருவாக பணியாற்றிய அவர், சிறுவர், இளைஞர்களை நல்வழிப்படுத்தி தேவ அழைத்தலுக்கு வித்திட்டார். 1953-ம் ஆண்டு, தூத்துக்குடி மறைமாவட்டத்தில் ஆங்காங்கே தனித்தனியாக செயல்பட்டு வந்த இளைஞர் அமைப்புக்கள் அனைத்தையும் "தேன்கூடு" என்ற இயக்கத்தில் ஒன்று திரட்டி அதன் உருவாக்கத் திற்கு அடித்தளமிட்டார். 1956-60 ஆண்டுகள் மறைமாவட்டத்தின் பத்திரிக்கையான "ஞான தூதனின்” ஆசிரியராகவும், அதே சமயம் புனித சவேரியார் அச்சகத்தின் மேலாளராகவும் பொறுப்பேற்று அதிலும் தமது முத்திரையைப் பதித்தார். 1959 - 61 வரை தூத்துக்குடி குருமடத்தின் அதிபராக பணியாற்றி, பல நல்ல குருக்கள் உருவாகக் காரணமானார். குருக்கள் மீதும், குருத்துவத்தின் மீதும் மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டவர் தந்தை அவர்கள்.

1960 - 62 ஆகிய ஆண்டுகளில் ஆறுமுகநேரி மற்றும் 1965-73-களில் அடைக்கலாபுரம் பங்குத்தந்தையாகவும் திறம்பட பணியாற்றினார். எப்போதும் உடல்நலக்குறைவால் அவதியுற்று வந்த தந்தையவர்கள் 1973-ல் ஓய்வு பெற்று வள்ளியூர் பாத்திமா திருத்தலத்தில் தங்கினார். அங்கே பாத்திமா அன்னையின் காட்சிகளாலும், செய்திகளாலும் வயப்பட்டவர், அன்னையின் மாசற்ற இருதய பரிகாரப் பக்தியை பரப்புவதற்கென தன்னையே நேர்ந்து கொண்டார்.

சிறந்த எழுத்தாளர்:

தந்தை அவர்கள் எழுத்து துறையில் தனக்கென முத்திரையைப் பதித்துக் கொண்டார்கள். ஆண்டவர் யேசுவில் மரியா வால்டோர்ட்டா என்ற புனித பெண்ணிற்கு காட்சியாக வழங்கப்பட்ட நமதாண்டவரின் முழுவரலாற்றை ஆங்கில மொழியிலிருந்து தமிழாக்கம் செய்தார். "கடவுள் மனிதனின் காவியம்" என்ற அந்த நூல் 5 பாகங்கள் அவரால் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் "மரியாயின் குருக்கள் இயக்கம்” வெளியிட்டுள்ள சங்.ஸ்தாபனோ கோபி சுவாமிகளுக்கு தேவ அன்னை வழங்கிய செய்திகளை "மாதா தன் அன்புக் குருக்களுடன் பேசுகிறார்கள்” என்ற தலைப்பில் மொழிபெயர்த்து முதல் இரண்டு பதிப்புகளை வெளியிட்டார்.

புனித லூயிஸ் மரிய மோனபோர்ட்டின் மரியன்னையைப் பற்றிய அற்புத நூல்களான மரியாயின் மீது உண்மைப்பக்தி, மரியாயின் இரகசியம் ஜெபமாலையின் இரகசியம் போன்றவற்றை மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்கள். பாத்திமா மாதாவின் காட்சிகளை விவரிக்கும் வண்ணமாக "பாத்திமா காட்சிகள்" என்ற நூலை எழுதியவரும் இவரே. புனித பிலோமினம்மாளின் பக்தியை மீண்டும் கொண்டுவர, "புனித பிலோமினம்மாள் இறைவன் அளித்த தனிவரம்". ஆன்மாக்களை கடவுளை நோக்கி கவர்ந்திழுப்பதில் அவள் ஆற்றல் மிக்கவள் என்று அப்புனிதையின் வாழ்க்கை வரலாற்றை எழுதி, அவளது பக்தியைப் பரப்பினார்கள்.

தந்தை அந்தோணி சேவியர் அவர்களின் நூல்கள் அனைத்துமே தமிழகத் திருச்சபைக்கு கிடைத்த மாபெரும் பொக்கிஷங்களாகும்.

மாதாவின் அப்போஸ்தலர் :

புனித சிலுவை அருளப்பரின் எழுத்தர்களால் ஞான ஏகாந்த வாழ்வில் ஆர்வம் கொண்ட தந்தை அர்ச். லூயிஸ் மரிய மோன்போர்ட்டின் வழியில் பிந்திய காலத்தில் 'மாதாவின் அப்போஸ்தலர்களை' உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். 1980-ல் "மாதாவின் அப்போஸ்தலர்கள்” என்ற அமைப்பை உருவாக்கி, மாதாவின் பிள்ளைகளையும், அன்பர்களையும் ஒன்றிணைத்து அர்ச். லூயிஸ் மோன்போர்ட்டின்படி மாதாவுக்கு தங்களையே 'அன்பின் அடிமைகளாக' முழு அர்ப்பணம் செய்யும் 33-நாள் தயாரிப்பு என்ற பக்தி முயற்சியைக் கடைப்பிடிக்கச் செய்தார். அதற்கேதுவாக "மாதா பரிகார மலர்” என்ற மாத இதழை வெளியிட்டு வந்தார். மரியன்னையின் ஆண்டுகளில் "மாதா மாநாடுகளை” நடத்தி, தேவதாயின் பக்தியைப் பரப்பினார். பாத்திமா செய்திகளின்படி மரியாயின் மாசற்ற இருதயத்திற்கு நிந்தை பரிகாரம் செய்யும் நோக்கத்திறகாக தூத்துக்குடி, சகாய மாதா பட்டணத்தில் 1990ம் ஆண்டில் மாதா பரிகார சேத்திரம் ஒன்று கட்டினார். 1992-ல் மாதா அப்போஸ்தலர்கள் சபையை ஏற்படுத்தி அதனை 1999-ல் துறவற நோக்குடன் சீர்திருத்தி அமைத்தார்.

2000-ம் ஆண்டில் மாதாவின் ஊழியத்திற்கென சகாயமாதா பட்ட "மாதாவின் சூசை அச்சகத்தை" நிறுவினார். அவர் உருவாக்கிய அப்போஸ்தலர்கள் சபை' (Secular Order) பொதுநிலையினரின் பக்தி என்ற அந்தஸ்தில் திருச்சபையில் ஊழியம் செய்யவென அதனை மாற்றி அதில் '5' இளைஞர்களும், 5 இளம் பெண்களும் தனித்தனி துறவறவாம் அனுசரித்து மாதாவின் பரிகார பக்தியை அனுசரித்து வருகிறார்கள்.

மரியாயின் மாசற்ற இருதயத்தின் வெற்றியை துரிதப்படுக்க அழிவில்லாமல் உலக சமாதானம் கொண்டு வர உழைத்தார்கள். அதற்கென "ஜெய இராக்கினி சகாய அன்னை " ஆலயம் அமைக்க விரும்பி அடித்தளம் அமைத்து கட்டுமானப் பணியில் ஈடுபட்டார்கள்.

தந்தையின் பணிவு :

1985-ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் நடந்த நிகழ்ச்சி இதற்கு அத்தாட்சி. தூத்துக்குடி ஹோட்டல் சோமநாத் காட்டேஜ் (இன்று A.V.M மருத்துவமணை இருக்கும் இடம்) சுவிட்சர்லாந்தின் எக்கோன் குருமடத்தின் பேராசிரியர் சங். பேட்தஸ் லா ரோச் சுவாமிகள் திருப்பலி நிறைவேற்றினார்கள். சங். அந்தோணி சேவியர் சாமி இச்சமயத்தில் இங்கு வந்தார்கள். திருப்பலி முடிந்தது. நன்றியறிந்த செபம் முடிந்து எழுந்து வந்த சங். லா ரோச் சுவாமியிடம் சங். அந்தோணி சேவியர் கேட்ட முதல் கேள்வி, நீங்கள் பாப்பரசரை ஏற்றுக் கொள்கிறீர்களா? அந்த கேள்விக்கு பதிலளித்த சங் லா ரோச் சுவாமிகள் மகிழ்ச்சியோடு கூறுவார் பாப்பரசரை ஏற்றுக் கொள்கிறோம். தல ஆயரை ஏற்றுக்கொள்கிறோம். எனவே, திருப்பலி புத்தகத்தில் தான் வைத்திருந்த துண்டு சீட்டை எடுத்துக் காட்டினார். அதுவே பாப்பரசர் பெயரும், தூத்துக்குடி ஆயர் எஸ்.டி அமலதாசன் பெயரும் இருந்தது. திருப்தி அடைந்த நமது சுவாமிகள் சங். லா ரோச் சுவாமிகள் முழுமையாக ஏற்றுக் கொண்டார். எனவே சங். அந்தோணி சுவாமி அவர்கள் திருச்சபை சட்டத்தை மதித்தார்கள். திருச்சபையின் அதிகாரிகளுக்கு எப்போதும் பணிவுடன் செயல்பட்டார்கள் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கலாம். ஆனால் திருச்சபையின் அதிகாரிகளுக்கு அல்லது திருச்சபைக்கு எதிராக செயல்படவில்லை.

இயேசு மரி இருதய பக்தி

தம் வாழ்நாள் எல்லாம் இறை ஊழியம் புரிந்து, இயேசு மரியா இருதயங்களை நேசித்து, பிறரையும் நேசிக்கச் செய்து வந்த சங். அந்தோணி சேவியர் சுவாமிகள் 27.03.2008 அன்று அதிகாலை 5 மணியளவில் தமது 83-வது வயதின் நிறைவில் நன் மரணமடைந்தார்கள். இறுதி வரை உத்தமக் குருவாக திருச்சபையையும் மறைமாவட்டத்தையும் நேசித்து உழைத்து வந்த தந்தையவர்களின் அடியொற்றி நடப்போம்!

அருட்திரு. பிரான்சிஸ்