இறைவனின் தாய் அன்னை மரியாள் PART- 3

இறைவனின் தாய் அன்னை மரியாள் - கி.பி 431 

• தாய் அன்பை உலக மொழிகளில் எடுத்துரைக்கப் போதிய வார்த்தைகளே இல்லை. அதையே தூய அகுஸ்தினார், “ஒரு மனிதனின் உடலில் உள்ள உறுப்புகள் எல்லாம் நாக்குகளாக மாறினும் மரியன்னையை, அவருடைய தாய்மைக்கு ஏற்றவாறு புகழ முடியாது” என்கிறார்.

• இரண்டாம் வத்திக்கான் சங்கம், ”ஆராதனை கடவுளுக்கு மட்டும் தான். மற்ற வணக்கங்கள் புனிதர்களுக்கு. இவ்வடிப்படையில் அன்னை மரியாள் கிறிஸ்துவின் தாயும், இறைவனின் தாயுமாக இருப்பதால் அவருக்குச் சிறப்பான வணக்கம் செலுத்தப்படுகின்றது” என்று கூறுகின்றது.

• தந்தையில்லாமல் கடவுளால் பிறக்க முடிந்தபோது, தாயில்லாமல் அவரால் பிறக்க முடியவில்லை. அன்னை மரியாளினால் கடவுள் மகிமைக்குள்ளானர் என்பதல்ல பொருள்; மகிமை பொருந்திய கடவுளை ஈன்றெடுத்ததால் அன்னை மரியாள் இறைவனின் தாயாகும் பேறுபெற்றார் என்பதே கத்தோலிக்க விசுவாசம்.

• அன்னை மரியாளுக்கு ஆயிரம் சிறப்பியல்புகள் இருந்தாலும், இறைவனின் தாய் என்பதே இயேசுகிறிஸ்துவின் தாய்க்கு மகிமை சேர்ப்பதாக உள்ளது.

கி.பி 431ஆம் ஆண்டு ஜுன் மாதம் 7ஆம் நாள் முதல் 31ஆம் நாள் வரை நடைபெற்ற எபேசு திருச்சங்கம் “அன்னை மரியாள் கடவுளின் தாய்” (Mary is Theotokos) என்று உறுதியிட்டுப் பிரகடனம் செய்தது. இந்தத் திருச்சங்கம் நடைபெற்றபோது மன்னராக இருந்தவர் இரண்டாம் தியோடோசிஸ். எபேசு திருச்சங்கம், அலெக்ஸாண்ட்ரியா ஆயர் சீரில் தலைமையில் நடைபெற்றது. அந்தத் திருச்சங்கம் கூட்டப்பட்டதற்கு முக்கியக் காரணம், கொன்ஸ்தாந்திநோபிளின் ஆயராக இருந்த நெஸ்டோரியஸின் தப்பறைக் கொள்கைகளே. “இயேசு ஓர் ஆள் அல்ல, அவர் இரண்டு ஆட்கள். ஒன்று இயேசு மனிதன்; இன்னொன்று இயேசு கடவுள். இயேசு அன்னை மரியாவிடமிருந்து பிறக்கும்போது, சாதாரண மனிதராகத் தான் பிறந்தார். பின்னர் தம் வாழ்க்கைக் காலத்தில் கடவுளாக மாறினார்” என்று ஆயர் நெஸ்டோரியஸ் கூறினார்.

இயேசு மனித இயல்பு, இறை இயல்பு (Human & Divine nature) ஆகிய இரண்டு இயல்புகளையும் கொண்டவர். இதற்கு மாறாகப் போதித்த நெஸ்டோரியஸின் போதனையைச் சரி செய்வதும், “இயேசு பிறக்கும்போது சாதாரண மனிதனாகப் பிறந்தார் என்பதால் அன்னை மரியாளை கடவுளின் தாய் என்று சொல்லக்கூடாது. மாறாக இயேசுவின் தாய் என்று தான் சொல்லவேண்டும்” என்ற போதனைத் தவறானது என்பதை ஐயந்திரிபுற உலகிற்கு அறிவிப்பதும், ஆயர் சிரில் தலமையில் நடந்த எபேசு திருச்சங்கத்தின் நோக்கமாக இருந்தது. அந்தத் திருச்சங்கம் நெஸ்டோரியஸின் தப்பறையான போதனைகளைக் கண்டித்ததோடு, அவரையும் அவரது கூட்டத்தையும் திருச்சபையை விட்டு வெளியேற்றியது.

இந்தத் திருச்சங்கத்தில், “இயேசு, இறை மற்றும் மனித இயல்புகளைக் கொண்ட ஒரே ஆள்” என்ற விசுவாசக் கோட்பாடு மீண்டும் பிரகடனம் செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் ”அன்னை மரியாள் கடவுளின் தாய்” (Theotokos) என்று அறுதியிட்டு உறுதி செய்தது. அதாவது அன்னை மரியாள் கடவுளாகிய இயேசுவைப் பெற்றெடுத்ததால் கடவுளின் தாய் என்றே அழைக்கப்படவேண்டும் என்று எபேசு திருச்சங்கம் ஆணித்தரமாக இவ்விசுவாச சத்தியத்தை உறுதியுடன் பிரகடனம் செய்தது.

அன்னை மரியாயின் தனிப்பெரும் பேறானக் கடவுளின் தாய் என்பது, இயேசு இறை-மனித இயல்புகளை உள்ளடக்கிய ஒரே கடவுள் என்பதால் உண்மையாகிறது. இயேசு கடவுளின் மகன் மட்டுமல்ல. இயேசு கடவுள் ஆவார். இயேசு கடவுள் என்றால் அன்னை மரியாள் கடவுளின் தாயே!

இயேசுவக்கே புகழ் ! மாமரித்தாயே வாழ்க