31 நாள் சிறப்பு ஜெபமாலை எட்டாம் நாள் அருள் நிறைந்த மரியாயே வாழ்க

இம்மந்திரத்திர்க்கு மேல்நாட்டு மொழியில் சாதாரணமாய் வழங்கும் மொழி, சம்மனசின் வாழ்த்து அல்லது சம்மனசின் மங்களம் . இச்செபம் பரலோகத்துக்கு உரியது . மகா அழ்ந்த கருத்துக்கள் அடங்கினதாக இருக்கிறபடியால் கன்னித்தாயும் இயேசுவும் தான் இதைச் சரிவரக் கண்டுபிடிக்க முடியும் என்றார் முத். ஆலன் ரோச் . இது மரியன்னைக்குச் சொல்லப்பட்ட மங்களமானபடியாலும், கபிரியேல் வான தூதர் கொண்டு வந்த நற்செய்தியானதாலும் இதன் மதிப்பு உயர்ந்தது.

சம்மனசின் வாழ்த்து தேவதாயைப் பற்றிச் சொல்லக்கூடிய போதனையின் தொகுதி . இதில் இரு பகுதி உள்ளது . முந்தியது தேவதாயின் மகிமையைக் கூறுகிறது . பிந்தியது அவரது நன்மைத்தனத்திளிருந்து அடையக்கூடியவைகளைக் காட்டுகிறது . முதல் பாகத்தில் உள்ளது மகா பரிசுத்த திரித்துவம் மொழிந்தது . மற்றது அர்ச் எலிசபெத்தமாளின் கூற்று . இரண்டாம் பாகம் திருச்சபை அமைத்தது 

உலக சரித்திரத்திலேயே அதி உன்னத நிகழ்ச்சி நித்திய வார்த்தையின் மனிதாவதாரம் .அவர் உலகத்தை இரட்சித்து மனிதனுக்கும் , தேவனுக்கும் இடையில் சமாதானத்தை மறுபடியும் நிறுவியவர் . கபிரியேல் சம்மனசு  மாமரிக்கு மங்களம் கூறியபோது இந்நிகழ்ச்சி நடைமுறையில் வந்தது 

சம்மனசின் மங்களத்தில் பிதாப் பிதாக்களுடையவும் , தீர்க்கதரிசிகளுடையவும் , அப்போஸ்தலர்களுடையவும் விசுவாசத்தையும், நம்பிக்கையையும் காணலாம் . வேதசாட்சிக்கு அசையாத உறுதியையும் , பலனையும் இது பொழிந்தது . திருச்சபையின் வேத பாரகர்களுக்கு ஞானம் இது ;ஸ்துதியர்களுக்குப் பிரமானிக்கமும் , துதியர்களுக்கு வாழ்வும் இது . இது வரப்பிரசாத சட்டத்தின் புதிய சங்கீதம் . சம்மனசுக்களுக்கும் , மனிதர்களுக்கும் ஆனந்தம் . பேய்களைக் கலங்கடித்து வெட்கத்தை ஊற்றித் துரத்தி விரட்டும் . காரணம் சம்மனசின் மங்களத்தால் கடவுள் மனிதரானார் , கன்னி கடவுளின் தாயானார் , நீதிமான்களுடைய ஆத்துமங்கள் பாதாளத்திலிருந்து விடுதலை அடைந்தன . மோட்சத்தின் காலி ஆசனங்கள் நிறைந்தன. அத்தோடு பாவம் மன்னிக்கப்பட்டது . நமக்கு வரப்பிரசாதம் வழங்கப்பட்டது . நோயாளிகள் சுகமானார்கள் . மரித்தோர் திரும்பவும் உயிர் பெற்றார்கள் . அகதிகள் வீடு வந்து சேர்ந்தனர் , தமத்திருத்துவத்தின் கோபம் தணிக்கப்பட்டது , மனிதர்கள் நித்திய சீவன் அடைந்தனர் 

இறைவனுடைய மகத்துவத்தைப் போல் பெரிது ஒன்றும் இல்லை . பாவத்தின் ஈனத்தைப் போல வேறொரு ஈனமும் கிடையாது . எனினும் நாம் அவருக்குச் செலுத்தும் வாழ்த்துதலையும், விண்ணப்பத்தையும் அவர் தள்ளி விடுவதில்லை . சம்மனசின் மங்களம் ஓர் அருமையான கீதம் . மனிதாவதாரம் இரட்சணியம் என்னும் வரப்பிரசாதத்துக்காக செலுத்தும் நன்றியின் கீதம் . இதில் பிதாவுக்கு மங்களம் சொல்லுகிறோம் . ஏனெனில் அவர்தம் ஏக குமாரனையே நமக்கு இரட்சகராகத் தந்தார். சுதனுக்கு நன்றி கூரிகிறோம். ஏனெனில் வானத்தை விட்டுப் பூமியில் வந்து மனிதராகிய நம்மை இரட்சித்தார். பரிசுத்த ஆவிக்குத் தோத்திரம் புரிகிறோம் . ஏனெனில் கன்னி மாமரியின் உதரத்தில் நமதாண்டவருக்குப் புனித உடலை உருவாக்கினார். மூவருக்கும் நன்றியரிந்த தோத்திரமாக 'அருள் நிறைந்த மரியே' என சொல்லுகிறோம் 

இம்மந்திரத்தில் நேர்முகமாகக் கடவுளின் தாயைப் புகழ்கிறோம் .எனினும் அது தமத்திருத்துவத்திற்குப் பெரும் மகிமை வளர்க்கிறது . தேவதாயைப் புகழும்போது பிதாவின் அருமையான சிருஷ்டியை , சுதனின் அமலோற்பவ மாதாவை பரிசுத்த ஆவியின் பத்தினியைப் புகழ்வதால் திரித்துவத்திற்குப் புகழ்ச்சி தானே ? எலிசபெத்தம்மாள் வாழ்த்தின போது தாய் அந்த வாழ்த்துதலை உடனே கடவுளின் பக்கம் திருப்பினார் அன்றோ ? அது போல் இப்பொழுதும் செய்கிறார் .

செபம் 

செபமாலை இராக்கினியே , அமலோற்பவ மாமரியே , மனுமக்களுக்காக மனுப்பேசுகிறவரே, பாத்திமாவில் நீர் அளித்த வாக்கும் , நம்பிக்கையும் சீக்கிரம் நடைமுறைக்கு வரக் கிருபை செய்யும். உலகில் எத்தனையோ மக்கள் உயிரிழந்தார்கள் . வேறு எத்தனை பேர் அடிமைத் தளங்களிலும் இக்கட்டிலும் நெஞ்சுருகிக் கிடக்கின்றனர் . சமாதானத்துக்கு அடுத்தவைகளை நாங்கள் அறிய வேண்டும் என்பது மாசில்லா உமது இருதயத்தின் மட்டுக்கடங்கா ஆசையல்லவா? தேவதாயே, நீர் பரிகாரத்தையும், செபமாலை செபத்தையும் எங்கள் பாவங்களுக்காக உள்ளம் உடைந்த மனஸ்தாபத்தையும் விரும்புகிறீர் என்றீர் . கிறிஸ்தவர்கள் யாவரும் உமது வேண்டுகோளுக்குச் செவி சாய்க்கும்படி செய்தருளும் . இந்தியாவின் மேல் உமது கிருபைக் கண்களைத் திருப்பியருளும் . நங்கள் ஏழை மக்கள் அம்மா . தீயசக்திகளின் மாய வலையில் இருந்து எங்களைக் காப்பாற்றும் . அதற்காக உலக கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்க்கையில் பழுதற்றவர்களாய் இருக்கச் செய்யும் அம்மா , இரக்கமுள்ள செபமாலை மாதாவே 

ஆமென் --தொடரும்

நன்றி சகோதரர் : அகஸ்டஸ் அவர்கள்