சேசுநாதர் சிலுவையிலிருந்து வசனித்த 6-ம் வாக்கியம்

சேசுக்கிறிஸ்துநாதருடைய திருப்பாடுகளின் பேரில் தியானங்கள்

அர்ச்சியசிஷ்ட வாரத்தில் வரும் செவ்வாய்க்கிழமை 42- ம் தியானம்

சேசுநாதர் சிலுவையிலிருந்து வசனித்த 6-ம் வாக்கியம்

1 - ம் ஆயத்த சிந்தனை

சேசுநாதர் கண்களை ஏறெடுத்துத் தமது பிதாவை நோக்கிச் சகலமும் நிறைவேறிற்றென்று 'சொல்வதை நீ கேட்பதாக ரூபிகரித்துக் கொள்.

2-ம் ஆயத்த சிந்தனை

புண்ணியத்திலும் உன் பரிசுத்த அந்தஸ்திலும் பின் வாங்காமல் மரணம் வரைக்கும் அதிலே நிலை கொள்வதற்க தேவ அனுக்கிரகத்தை மன்றாடிக் கொள்.

தியானம்

நமது திவ்ய கர்த்தர் சிலுவை மரத்திலே தொங்கி, சரீரத்திலும் ஆத்துமத்திலும் கடின உபத்திரவ வருத்தங்களைப் பொறுமையுடன் அநுபவித்துக் கொண்டிருக்கும்போது, தமது மரணம் நெருங்கியிருக்கிறதாகக் கண்டு, தமது பிதா தமக்குக் கொடுத்த வேலையைக் குறித்து யோசித்துப் பார்க்கிறார்; ஆதாம் ஏவாள் மனுஷ சந்ததிக்குக் கொண்டு வந்த பெரும் சாபத்தைத் தாம் நீக்கிப் போட்டாரென்றும், நரக சர்ப்பத்தோடு சண்டை தொடுத்து வெற்றி கொண்டாரென்றும், உலகத்துக்குத் தெரியாத தாழ்ச்சி, கீழ்ப்படிதல், கற்பு, தரித்திரம் முதலிய புண்ணியங்களின் மாட்சிமையைத் தெரியச் செய்தாரென்றும், கடைசியாய்த் தமது நித்திய பிதா மனிதருக்காகச் செய்யவேண்டுமென்று ஆசித்ததெல்லாம் தாம் செய்து முடித்தோமென்றும் அறிந்து, “எல்லாம் நிறைவேறிற்று”

என்று திருவுளம்பற்றினார்.

ஆ! என் பிரிய நேசனே! நமது இரட்சகருடைய கீழ்ப்படிதலையும் பிரமாணிக்கத்தையும் கொஞ்ச நேரம் யோசித்துப் பார். தாம் செய்ய வேண்டுமென்று பிதாவாகிய சர்வேசுரன் ஆசித்ததெல்லாம் குறைவின்றி உத்தமமான விதமாகவும், பிரமாணிக்கவும் செய்து முடித்தார்.

ஓர் கிறீஸ்தவன் தன் அந்தஸ்தின் கடமைகளை எத்தனை முறை மீறி நடக்கிறான்! ஞானஸ்நானத்தில் தான் கொடுத்த வார்த்தைப்பாடுகளை மீறி நடந்து, பத்துக் கற்பனைகளையும் திருச்சபை கட்டளைகளையும் அடிக்கடி அலட்சியம் செய்து வருகிற கிறீஸ்தவன் சாகும்போது சகலமும் நிறைவேறிற்று என்று, அதாவது சர்வேசுரன் என்னிடத்தில் ஆசித்ததெல்லாம் செய்து முடித்தேன் என்று எப்படிச் சொல்லுவான்?

ஆனால் சகலத்தையும் துறந்துவிட்டு உலகத்துக்குச் செத்து உத்தமர்களாகிச் சாங்கோபாங்கத்தில் வளர்ச்சியடையும்படி இவ்விடம் வந்திருக்கும் நாம் சகலமும் நமது மனப்படி நடக்க ஆசித்து, மற்றவர்களுக்கு அமைந்து நடக்க மனமின்றி நமது ஒழுங்குகளை அடிக்கடி மீறி நடந்து பேருக்கு மாத்திரம் பரித்தியாகம் செய்பவர்களென்று பிதற்றித் தாழ்ச்சி, பொறுமை, கீழ்ப்படிதல், தரித்திரம், ஒறுத்தல் ஆகிய சாங்கோபாங்கத்துக்குரிய புண்ணியங்கள் இன்னவை என்று முதலாய்த் தெரியாதிருக்க மரணவேளையில் சகலமும் நிறைவேறிற்றென்று சொல்ல நமக்கு வாய் வருமோ?

பிரிய சகோதரனே, தீர யோசித்துப் பார்த்தால் சந்நியாச ஒழுக்கம் முதலாய்ப் நிச்சயம் நம்மிடத்தில் இல்லையென்று அறிந்து கொள்வோம். மற்ற கிறீஸ்தவர்களைப் போல பத்துக் கற்பனைகளையும் திருச்சபை கட்டளைகளையும் மாத்திரம் அநுசரித்தால் போதுமென்று நாம் எண்ணியிருந்தால் உலகத்திலேயே இருந்திருக்கலாம். ஆனால் சர்வேசுரனுக்கு விசேஷவிதமாய் ஊழியம் செய்யும் பொருட்டு அவரால் அழைக்கப்பட்டிருக்க, நாம் இவ்வளவு வெதுவெதுப்புள்ளவர்களாகவும் விசேஷ புண்ணியங்களைச் செய்யாமல் உலக காரியங்களில் வெகு நாட்டமுள்ளவர்களாகவும் ஜீவித்து வருவோமாகில் மரண வேளையில் எல்லாம் நிறைவேறிற்றென்று சொல்ல எப்படித்துணிவோம்? ஆகையால் இந்தப் பரிதாபத்துக்குரிய குருட்டாட்டத்தை விட்டு விட்டு, நமது சீவியத்தைத் திருத்தி, தாழ்ச்சி, கீழ்ப்படிதல், தரித்திரம், ஒறுத்தல் முதலிய புண்ணியங்களை நுணுநுணுக்கமாய் அநுசரித்து, நமது சகோதரருக்கும் நம்மைப் பார்க்கும் மற்ற ஜனங்களுக்கும் நல்ல மாதிரிகை வருவித்து மரண வேளையில் எல்லாம் நிறைவேறிற்றென்று சொல்லும்படியான விதமாய் நடந்து கொள்வோமாக.

சேசுநாதர் சிலுவையில் தொங்கும்போது பிதாவாகிய சர்வேசுரன் தமக்குக் கட்டளையிட்டதெல்லாம் செய்து முடித்ததாக அறிந்தபின் மனிதர்களுக்காகத் தாம் அநுபவித்த கஸ்தி நிர்ப்பந்தங்களைக் குறித்து யோசித்துப் பார்த்து அவர் நம்மை நோக்கி ஓ! மனிதர்களே! பசாசின் அடிமைத்தனத்தில் அகப்பட்டிருக்கும் ஏவாளின் மக்களே! கேளுங்கள். இதோ உங்களை மீட்டு இரட்சிக்கும் பொருட்டு நாம் இவ்வுலகத்தில் மனிதாவதாரம் செய்து, சிறு குழந்தையாயிருக்கும் போதே நமது உதிரத்தை உங்களுக்காகச் சிந்தி, முப்பது வருஷகாலமாகக் கடின வேலை செய்து, எளிமையாய்ச் சிவித்து, நீசனாகப் பாவிக்கப்பட்டு, பின்பு மூன்று வருஷகாலமாய் வெயில், மழை, பசி, தாகம் பாராமல் ஊரெங்கும் சுற்றித் திரிந்து, நமது வேதத்தைப் போதித்துக் கடைசியாய் யூதாசால் சதிசெய்யப்பட்டு, மற்ற சீஷர்களால் கைவிடப்பட்டு, கள்ளனாகப் பிடிக்கப்பட்டு, தெருவுக்குத் தெருவாய் இழுக்கப்பட்டு, பொய்ச்சாட்சிகளால் குற்றம் சாட்டப்பட்டு, அநியாயமான நடுவர்களால் விசாரிக்கப்பட்டு, கொடூரமான அடிகளால் சரீரம் முழுவதும் கிழிக்கப்பட்டு முள்முடியால் தலை ஊடுருவப்பட்டு, கடைசியாய் இதோ சிலுவையில் அறையப்பட்டு. மூன்று மணி நேரம் தொங்கிக் கொண்டு வெகு சீக்கிரத்தில் உயிர் விடப்போகிறோம்.

இவ்விதமாக உங்களுக்குச் செய்ய வேண்டியதெல்லாம் செய்து முடித்தோம் என்னும் அர்த்தமாக "நிறைவேறிற்று" என்று நம்மைப் பார்த்துச் சொல்லுகிறார், உங்களுக்காக நாம் செய்யக் கூடுமாயிருந்தும் செய்யாமல் விட்டது ஒன்றுமில்லை. ஒரு சிநேகிதன் தன் சிநேகிதனுக்கும், பெற்றோர் தங்கள் மக்களுக்கும் செய்வதைவிட நாம் உங்களுக்கு அதிகமாகச் செய்தோம். எனது மாமிசத்தைப் போசனமாகவும், இரத்தத்தை பானமாகவும் தந்தோம். இதைவிட உங்களுக்கு அதிகமாய்ச் செய்யக் கூடுமானதென்ன? நீங்களே சொல்லுங்கள். சகலத்தையும் உங்களுக்காகச் செய்து முடித்தோம். இனி நாம் கேட்பதைச் செய்வது உங்கள் கடமை. உங்கள் சிநேகத்தை நமக்குக் கொடுத்தால் போதும். நாம் உங்களை வைத்திருக்கும் அந்தஸ்தில் இருந்து கொண்டே பிரமாணிக்கமாகவும் சகலத்திலும் உங்கள் பெரியவர்களுடைய இஷ்டப்படியும் நடந்து உங்கள் இருதயத்தை நமக்கு ஒப்புக்கொடுப்பீர்களேயாகில் அதுவே போதும்.

படைக்கப்பட்ட வஸ்துக்களுக்கு உங்கள் இருதயத்தில் இடம் கொடாமல் உங்கள் முழு இருதயத்தையும் நமக்கு வாசஸ்தலமாக விட்டுவிடக் கடவீர்கள் என்கிறார்.

ஆ! என் திவ்ய இரட்சகரே! இதோ உமது வார்த்தைகளைக் கேட்டு உமது சிலுவையின் அடியில் சாஷ்டாங்கமாய் விழுந்து கிடக்கும் இந்த நன்றிகெட்ட துரோகியைப் பாரும். தேவரீர் அடியேனுக்கு இவ்வளவு உபகாரம் செய்திருந்தும் அதெல்லாம் சட்டை பண்ணாமல் நாள்தோறும் உமக்குத் துரோகம் செய்து வருவதால், வெகு துயரப்பட்டு அழுகிறேன். நீர் என் இருதயத்தைக் கைம்மாறாகக் கேட்பதால் இதோ அதை முழுதும் உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன் இது இனி என் இருதயதயமல்ல உமது இருதயமே உமது பரிசுத்த சித்தமே ஆகக்கடவது ஆண்டவரே என் இறுதிக் காலத்தில் நீர் ஆசித்தப்படி சகலத்தையும் குறைவற நிறைவேற்றினேன் என்று சொல்லும் பாக்கியம் அடியேனுக்குக் கிடைக்கும்படி அநுக்கிரகம் செய்தருளும்.