சேசுநாதர் சிலுவையிலிருந்து வசனித்த 7-ம் வாக்கியம்

சேசுக்கிறிஸ்துநாதருடைய திருப்பாடுகளின் பேரில் தியானங்கள்

அர்ச்சியசிஷ்ட வாரத்தில் வரும் பெரிய புதன்கிழமை 43 -ம் தியானம்

சேசுநாதர் சிலுவையிலிருந்து வசனித்த 7-ம் வாக்கியம்

1- ம் ஆயத்த சிந்தனை

சேசுநாதர் உயிர்விடுகிறதற்கு முன், பிதாவே! உமது கரங்களில் என் ஆத்துமத்தை ஒப்புக்கொடுக்கிறேன் என்று சொல்வதை நீ கேட்பதாகப் பாவித்துக் கொள்.

2 - ம் ஆயத்த சிந்தனை

உன் அவஸ்தை நேரத்தில் உலக காரியங்களைக் குறித்து நினையாமல் உன் ஆத்துமத்தைப் பற்றி நினைக்கவும், தேவத்திரவிய அநுமானங்களைப் பக்தியோடு பெற்று என் ஆத்துமத்தை உமது கரங்களில் ஒப்புக் கொடுக்கிறேன் என்று சொல்லும் பாக்கியம் உனக்கு அளிக்கும்படியாக சர்வேசுரனைப் பார்த்து மன்றாடு

தியானம்

தாம் பலியாகும் சிலுவைப் பீடத்திலிருந்து நமது ஆண்டவர் நமக்குச் செய்த பிரசங்கத்தின் கடைசி வார்த்தைகளாக “பிதாவே உம்முடைய கரங்களில் என் ஆத்துமத்தை ஒப்புக்கொடுக்கிறேன்” என்றார். அதாவது நீர் எனக்குக் கட்டளையிட்டதெல்லாம் குறைவற நிறைவேற்றினேன். மனித சந்ததியை நரகப் பசாசின் கொடுங்கோன்மையினின்று மீட்டு இரட்சித்து, அவர்களுடைய இரட்சணியத்தை எளிதில் கண்டடைவதற்கான உபாயங்களையும் வழிமுறைகளையும் அவர்களுக்குப் படிப்பித்துக் காண்பித்தேன். மோட்சத்தில் அவர்கள் சம்பாவனை அதிகரிக்கும்படி சகலவித புண்ணியங்களையும் நானே அவர்களுக்கு உத்தமவிதமாய் அநுசரித்துக் காட்டினேன், அன்றியும் அவர்களுடைய ஈடேற்றத்துக்காகப் படாத பாடெல்லாம் பட்டு, என் இரத்தம் முழுவதும் சிந்தி, மூன்று மணி நேரமாக இந்தச் சிலுவையின் கொடிய வேதனையை அனுபவிக்கிறேன். ஆனால் இதெல்லாம் போதாதென்று இதிலும் கடூர வேதனையை நான் அநுபவிக்க வேண்டுமென்று தேவரீருக்கு மனமிருந்தால், இதோ! என் உயிர் உமது கையில் இருக்கின்றது, உமது சித்தத்தின்படி நடக்க ஆயத்தமாயிருக்கிறேன் என்று நமது ஆண்டவர் வசனிக்கிறார்.

நமக்கும் யாதொரு சிலுவை வரும்போது முறையிடாமல் நமது ஆண்டவரைப் பின்பற்றித் தேவ சித்தத்துக்கு அமைந்திருந்தால் எவ்வளவோ பாக்கியமுள்ளவர்களாயிருப்போம். இப்படிப்பட்ட சமயத்தில் நம்மை முழுதும் சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுத்து அவருடைய தேவ சித்தத்துக்குக் கீழ்ப்படிவோமாகில் இதிலேயே சாங்கோபாங்கம் அடங்கியிருக்கிறதென்று ஓர் அர்ச்சியசிஷ்டவர் சொல்லியிருக்கிறார். நமது மரண வேளையில் அவ்விதமாய் நடக்கவேண்டும். ஆனால் நமது சீவிய காலத்தில் இவ்விதம் நடக்காவிட்டால் எப்படி அவஸ்தை சமயத்தில் நமது கஸ்தி துன்பங்களைப் பொறுமையோடு அநுபவித்துத் தேவ திருவுளத்துக்கு அமைந்திருக்கக் கூடும்? ஆகையால் இப்போதே நமதுசீவிய காலத்திலேயே சகல கஸ்தி துன்பத்திலும் தேவ சித்தத்துக்கு அமைதலென்னும் அந்த உந்நத புண்ணியத்தைக் கைக்கொள்ள பிரயாசைப்படுவோமாக.

ஆ! என் ஆண்டவரே! என்னை இரட்சிக்கும் தேவரீர் கடூரமான சிலுவை மரணத்துக்கு உள்ளானதுடன் உமது பிதாவுடைய சித்தத்துக்கு அமைந்து இன்னும் வேறே கஸ்தி நிர்ப்பந்த உபாதைகளை அநுபவிக்க வேண்டியிருந்தால் அவற்றையெல்லாம் சந்தோஷத்துடன் அநுபவிப்பதாகத் தேவரீர் தீர்மானம் செய்து கொண்டது போல நானும் என் மனதை உமக்குப் பதிலாயிருக்கும் என் பெரியவர்களுடைய மனதோடு ஒன்றித்து, எனக்கு வரவிருக்கும் சிலுவையெல்லாம் நல்ல மனதோடு பெற்றுக் கொள்வதுமன்றி என் இறுதிக் காலத்தில், அண்டவரே! என் ஆத்துமத்தை உமது கரங்களில் ஒப்புக்கொடுக்கிறேன் என்று சொல்லும் பாக்கியம் அடியேனுக்குக் கிடைக்கும்படி தயை செய்தருளும் சுவாமி தமது பிரசங்கத் தொட்டியாகிய சிலுவையினின்று நமது திவ்ய உபாத்தியாயர் நமக்கு உபதேசிக்கிற ஏழு வாக்கியங்களில் கடைசி வாக்கியத்தை இன்னும் கொஞ்சம் ஆழமாக யோசித்துப் பார்ப்போம். அவர் தமது ஆத்துமத்தைத் தமது நித்திய பிதாவுக்கு ஒப்புக்கொடுக்கும்போது தம்மால் தெரிந்து கொள்ளப் பட்ட புண்ணிய ஆத்துமங்களை மறக்கவில்லை. சர்வேசுரன் ஆதி மனிதனை உண்டாக்கிய போது தமது ஆவியை அவன் மேல் ஊதினபடியால் சர்வேசுரனுடைய சாயல் மனிதரில் விளங்குகிறதல்லவா?

ஆகையால் நமதாண்டவர் தமது ஆத்துமத்தைப் பிதாவாகிய சர்வேசுரன் கையில் ஒப்புக்கொடுக்கும்போது அவருடைய சாயலாயிருக்கும் நமது ஆத்துமத்தையும் ஒப்புக்கொடுத்தாரென்று அறியக்கடவோம். சகல மனிதருடைய ஆத்துமத்தையும் தமது பிதாவுக்கு ஒப்புக்கொடுத்தாரென்று அறியக் கடவோம். சகல மனிதருடைய ஆத்துமத்தையும் தமது பிதாவுக்கு ஒப்புக்கொடுத்தாரோ? இல்லை.

ஆனால் தமது கற்பனைகளை அநுசரித்து, தமது படிப்பினைப்படி நடந்து கடைசியாய்த் தாம் காட்டிய இராஜ பாதையாகிய சிலுவையின் பாதையில் நடக்கப் பிரயாசைப்படும் புண்ணிய ஆத்துமங்களை மாத்திரம் தமது திரு ஆத்துமத்தோடு ஒன்றாகச் சேர்த்த பிதாவாகிய சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுத்தார்.

ஆ! பிரிய சகோதரனே! சகோதரியே நமது ஆத்துமத்தையும் அவர் தமது பிதாவின் கையில் ஒப்புக்கொடுத்திருந்தால் நமக்கு எவ்வளவோ பாக்கியம்! நமது துஷ்ட சத்துருக்களுடைய கையில் எளிதில் அகப்பட மாட்டோம். நமது ஆத்துமத்தின் நிலையைக் கொண்டும் நமது மனச்சாட்சியின் நோக்கத்தைக் கொண்டும், நமது ஆத்துமம் சர்வேசுரனுடைய கரங்களில் இருக்கிறதோ இல்லையோவென்று கண்டு கொள்ளலாம். முன் சொன்னது போல் நமது அந்தஸ்துக்குத் தகுந்தபடி நடந்து, அடிக்கடி வழக்கமாய்க் கட்டிக் கொள்ளும் குற்றங்குறைகளை வெல்லப் பிரயாசைப்பட்டு நாள்தோறும் புண்ணியத்தில் வளர்ச்சியடைய உழைப்போமேயாகில் நமது ஆத்துமம் சர்வேசுரன் கையில் பத்திரமாய் இருக்கும் என்பது தப்பாது. ஆனால் நாம் அவ்விதம் செய்யாமல் ஞானக்காரியத்தில் அசமந்தமும் வெதுவெதுப்புமுள்ளவர்களாய் நடந்து, நமது தப்பிதங்களைச் சீர்திருத்தப் பிரயாசைப்படாமல் பேருக்கு மாத்திரம் ஞான காரியங்களைச் செய்து வெளிக்கு நல்லவர்களாகக் காணப்படப் பிரயாசைப்படுவோமேயாகில் நமது முடிவு நிர்ப்பாக்கியமுள்ளதாய் இருக்குமென்பது நிச்சயம்.

ஆகையால் என் பிரிய சகோதரனே! சகோதரியே! சிலுவையிலே தொங்கும் நமதாண்டவரை மனஸ்தாபக் கண்ணால் நோக்கிப் பார்த்து அவருடைய சிலுவையடியிற் சாஷ்டாங்க தெண்டனிட்டு என் ஆண்டவரே! இவ்வளவு காலமாக என் ஆத்துமத்தையும் அதன் தத்துவங்களையும் தேவரீருக்கு ஒப்புக்கொடாமல் என் துர்ச் சுபாவத்துக்கு ஒப்புக்கொடுத்த பாதகத்தை மன்னிக்கும்படி தேவரீரை மன்றாடுகிறேன். கடந்து போன என் சீவியகாலத்தில் என் பாவ அக்கிரமங்களால் உமக்குத் துரோகம் செய்து உமக்கு உரியதான என் ஆத்துமத்தை உமக்குக் கொடாமல், உமது விரோதிகளுக்குக் கையளித்ததினால் வெகு மனஸ்தாபப்படுகிறேன். இனியாகிலும் என் ஆண்டவரே! படைக்கப்பட்ட வஸ்துக்கள் மட்டில் எனக்குள்ள ஒழுங்கற்ற பற்றுதலை ஒழித்து நீக்கி உமது பேரில் என் பிரியமெல்லாம் வைத்து எப்போதைக்கும் உமக்குப் பிரமாணிக்கமாய் ஊழியம் செய்து கடைசியில் நல்ல மரணமடைந்து என் ஆத்துமத்தை உமது திருக்கரங்களில் ஒப்புக்கொடுத்து ஆண்டவரே உம்மை நம்பினேன், என்னைக் கைவிடாமல் உமது கடூரமான பாடுகளைப் பார்த்து அடியேனை இரட்சியுமென்று சொல்லும் பாக்கியம் அவர் உனக்கு அநுக்கிரகம் செய்யும் பொருட்டு அவரை மன்றாடக் கடவாய்.