சுய சித்தமும், பிடிவாத குணமுமே தேவ சித்தத்தை எதிர்ப்பவர்களாக நம்மை ஆக்கி விடுகின்றன. அவை நம் அயலானை எதிர்த்து நின்று, சுயநலத்தின் கட்டளைகளை நிறைவேற்றுவதில் யாருக்கும் அசைந்து கொடுக்காதவர்களாக நம்மை மாற்றி விடுகின்றன. கோபம் வெறுப்பு, கர்வம், முரண்படுகிற மனநிலை, திமிர் ஆகியவை இந்த வகை ஆங்காரத்தின் குழந்தைகளாகும். வழக்கமாக இந்த ஆங்காரம் தன்னிச்சையாக உறுதியான முடிவெடுக்கிற ஒரு மனத்தில் வேரூன்றியதாக இருக்கிறது.
அறிவின் ஒளியையும், வெளிப்படுத்தப்பட்ட விசுவாசக் கொள்கையினால் எண்பிக்கப்படுகிற சத்தியத்தின் ஒளியையும் நாம் கண்டுகொள்ள முடியாமல் அது தடுத்து விடுகிறது. இந்த விருப்பமற்ற நிலை உண்மையில் அறியாமையை வளர்க்கிறது. திருச்சபைக்குள் நுழையாதபடி மனிதர்களைத் தடுப்பதும் தங்கள் விசுவாசத்தை இழந்து வீழ்ச்சியடைந்த பிறகு, விசுவாசத்தை அவர்கள் மீண்டும் அனுசரியாதபடி தடுப்பதும் இந்த ஆங்காரமே
இந்த வகை ஆங்காரத்தோடு மிக நெருக்கமாக இணைந்திருக்கிற மற்றொரு ஆங்காரமுண்டு. அல்லது, இந்த வகை ஆங்காரத்திற்கு வேறு பெயர் உண்டு என்று நாம் கூறலாம். அது சுதந்திர மனப்பாங்கு ஆகும். கீழ்ப்படியாமை, தன்னைத் தாழ்த்திக் கொள்வதை மறுப்பது, பிறரை இகழ்தல், கர்வத்தோடு முரண்படுதல், அறிவுரைகள், உதவிகளை ஏற்க மறுத்தல், உரிய அதிகாரத்தால் கண்டிக்கப்படுவதை ஏற்க மறுத்தல், தேவ தூஷணம், மனக்கசப்போடு சாபமிடுதல், ஆணையிடுதல், வார்த்தையிலும், செயலிலும், மரியாதையின்மை ஆகியவற்றை நோக்கி இது நம்மை வழிநடத்துகிறது.
நம் சொந்தக் குறைகளை ஒத்துக் கொள்ள மறுத்தல், போலித் தற்பெருமை, நம் மனம், நற்பண்புகளுக்கும் ஆளுமைக்கும், செல்வ வளத்திற்கும் சர்வேசுரனல்லாமல் நாமே காரணம் என்ற எண்ணம் ஆகியவை அறிவின் ஆங்காரத்தை வெளிப்படுத்துகின்றன. இந்த ஆங்காரத்தில் நின்றே விசுவாசத்திற்கு எதிரான பாவங்கள் எழுகின்றன.
புகழார்வத்தின் ஆங்காரம் மற்றவர்கள் எவ்வளவுதான் உயர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களைவிட நம்மை எந்த வகையிலாவது முன்னிலைப்படுத்துகிற உயர்பதவிகளும் மாண்புள்ள அலுவல்களையும் நாம் தேடும்படி செய்கிறது. பெரும் அலுவல்களையும் திட்டங்களையும் எப்படி நிறைவேற்றுவது என்று தெரியாத போதிலும் முன் யோசனையின்றி அவற்றைப் பொறுப்பேற்றுக் கொள்ள அது நம்மைத் தூண்டுகிறது.
அதிகப்படியான தன்னம்பிக்கையின் காரணமாக, நம் திறமைகளை நாம் அளவுக்கு மீறி மதிப்பிடுகிறோம். ஒழுங்கீனமான ஆசைகள், வீண் மகிமை, பிறரால் புகழப்பட வேண்டுமென்ற ஆசை, ஆரவாரப் பகட்டு, இன்னும் அதிக உயர்வாக மற்றவர்களால் மதிக்கப்படும்படியாக வாழ்க்கைக்கு அத்தியாவசியமான காரியங்களை மட்டுமிதமின்றி பயன்படுத்துவது ஆகிய தீமைகள் இந்த ஆங்காரத்திலிருந்தே உருவெடுத்து வருகின்றன.
முகஸ்துதிக்கும், வெளிவேடத்திற்கும் இது வழிவகுக்கிறது.