ஒரு கட்டிடத்திற்குள்ளிருந்து ஒரு குதிரை வீரன் பாய்ச்சலில் வருகிறான். ஊதா நிறத்தில் அணிமணி பூட்டிய அவனுடைய வெள்ளை அராபியக் குதிரையும், அதன் பிரமிக்கத்தக்க தோற்றமும், அவனுடைய உருவிய வாளின் தட்டைப் பாகமும், நுனியும்பட்டு, இரத்தம் வடியும் தலைகளும் அவனை ஒரு அதிதூதரைப் போல் காட்டுகின்றன. வலமும் இடமும் பின்னங்காலில் துள்ளிப் பாயும் அக்குதிரை, தன்னையும் தன் எஜமானையும் தன் குளம்புகளாலேயே காத்துக் கொள்வதோடு அவற்றையே கூட்டத்தினூடே செல்வதற்கும் பயன்படுத்திக் கொள்கிறது.
குதிரை வீரனுடைய தலையில் பொன் இடுக்கியால் மாட்டப்பட்டிருந்த ஊதாவுடன் பொன் நிறங் கலந்த துகிலைக் கீழே விழத்தாட்டுகிறது. அது மனேயன் என நான் கண்டு பிடிக்கிறேன்.
“திரும்புங்கள்! சதுர்பாக ஆளுநனின் ஓய்வை எப்படி உலைக்கத் துணிந்தீர்கள்?” என்று அவன் கத்துகிறான்.
ஆனால் இதெல்லாம் அவன் இப்படித் தலையிட்டதை நியாயப்படுத்தி சேசுவிடம் போய்ச் சேர அவன் கையாண்ட உத்தியே. “இந்த மனிதனை... அவரை நான் பார்க்கட்டும்... ஒதுங்கி நில்லுங்கள்... இல்லாவிடில் நான் காவல் சேவகரைக் கூப்பிடுவேன்...” என்கிறான்.
ஜனங்கள் அவனுடைய வாளின் பின்புறத்தால் தாக்கப்பட்டதாலும், குதிரையின் உதைகளாலும் குதிரை வீரனின் பயமுறுத்தல்களாலும் விலகி விடுகிறார்கள். அதனால் சேசுவும் அவரைப் பிடித்திருக்கிற ஆலய சேவகரும் நிற்கிற இடத்திற்கு வந்து சேர மனேனொல் கூடுமாயிருக்கிறது.
“போங்கள்! உங்களை விட சதுர்பாக ஆளுநன் முக்கிய மானவன். அசுத்த கூலிக்காரரே, போங்கள். அவரிடம் நான் பேச வேண்டும்.” மனேயன் மிக இரக்கமற்ற சிறைக் காவலனை நோக்கிப் பாய்ந்து தன் வாளை வீசி அதில் வெற்றி பெறுகிறான்.
“குருவே!...” என்கிறான் மனேயன்.
“நன்றி உனக்கு. ஆனால் நீ போய்விடு! கடவுள் உனக்கு ஆறுதலளிப்பாராக!” என்று கூறிய சேசு, கட்டப்பட்ட தம் கரங்களை முடிந்த மட்டும் ஆசீர்வதிக்கிற பாவனையாய் அசைக்கிறார்.
கூட்டம் தள்ளி நின்று சீறுகிறது. மனேயன் பின்வாங்கிப் போவதைக் கண்டவுடன், தாங்கள் பின்னால் தள்ளப்பட்டதற்குப் பழி வாங்குவதற்காக கற்களையும், குப்பைகளையும் வாரி, கைதியின் மேல் வீசி எறிகிறது.
அந்த சாலை ஏறுமுகமாயிருக்கிறது. சூரிய வெயிலில் வெப்பமாக இருக்கிறது. அவர்கள் அந்தோனியா கோட்டையை நோக்கிச் செல்கின்றனர். அக்கோட்டையின் கட்டிடங்கள் தூரத்தில் தெரிகின்றன.
அப்போது ஒரு பெண்ணின் கீச்சுக் குரல் அழுகை ஆகாயத்தை ஊடுருவிக் கேட்கிறது:
“ஓ என் இரட்சகரே! ஓ நித்திய கடவுளே, அவர் உயிருக்குப் பதிலாக என் உயிரை ஏற்றுக் கொள்ளும்!”
சேசு தலையைத் திருப்பிப் பார்க்கிறார். அங்கே ஒரு அழகிய வீட்டைச் சுற்றியுள்ள மலர்களுள்ள மாடியில் சூசாவின் ஜோஹான்னாவைக் காண்கிறார். அவளுடன் அவளுடைய ஊழியக்காரர்களும், பணிப்பெண்களும், சின்ன மேரியும், மத்தியாசும் அவளைச் சூழ்ந்து நிற்கிறார்கள். அவள் அப்படிக் கூறியபடியே வானத்தை நோக்கிக் கரங்களை உயர்த்துகிறாள். ஆனால் இன்று மோட்சம் ஜெபங்களுக்குப் பதிலளிப்பதில்லை! சேசு தம் கரத்தை உயர்த்தி, அசைத்து வழியனுப்பும் ஆசீரளிக்கிறார்.
அப்போது கூட்டத்திலிருந்து அவ்வுயர்ந்த மாடியை நோக்கி கற்கள் வீசப்படுகின்றன.
“மரணம்! தேவதூஷணிக்கு, கெடுக்கிறவனுக்கு, பசாசுக்கு மரணம்! அவனுக்கும் அவன் நண்பர்களுக்கும் மரணம்!” என்று கத்துகிற கூட்டம் சீறிக் கொண்டு நிற்கிறது. யாரும் காயம்பட்டார்களா என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு சத்தமான கீச்சுக் குரலோடு மாடியில் நின்ற கூட்டம் கலைந்து போகிறது.
கூட்டம் முன்னேறிச் செல்கிறது... சூரிய ஒளியில் ஜெருச லேமின் வீடுகள் காட்சியாகத் தெரிகின்றன. வீடுகள் காலியாக உள்ளன. பட்டணத்தில் வசிக்கிறவர்களையும், பாஸ்கா பண்டிகைக்காக வந்து தற்காலிகமாகத் தங்கியிருக்கிறவர்களையும் பகையானது பாதுகாப்பில்லாத ஒரு மனிதனுக்கெதிராக வீடுகளைக் காலியாக்கி வெளியே கொண்டு வருகிறது.
சில உரோமைப் படை வீரரும், ஒரு போரணிப் பிரிவு முழுவதும் தங்கள் ஈட்டிகளை கூட்டத்தை நோக்கி நீட்டியபடி கோட்டையிலிருந்து ஓடி வருகிறார்கள். பெருஞ்சத்தமிட்டு கூட்டம் சிதைகிறது. வீதியின் நடுவில் காவல் சேவகருடன் சேசு விடப்படுகிறார். பெரிய குருவும், வேதபாரகரும், ஜனங்களின் மூப்பரும் அங்கே நிற்கிறார்கள்.
ஒரு செந்தூரியன் வந்து: “இந்த மனிதனா? இந்தக் கலகமா? இதற்கு நீங்கள் உரோமைக்குப் பதில் சொல்லுவீர்கள்” என்று ஆங்காரத்துடன் சொல்கிறான்.
“எங்கள் சட்டப்படி இவன் சாகப் பாத்திரவானாயிருக்கிறான்.”
“வாளின் நீதியும், இரத்தத்தின் நீதியும் எப்போது உங்களிடம் திரும்பக் கொடுக்கப்பட்டன?” என்று மறுபடியும் கேட்கிறான் அந்த மூத்த செந்தூரியன். அவன் ஓர் உண்மையான உரோமையன். அவன் முகம் கடுமையாக உள்ளது. அவன் கன்னத்தில் ஒரு ஆழமான தழும்பு உள்ளது. அவன் பேன்பிடித்த கப்பல் அடிமைகளிடம் இகழ்ச்சியுடனும், அருவருப்புடனும் பேசுவது போல் பேசுகிறான்.
“எங்களுக்கு அந்த அதிகாரம் இல்லையென்பதை அறிவோம். நாங்கள் உரோமையின் விசுவாசமுள்ள பிரஜைகள்...”
“ஹஹ் ஹஹ் ஹா! கேட்டீரா லோஞ்ஜினுஸ்! விசுவாசமுள்ளவர்கள்! பிரஜைகள்! கெட்ட பயல்கள். என் அம்பெய்யும் வீரர்களைக் கொண்டு உங்களுக்குத் தக்க பரிசளிக்க வேண்டும்.”
“அது மிக மரியாதையுள்ள மரணமாச்சுதே! கழுதைகளின் முதுகு கசையடிகளைத்தான் கேட்கும்...” என்று அர்த்தமுள்ள அமைதியுடன் சொல்கிறான் லோஞ்ஜினுஸ்.
பெரிய குருக்களும், வேதபாரகரும், மூப்பர்களும் நஞ்சால் நுரைக்கிறார்கள். ஆனால் அவர்கள் விரும்புவது அவர்களுக்குக் கிடைக்க வேண்டுமென்பதால் மவுனமாகிறார்கள். அந்த நிந்தையைக் கண்டுபிடிக்காதது போல் காட்டி அதை விழுங்கிக் கொள்கிறார்கள். பின்னும் அந்த இரு அதிகாரிகளுக்கும் தலைபணிந்து, சேசுவை போஞ்சு பிலாத்துவிடம் கொண்டு செல்ல வேண்டுமென்றும், உரோமையின் பிரசித்தி பெற்ற நேர்மையான நீதியுடன் பிலாத்து அவனைத் தீர்ப்பிட வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறார்கள்.
நன்றி : www.catholictamil.com
புத்தகங்கள் தொடர்பிற்கு மாதா அப்போஸ்தலர்கள் சபை, சகோதரர் பால்ராஜ் Ph : 9487257479