தவக்கால சிந்தனைகள் 36. கடவுள் மனிதனின் காவியத்திலிருந்து.. அந்த மண்டபத்தின் முன்பாகம் முழுவதும் திறந்திருக்கிறது.

அந்த மண்டபத்தின் முன்பாகம் முழுவதும் திறந்திருக்கிறது. கூடத்திலிருந்து அது மூன்று உயர்ந்த படிகளுக்கு மேலிருக்கிறது. கூடம் இன்னும் மூன்று படிகள் உயர்ந்து தெருவில் திறக்கிறது. இதனால் யூதர்கள் நடக்கிறவை அனைத்தையும் நன்கு பார்க்க முடிகிறது. அவர்கள் கோபத்தால் பரபரக்கிறார்கள். ஆனால் ஈட்டிகளுக்கும், எறிவேல்களுக்கும் அஞ்சி எதிர்ப்புக் காட்டாமல் இருக்கிறார்கள்.

இறுதியாக அந்த மண்டபத்தில் சுற்றிச் சுற்றி வந்த பிலாத்து நேராக சேசுவிடம் போகிறான். அவரை உற்றுப் பார்க்கிறான். இரண்டு செந்தூரியன்களிடமும்: “இவனா?” என்று கேட்கிறான்.

“ஆம். இந்த மனிதன்தான்.”

“இவன் மேல் குற்றஞ்சாட்டுகிறவர்கள் வரட்டும்” என்று கூறி அங்குள்ள மேடை மேல் போட்டிருக்கிற ஆசனத்தில் போய் அமருகிறான். அவன் தலைக்கு மேலே உரோமையின் விருதுச் சின்னங்களும், பொன் கழுகுகளும், அவர்களின் அதிகாரத் தலைப்பு எழுத்துக்களும் கலந்து காணப்படுகின்றன.

“அவர்கள் இங்கு வர மாட்டார்கள். தீட்டாகி விடுவார்கள்.”

“ஃபூ! அதே தாவிளை! அவர்களின் வெள்ளாட்டு நாற்றத்தை இவ்விடத்திலிருந்து அகற்ற தேவைப்படும் நறுமண நீரோடைகள் நமக்கு மிச்சம். அவர்களை சற்று பக்கத்திலாவது வரச் செய்யுங்கள். இதோ இங்கே கீழே, அவர்கள் உள்ளே வந்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அவர்கள் அப்படி விரும்புவதால். இந்த மனிதனைச் சாக்காக வைத்துக் கொண்டு ஆட்சி எதிர்ப்புப் புரட்சியே நடந்து விடலாம்.”

ஆளுநனின் ஆணையைச் சொல்ல ஒரு போர்வீரன் போகிறான். மற்றவர்கள் நுழை மண்டபத்தின் முன்பாக சம தூரத்தில், அந்த மண்டபத்திலுள்ள ஒன்பது வீர நாயகர்களின் அழகிய சிலைகள் போல் வரிசையாக நிற்கின்றனர்.

பிரதான ஆசாரியரும், வேதபாரகரும், மூப்பர்களும் முன்னால் வருகிறார்கள். அடிமைத்தனமாய் தலை பணிகிறார்கள். கூடத்தின் படிகளுக்கப்பால் இருக்கிற ஆளுநர் இல்லத்தின் முன்பாக உள்ள சிறிய சதுக்கத்தில் நின்று விடுகிறார்கள்.

அவர்களை நோக்கி வந்து கொண்டே பிலாத்து:

“சொல்லுங்கள் சீக்கிரமாக. ஏற்கெனவே இரவின் அமைதியைக் கெடுத்து வாசல்களை வலுவந்தமாய்த் திறந்த குற்றம் உங்கள் மேலிருக்கிறது. அதை நான் விசாரித்துக் கொள்வேன். தலைவர்களும் ஜனங்களின் பிரதிநிதிகளும் சட்டத்துக்குக் கீழ்ப்படியாமைக்குப் பதில் கூறுவார்கள்” என்கிறான்.

அவன் முற்ற அறைக்குள்ளே நின்று கொள்கிறான்.

“இம்மனிதன் மேல் நாங்கள் செய்துள்ள தீர்ப்பை உரோமைக்குச் சமர்ப்பிக்கவே வந்திருக்கிறோம். உரோமையின் தெய்வீக சக்கரவர்த்தியின் பிரதிநிதியாக நீர் இருக்கிறீர்.”

“இவனுக்கெதிராக நீங்கள் கொண்டு வந்திருக்கும் குற்றச்சாட்டுக்கள் என்ன? இவன் குற்றமற்றவனாக எனக்குத் தெரிகிறது...”

“இவன் தீமை செய்கிறவனாயிராவிட்டால் இவனை உம்மிடம் நாங்கள் கொண்டு வந்திருக்க மாட்டோம்” என்று கூறிய அவர்கள், அவரைக் குற்றஞ்சாட்டும் ஆவலினால் முன்னுக்கு வருகிறார்கள்.

“இந்தக் கும்பலை விரட்டுங்கள். மூன்று படிகளிலிருந்து ஆறு அடிகள் பின்னால்! இரண்டு நூற்றுவர் படைகள் ஆயுதந் தாங்கி வரட்டும்!”

படைவீரர்கள் உடனே கீழ்ப்படிகிறார்கள். நூறு பேர் வெளியே இறங்கும் படிகளின் மேல்படியில் கும்பலைப் பார்த்தபடி வரிசையாய் நிறக, இன்னொரு நூறு பேர் அந்தச் சிறிய சதுக்கத்தில் வரிசைப்பட நிற்கிறார்கள். பிலாத்துவின் வீட்டுப் பெரிய கதவு இந்தச் சதுக்கத்தில் திறக்கிறது. கதவு என்பதைவிட அதை ஒரு பெரும் வெற்றி வளைவு என்று சொல்ல வேண்டும். காரணம், ஒரு அகலக் கதவைக் கொண்டுள்ள அகலமான திறப்பு அது.

கூடத்திலிருந்து வருகிற நீண்ட நடைக்கூடத்தின் வழியாக வந்து முற்றத்தில் சேருகிறது. அந்த நடைக்கூடம் குறைந்தது ஆறு மீட்டர் அகல மிருக்கும். இதனால் உயரத்திலிருக்கிற முற்றத்தில் நடக்கிறதெல்லா வற்றையும் தெளிவாய்ப் பார்க்க முடியும். அகன்ற கூடத்திற்கு அப்பால் யூதர்களின் மிருகத்தனமான முகங்கள் காணப்படுகின்றன. பயங்கரமான பசாசுக்களைப் போல் போர்வீரரின் அணிகளைத் தாண்டி அவை உள்ளே நோக்கிக் கொண்டிருக்கின்றன. இருநூறு கூரிய ஈட்டி முனைகள், கோழைத்தனமுள்ள கொலைகாரர்களின் கும்பலை நோக்கிக் கொண்டிருக்கின்றன.

“திரும்பவும் கேட்கிறேன். இம்மனிதனுக்கெதிராக நீங்கள் என்ன குற்றச்சாட்டைக் கொண்டு வருகிறீர்கள்?”

“எங்கள் மூதாதையரின் சட்டத்திற்கெதிராய் இவன் குற்றங்கள் செய்திருக்கிறான்.”

“அதற்காக என்னைத் தொந்தரவு பண்ண வந்திருக்கிறீர்களா? உங்கள் சட்டப்படி இவனைக் கொண்டுபோய்த் தீர்ப்பிட்டுக் கொள் ளுங்கள்.”

“நாங்கள் யாருக்கும் மரணத் தீர்ப்பிட முடியாது. நாங்கள் படித்தவர்களல்ல. உத்தம உரோமைச் சட்டத்துடன் ஒப்பிட்டால் யூத நியாயச் சட்டம் மன வளர்ச்சி பெறாத குழந்தையைப் போன்றது. அறிவில்லா மக்களும் எஜமாட்டியாகிய உரோமையின் பிரஜை களுமாயிருக்கிற எங்களுக்குத் தேவையாயிருக்கிற...”

“எப்பொழுதிலிருந்து நீங்கள் தேனும் வெண்ணெயுமாக ஆனீர்கள்?...ஆனால் ஓ! பொய் சொல்வதில் வல்லவர்களே, இதிலே உண்மையைக் கூறினீர்கள். உங்களுக்கு உரோமை தேவைப்படுகிறது. ஆம். உங்களுக்கு உபத்திரவமூட்டுகிற இவனை ஒழித்துக் கட்டு வதற்கு. எனக்குப் புரிகிறது”

என்று கூறி, பிலாத்து சிரிக்கிறான்,

தெளிந்த வானத்தைப் பார்த்தபடி. பனி போன்ற வெள்ளைச் சுவர்களின் பின்னணியில் வானம் நீல நீண்ட சதுரத் தகடு போல் தெரிகிறது. மேலும் பிலாத்து கேட்கிறான்:

“சொல்லுங்கள். இவன் என்னென்ன குற்றங்கள் செய்திருக்கிறான் உங்கள் சட்டத்திற்கெதிராக?”

“இவன் எங்கள் நாட்டில் குழப்பங்களை உண்டாக்கியிருப் பதாகக் கண்டுபிடித்திருக்கிறோம். செசாருக்கு வரி செலுத்தாதபடி ஜனங்களைத் தடைசெய்திருக்கிறான். தானே கிறீஸ்தென்னும் யூதர்களின் இராஜா என்று கூறினான்.”

பிலாத்து அந்த முற்றத்தின் நடுவில் கட்டுண்டவராய், ஆனால் காவலர்கள் இல்லாமல் விடப்பட்டிருக்கிற சேசுவிடம் போகிறான். சேசுவின் சாந்த குணம் அப்படியிருக்கிறது. அவன் அவரிடம்: “நீ யூதர்களின் இராஜாவோ?” என்று கேட்கிறான்.

“இதை நீராகக் கேட்கிறீரா? அல்லது மற்றவர்களின் தூண்டுதலால் கேட்கிறீரா?”

“உன்னுடைய இராச்சியத்தைப் பற்றி எனக்கென்ன கவலை? நான் யூதனா? உன்னுடைய நாடும் அதன் தலைவர்களும் உன்னை நான் தீர்ப்பிடும்படி என்னிடம் கையளித்தார்கள். நீ என்ன செய்தாய்? நீ இராஜ விசுவாசமுள்ளவனென்று நான் அறிந்திருக்கிறேன். பேசு. நீ அரசாள விரும்புகிறாய் என்பது உண்மையா?”

“என்னுடைய இராச்சியம் இந்த உலகத்திலிருந்து வருவதல்ல. அது இவ்வுலகத்தின் இராச்சியமாயிருந்தால், யூதர்கள் என்னைக் கைது செய்வதைத் தடைசெய்ய என் அதிகாரிகளும், படைவீரர்களும் போராடியிருப்பார்கள். அதனால் என் இராச்சியம் இப்பூமியைச் சார்ந்ததல்ல. மேலும் நான் அதிகாரத்தைத் தேடவில்லையென்பதும் உமக்குத் தெரியும்.”

“அது சரியே. எனக்குத் தெரியும். நான் கேள்விப் பட்டிருக்கிறேன். ஆயினும் நீ ஒரு இராஜா என்பதை நீ மறுக்கவில்லையே!”

“நீரே அதை உறுதிப்படுத்துகிறீர். நான் இராஜாதான். அதனாலேயே நான் உலகிற்கு வந்தேன். சத்தியத்திற்கு சாட்சி சொல்ல சத்தியத்தின் பக்கம் இருக்கிறவர்கள் என் குரலுக்குச் செவி கொடுக்கிறார்கள்.”

“சத்தியமென்றால் என்ன? நீ ஒரு தத்துவ ஞானியா? சாவுக்கெதிரே நிற்கும்போது அதனால் பயனில்லை. சாக்ரட்டீசும் இறந்தாரே!”

“ஆனால் அவருடைய வாழ்நாளில் அவர் நேர்மையாக வாழ்வதற்கு அது உதவியது. நன்றாக சாவதற்கும் உதவியது. சமூக நற்பண்புகளை மீறியவர் என்று அழைக்கப்படாதபடி மறுவாழ்வில் நுழைய உதவியது.”

“ஓ ஜோவ்!”

பிலாத்து சற்று நேரம் சேசுவை வியந்தபடி பார்க்கிறான். பின் தன் ஐயங்கொள்ளும் வடுப் பேச்சைத் தொடர்கிறான். சலிப்புற்ற சைகை செய்து மறுபுறந் திரும்பி யூதேயர்களிடம் போய்:

“இவனிடம் நான் ஒரு குற்றமும் காணவில்லை” என்கிறான்.

நன்றி : www.catholictamil.com

புத்தகங்கள் தொடர்பிற்கு மாதா அப்போஸ்தலர்கள் சபை, சகோதரர் பால்ராஜ் Ph : 9487257479