தவக்கால சிந்தனைகள் 34 : இன்னொரு சலசலப்பு. அவர்கள் உரோமைக்குப் பயப்படுகிறார்கள். சேசுதான் எப்போதும் பரிகரிக்கும் பலிப்பொருள்.

“பார்! இதெல்லாம் உன் குற்றத்தாலேயே நடக்கிறது. மிகச் சிறந்த யூதேயர்களையும் கெடுக்கிறவனே! நீ அவர்களைக் கெடுத்து விட்டாய்.”

சேசு வாய் திறக்கவில்லை.

“சாட்சிகள் பேசட்டும்” என்று கர்ஜிக்கிறான் கைப்பாஸ்.

“அதாவது, இவன்... எங்களுக்குத் தெரியும். அதை இவன் உபயோகித்தான்... அது... அது எது? அதற்கென்ன பெயர்?”

“நாலு கட்ட உருவமோ?”

“அதேதான்! நீர் சொன்னதுதான்! இவன் இறந்தவர்களை வரவழைத்தான். ஜனங்களை சாபத் நாளுக்கெதிராய் எழுப்பும்படி சொல்லிக் கொடுத்தான். பீடத்தை அவசங்கைப்படுத்த தூண்டி விட்டான். இதை சத்தியம் பண்ணிச் சொல்கிறோம். இவன் இந்தத் தேவாலயத்தை இடிக்க விரும்புவதாகவும், பின் அதைப் பசாசுக்களின் உதவியால் மூன்று நாளில் கட்டி விடுவதாகவும் கூறினான்.”

“இல்லை! அது மனிதனால் கட்டப்படாது என்று சொன்னான்.”

அப்போது கைப்பாஸ் தன் ஆசனத்திலிருந்து இறங்கி சேசுவிடம் வருகிறான். குட்டையான, மிதமிஞ்சிப் பருத்து அசிங்கமாக ஒரு மலரின் பக்கத்தில் ஒரு பெரிய தேரையைப் போல் காணப்படுகிறான்.

சேசு காயபட்டும், கிழிபட்டும் அசுத்தமாயும் கலைந்த தலையோடுமிருந்தாலும், எவ்வளவோ வடிவாயும், கம்பீரமாயுமிருக்கிறார்.

“நீ பதில் சொல்கிறதில்லையா? எவ்வளவு கொடிய குற்றச்சாட்டுகளை அவர்கள் உனக்கெதிராகக் கொண்டு வருகிறார்கள்! பேசி, இப்படிப்பட்ட வெட்கத்திலிருந்து உன்னையே விடுவித்துக் கொள்.”

சேசு பேசவேயில்லை. அவனை ஏறிட்டுப் பார்க்கிறார். ஆனால் வாய் திறக்கவில்லை.

“அப்படியென்றால் எனக்குப் பதில் சொல். நான் உன் னுடைய பெரிய குரு. ஜீவியரான கடவுள்மேல் ஆணையிட்டுக் கேட்கிறேன். எனக்குப் பதில் சொல்: தேவ சுதனான கிறீஸ்து நீயா?”

“நீரே கூறிவிட்டீர். அவரே நான். மனித குமாரன் பிதாவின் வல்லபத்தின் வலது புறம் வீற்றிருப்பதையும், வான மேகங்களில் வருவதையும் காண்பீர்கள். மேலும் நீர் என்னிடம் கேட்பானேன்?

நான் வெளியரங்கமாக மூன்று வருடங்கள் பேசியிருக்கிறேன். நான் எதையும் இரகசியத்தில் கூறவில்லை. நான் சொன்னவற்றைக் கேட்டவர்களிடம் விசாரியும். நான் என்ன பேசினேன் என்பதையும், என்ன செய்தேன் என்பதையும் அவர்கள் சொல்லுவார்கள்.”

அப்போது அவரைப் பிடித்திருக்கிற சேவகன் ஒருவன் அவருடைய வாயில் அறைகிறான். அதிலிருந்து மறுபடியும் இரத்தம் வழிகிறது.

“சாத்தானே, இப்படித்தான் பெரிய குருவுக்குப் பதில் சொல்வதோ?” என்று கத்துகிறான்.

சேசு முன்பு கூறியதுபோலவே இவனுக்கும் சாந்தமாய்ப் பதில் கூறுகிறார்:

“நான் உண்மையைப் பேசும்போது எதற்காக என்னை அடிக்கிறாய்? நான் ஏதாவது தவறாகப் பேசியிருந்தால் எதிலே நான் தவறினேன் என்று ஏன் சொல்லவில்லை? நான் மீண்டும் கூறுகிறேன்: நானே சர்வேசுரனின் குமாரனாகிய கிறீஸ்து. என்னால் பொய் சொல்லக் கூடாது. நானே பெரிய குரு. நித்திய குருவா யிருக்கிறேன். நான் மாத்திரமே மெய்யான குருவின் பட்டையை அணிந்திருக்கிறேன். அதில்: கொள்கையும் சத்தியமும் என்று எழுதப்பட்டிருக்கிறது. நான் இரண்டிற்கும் பிரமாணிக்கமா யிருக்கிறேன். மரணம் மட்டும் அப்படி இருக்கிறேன். என் மரணம் உலகின் பார்வையில் அவமான மாயிருக்கிறது. கடவுளின் பார்வையில் புனிதமாயிருக்கிறது.

ஆனந்தமான உயிர்ப்பு வரையிலும் நானே அபிஷேகம் செய்யப்பட்டுள்ளேன். நான் தலைமைக் குருவும், அரசனுமாயிருக்கிறேன். நான் என் செங்கோலைக் கைக்கொள்ளப்போகிறேன். அதைக் கொண்டு, அந்தச் சுளகைக் கொண்டு, நான் கதிரடிக்கும் தரையைத் துப்புரவு செய்வேன். இந்த ஆலயம் அழிக்கப்பட்டு விடும். அது புதிதாகவும், புனிதமாகவும் மீண்டும் எழும்பும். ஏனென்றால் இந்த ஆலயம் கெட்டுவிட்டது.

கடவுள் அதை அதன் கதிக்கு கைவிட்டு விட்டார்.”

“தேவ தூஷணன்!” என்று அவர்கள் எல்லாரும் சேர்ந்து கத்துகிறார்கள்.

“நீ அதை மூன்று நாளில் செய்து விடுவாயோ? சில்லரைத்தனமான பேய்பிடித்தவனே.”

“இந்த ஆலயம் அல்ல. என்னுடைய - உண்மைக்கடவுளின் - ஜீவியரான, புனிதரான, மும்முறையும் பரிசுத்தரான சர்வேசுரனுடைய ஆலயம் மீண்டும் எழும்பும்.”

“சபிக்கபபட்டவன்!” என்று கூறி அவர்கள் மறுபடியும் கத்துகிறார்கள்.

அப்போது கைப்பாஸ் கொக்கரிக்கும் தன் குரலை உயர்த்தி, தன் சணலாடைகளை போலி கொடூரத்துடன் கிழித்துக் கொண்டு:

“இனியும் சாட்சிகளிடமிருந்து நாம் கேட்க வேண்டியதென்ன? இவன் தேவ தூஷணம் சொன்னானே! நாம் இப்போது என்ன செய்யலாம்?” என்கிறான்.

மற்ற எல்லாரும் ஒரே குரலாய்: “இவன் சாவுக்குத் தகுதியாயிருக்கிறான்” என்கிறார்கள். ஏராளமான, துர்மாதிரிகை அடைந்தவர்களைப் போன்ற அங்க அசைவுகளுடன் அவர்கள் அந்த அறையை விட்டு வெளியே போகிறார்கள். சேசுவோ காவல் சேவகருக்கும், பொய்ச்சாட்சிகளின் கும்பலுக்கும் கையளிக்கப் படுகிறார். அவர்கள் அவரை அடித்து, முகத்தில் அறைந்து, அவர் மேல் துப்பி, ஒரு கந்தையால் அவர் கண்களைக் கட்டி, அவர் முடிகளை வேகமாய் பற்றியிழுத்து, கை கட்டுண்ட அவரை இங்குமங்கும் தள்ளி விடுவதால், அவர் மேசைகள், நாற்காலிகள், சுவர்கள் மீது மோதுகிறார். அப்போது அவர்கள்:

“உன்னை அடித்தது யார்? சொல் பார்க்கலாம்” என்கிறார்கள். அநேக தடவை அவரை இடறச் செய்து, முகம் தரைப்பட விழத்தாட்டி, மறுபடியும் கட்டிய கரங்களோடு எப்படி அவர் எழுந்திருக்க மாட்டாமலிருக்கிறார் என்பதைப் பார்த்து விலாப் புடைக்க சிரிக்கிறார்கள்.

சில மணி நேரம் இவ்வாறு கடக்கின்றது. களைத்துப் போன அவர்கள் கொஞ்சம் ஓய்வெடுக்க எண்ணுகிறார்கள். கைப்பாஸின் அரண்மனை அடைப்பின் பல முற்றங்களில் ஏற்கெனவே கூடி நிற்கும் கூட்டத்தின் நிந்தைகளுக்கு நடுவே சேசுவை நடத்திச் சென்று ஒரு குகை போன்ற அறையில் அடைக்க கொண்டு போகிறார்கள்.

சேசு அரண்மனை முற்றத்திற்கு வருகிறார். அங்கே நெருப்புக்கருகில் இராயப்பர் இருக்கிறார். சேசு இராயப்பரைப் பார்க்கிறார். ஆனால் இராயப்பர் அவரைக் காணவில்லை . அருளப்பர் அங்கே இல்லை. என்னால் அவரைக் காணக் கூடவில்லை. அவர் நிக்கோதேமுஸுடன் போயிருக்கிறார் என நினைக்கிறேன்...

உதய காலையாகிறது. ஆகாயம் பசுமை நிறமாகிறது. அப்போது ஓர் உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது: கைதியை சங்கம் கூடிய அறைக்கு கூடுதல் சட்டபூர்வமான விசாரணைக்குக் கொண்டு போகும்படி. அச்சமயம்தான் இராயப்பர் தனக்கு கிறீஸ்துவைத் தெரியாது என்று மூன்றாம் முறையாக மறுதலிக்கிறார். அந்நேரம்தான் சேசு அந்தப் பக்கம் கடந்து செல்கிறார். அவருடைய வேதனைகளின் அடையாளங்கள் காணப்படுகின்றன. அந்தப் பசுமை கலந்த உதய வெளிச்சத்தில் சேசுவின் வெளிறிய முகத்தின் காயங்கள் மேலும் பயங்கரமாகத் தெரிகின்றன. அவருடைய கண்கள் குழிவிழுந்து மங்கியிருக்கின்றன. உலகத்தின் துயரத்தால் தொய்வடைந்த சேசு...

நன்றி : www.catholictamil.com

புத்தகங்கள் தொடர்பிற்கு மாதா அப்போஸ்தலர்கள் சபை, சகோதரர் பால்ராஜ் Ph : 9487257479