தவக்கால சிந்தனைகள் 33 : வேதனைப்பயணம் தொடர்கிறது.. மீண்டும் விசாரணை..

சேசு கட்டுண்டவராய், துன்புறுத்தப்பட்டவராய் மீண்டும் மண்டபத்திற்கு வருகிறார். அதன் வாசலைக் கடந்து ஒரு கூடத்திற்கு வருகிறார். அதைக் கடந்து ஒரு முற்றத்திற்கு வருகிறார். அங்கே அநேகர் ஒரு நெருப்புப் பக்கத்தில் குளிர் காய்ந்து கொண்டி ருக்கிறார்கள்.

ஏனென்றால் சாமம் கடந்து வெள்ளிக்கிழமையின் முதல் மணிகளில் குளிர் அதிகமாயும், காற்றடித்தபடியும் உள்ளது. இராயப்பரும் அருளப்பரும் அங்கே இருக்கிறார்கள். எதிரிகளின் கும்பலுள் கலந்திருக்கிறார்கள். அவர்கள் அங்கே இருப்பதற்கு உண்மையான தைரியம் இருந்திருக்க வேண்டும்... சேசு அவர்களைப் பார்க்கிறார். ஒரு மிக மெல்லிய புன்னகை. அடிபட்டதால் ஏற்கெனவே வீங்கியுள்ள உதடுகளில் காணப்படுகின்றது.

மண்டபங்கள், அறைகள், முற்றங்கள், கூடங்கள் வழியாக நீண்டு போகிறது நடை. ஆலயத்திலுள்ளவர்களின் வீடுகள் எப்படியோ உள்ளன.

கூட்டம் பெரிய குருவின் அடைப்பிற்குள் நுழையவில்லை. அன்னாஸ் வீட்டின் நுழைவு அறைக்குள் கூட்டம் தள்ளப்படுகிறது. சேசு சேவகர்களுடனும், குருக்களுடனும் தனியே போகிறார். அவர் ஒரு பெரிய சாலைக்குள் நுழைகிறார். அந்தச் சாலையின் மூன்று பக்கங்களிலும் குதிரை லாட வடிவில் போடப்பட்டுள்ள பல இருக்கைகளின் காரணமாக, அது தன் நீண்ட சதுர வடிவை இழந்து காணப்படுகிறது.

நடுவில் இடம் காலியாக உள்ளது. அங்கே இரண்டு மூன்று ஆசனங்கள் மேடைகளில் போடப்பட்டுள்ளன.

சேசு அந்த அறைக்குள் நுழையப் போகிற அதே நேரத்தில் கமாலியேல் வந்து சேர, இஸ்ராயேல் ராபியான அவருக்கு வழிவிடும்படி சேவகர்கள் சேசுவை பலமாகப் பின்னால் இழுக்கிறார்கள். ஆனால் கமாலியேல் நிமிர்ந்த மேரையாய் தன் நடையைத் தளர்த்தி சிலைபோல் நிற்கிறார். நின்றவர் உதடு அசைவது தெரியாமல் யாரையும் பாராமல்,

“நீர் யார்? எனக்குச் சொல்லும்” என்க,

சேசு அன்புடன்: “தீர்க்கதரிசனங்களை வாசியும். உமக்குப் பதில் கிடைக்கும். அவற்றில் முதல் அடையாளம் கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற அடையாளம் இனி வரும்” என்று சொல்கிறார்.

கமாலியேல் தன் மேல் வஸ்திரத்தை சேர்த்துப் பிடித்தபடி உள்ளே போகிறார். சேசு அவருக்குப் பின்னால் செல்கிறார். கமாலியேல் ஒரு இருக்கை நோக்கிச் செல்ல, சேசுவை அறையின் நடுவில் பெரிய குருவின் முன்பாக இழுத்துக் கொண்டு போய் நிறுத்துகிறார்கள். பெரிய குரு கைப்பாஸ் ஒரு கயவனின் உருவமாகக் காட்சியளிக்கிறான்.

ஆலோசனைச் சங்க உறுப்பினர்களின் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள்.

அதன்பின் விசாரணை ஆரம்பமாகிறது. அப்போது இரண்டு மூன்று இருக்கைகள் காலியாயிருப்பதைக் கைப்பாஸ் கவனிக் கிறான். “எலயசாரை எங்கே? ஜோவானை எங்கே?” என்று கேட்கிறான்.

ஒரு இளைஞன், அவன் ஒரு வேதபாரகனாயிருக்கும் என நினைக்கிறேன், எழுந்து பணிந்து கூறுகிறான்:

“அவர்கள் வர மறுத்து விட்டார்கள். இதோ அவர்களின் கடிதம்.”

“வைத்துக் கொள். அதைக் குறித்துக் கொள். அவர்கள் இதற்குப் பதில் சொல்வார்கள். இந்த மனிதனைப் பற்றி இந்த ஆலோசனைச் சங்கத்தின் புனித அங்கத்தினர்கள் என்ன சொல்லுகிறீர்கள்?”

“நான் சொல்கிறேன். என் வீட்டிலிருக்கையில் இவன் சாபத் ஓய்வை மீறினான். நான் பொய் சொல்லவில்லை என்பதற்கு கடவுள் சாட்சியாயிருக்கிறார். இஷ்மாயேல் பென் ஃபாபி ஒருபோதும் பொய் கூறுவதில்லை.”

“பிரதிவாதி! இது உண்மையா!”

சேசு மவுனமாயிருக்கிறார்.

“நன்றாய் அறியப்பட்ட விபசாரிகளோடு இவன் வாழ நான் கண்டிருக்கிறேன். தான் ஒரு தீர்க்கதரிசி என்று நடித்து தான் பதுங்கும் இடத்தை விலைமாதரின் இடமாக்கினான். பற்றாததற்கு, அஞ்ஞான ஸ்திரீகளுடன் அவ்வாறு நடந்தான். சாதோக், காலஷே போனா, அன்னாஸின் நம்பிக்கையாளர் நாஹூம் ஆகியோர் என்னுடன் இருந்தனர். நான் சொல்வது உண்மை. சாதோக்! காலஷே போனா! நான் கூறுவது பொய்யென்றால் நீங்கள் சொல்லுங்கள்!”

“அது உண்மை. மிக உண்மை.”

அப்போது கைப்பாஸ் சேசுவைப் பார்த்து:

“நீ என்ன சொல்லுகிறாய்?”

சேசு மவுனமாயிருக்கிறார்.

“இவன் நம்மை இழிவுபடுத்திப் பேசவும் நாம் பரிகசிக்கப்படவும் ஒரு சந்தர்ப்பத்தையும் தவற விடவில்லை. இவனால் பொது ஜனங்கள் நம்மை விரும்புவதில்லை.”

“அவர்கள் சொல்வதைக் கேட்கிறாயா? சங்கத்தின் புனித உறுப்பினர்களை நீ அவமரியாதை செய்துவிட்டாய்.”

சேசு மவுனமாயிருக்கிறார்.

“இவன் பேய்பிடித்த மனிதன். இவன் எஜிப்திலிருந்து திரும்பிய பின் பில்லி சூனியம் செய்திருக்கிறான்.”

“அதை எப்படி எண்பிப்பாய்?”

“என் விசுவாசத்தின் மீது ஆணையாக, பத்துக் கற்பனைப் பலகைகளின் மேல் ஆணையாகச் சொல்கிறேன்.”

“இது கனமான குற்றச்சாட்டு. நீ உன் குற்றமற்ற தன்மையை நிரூபி.”

சேசு மவுனமாயிருக்கிறார்.

“நீ தேவ ஊழியம் செய்வது சட்ட விரோதமானது. உனக்கது தெரியும். அதற்கு மரண தண்டனை. பேசு.”

“நம்முடைய சங்கத்தின் இந்த அமர்வு சட்ட விரோதமானது. சிமியோன், எழுந்திரு, நாம் போவோம்” என்கிறார் கமாலியேல்.

“ராபி, உமக்குப் பைத்தியம் பிடித்து விட்டதா?”

“நான் ஒழுங்குகளை மதிப்பவன். நாம் செய்கிறது போல் நடவடிக்கை செய்வது அனுமதிக்கப்படாதது. இதற்கெதிராய் நான் பகிரங்க குற்றச்சாட்டு செய்வேன்” என்று கூறி கமாலியேல் சிலையைப் போல் விறைப்பாக வெளியேறுகிறார்.

அவரைப் போன்ற முகச் சாயலுள்ள சுமார் முப்பத்தைந்து வயதுடைய மனிதனும் அவரைப் பின்தொடர்ந்து போகிறான்.

ஒரு சிறு சலசலப்பு ஏற்படுகிறது. நிக்கோதேமுஸும் அரிமத்தியா சூசையும் அதைப் பயன்படுத்தி வேதசாட்சியின் சார்பாகப் பேசுகிறார்கள்.

“கமாலியேல் சரியாகச் சொன்னார். நாம் கூடும் நேரமும் இடமும் சட்ட விரோதமானவை. சொல்லப்படுகிற குற்றச்சாட்டுகள் பொருந்தவில்லை. இவர் வேதப் பிரமாணத்தைத் தகாத முறையில் புறக்கணிப்புச் செய்ததாக யாராவது இவர் மேல் குற்றஞ்சொல்ல முடியுமா? நான் இவரின் நண்பன். இவர் திருச்சட்டத்தை எப்போதும் மதித்தே வந்திருக்கிறார் என்று நான் சத்தியம் செய்து கூறுகிறேன்” என்கிறார்.

நிக்கோதேமுஸ்.

“நானும் அப்படியே செய்கிறேன். மேலும் இப்பழிக் குற்றத்திற்கு சம்மதிக்கவில்லையென்பதற்காக நான் என் தலையை மூடிக் கொள்கிறேன். அது இவருக்காக அல்ல. நமக்காக. இதோ நான் வெளியேறுகிறேன்” என்று சூசை எழுந்து புறப்படுகிறார்.

அப்போது கைப்பாஸ் அலறுகிறான்: “அப்படியா நீர் சொல் கிறீர்? சத்தியம் செய்துள்ள சாட்சிகள் வரட்டும்.”

அங்கே சிறைக் கைதிகள் போல் தோற்றமளிக்கிற இரண்டு பேர் வருகிறார்கள். மிரண்ட பார்வை. கொடிய சிரிப்பு, கபட நடத்தை.

“சொல்லுங்கள்!”

அப்போது சூசை குறுக்கிட்டு:

“இருவர் கூறுவதையும் ஒரே சமயத்தில் கேட்பது சட்டத்திற்கு எதிரானது” என்று உரத்த குரலில் சொல்கிறார்.

“பேசாதிரும்! நான் பெரிய குரு. நானே கட்டளை கொடுப்பவன்.”

சூசை தம் கையால் மேசையை அடித்துச் சொல்கிறார்:

“பரலோக நெருப்பு உம்மேல் விழட்டும். இந்நேர முதல் மூப்பனான சூசை ஆலோசனைச் சங்கத்தின் எதிரி. கிறீஸ்துவின் நண்பன். இதோ நான் உடனே சென்று நியாயாதிபதியிடம், உரோமையின் சம்மதம் இல்லாமல் இங்கே ஒரு மனிதன் மரணத் தீர்ப்பிடப் படுகிறான் என்று அறிவிக்கிறேன்” என்று கூறி தம்மை நிறுத்த முயற்சிக்கிற ஒரு இளம் ஒல்லி வேதபாரகனைத் தள்ளி விட்டு வெளியே செல்கிறார்.

நிக்கோதேமுஸ் அமைதியாக எந்த வார்த்தையும் சொல்லாமல் வெளியே வருகிறார். வெளியே வரும்போது சேசுவின் முன் கடந்து செல்லும் அவர் சேசுவை உற்றுப் பார்க்கிறார்...

இன்னொரு சலசலப்பு. அவர்கள் உரோமைக்குப் பயப்படுகிறார்கள். சேசுதான் எப்போதும் பரிகரிக்கும் பலிப்பொருள்.

“பார்! இதெல்லாம் உன் குற்றத்தாலேயே நடக்கிறது. மிகச் சிறந்த யூதேயர்களையும் கெடுக்கிறவனே! நீ அவர்களைக் கெடுத்து விட்டாய்.”

சேசு வாய் திறக்கவில்லை.

நன்றி : www.catholictamil.com

புத்தகங்கள் தொடர்பிற்கு மாதா அப்போஸ்தலர்கள் சபை, சகோதரர் பால்ராஜ் Ph : 9487257479