தவக்கால சிந்தனைகள் 32 : விசாரணை தொடர்கிறது... கடவுள் மனிதனின் காவியத்தில் இருந்து..

“அல்ல. நேர்மையுள்ளவன். உம்மை நான் நோகச் செய்ததாகக் குற்றஞ் சாட்டுகிறீர். ஆனால் நீங்கள் எல்லோரும் பகைக்கவில்லையா? நீங்கள் ஒருவரையொருவர் பகைக்கிறீர்கள். இப்பொழுது என் மேலுள்ள பகை உங்களை ஒற்றுமைப்படுத்துகிறது. ஆனால் நாளை என்னை நீங்கள் கொன்ற பிறகு, மறுபடியும் ஒருவரையொருவர் அதிகக் கொடூரமாய்ப் பகைப்பீர்கள். அந்தக் கழுதைப் புலியை உங்கள் முதுகிலும், அந்தப் பாம்பை உங்கள் இருதயத்திலும் கொண்டு வாழ்வீர்கள்.

நான் அன்பைப் போதித்தேன். உலகத்திற்காக ஜனங்கள் பேராசைப்படாமலும் இரக்கத்துடனும் இருக்க கற்பித்தேன். எதைப் பற்றி என்னைக் குற்றஞ் சாட்டுகிறீர்?”

“நீ ஒரு புதுப் போதனையைப் போதிப்பதாக.”

“ஓ குருவே! இஸ்ராயேலில் புதுப் போதகங்கள் மலிந்திருக்கின்றன. எஸ்ஸீன்கள் தங்கள் போதனைகளையும், சாதோக்கேயர்கள் தங்கள் போதனையையும், பரிசேயர்கள் தங்கள் போதனைகளையும் போதிக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு இரகசிய போதனை உள்ளது. ஒருவருக்கு அது சுகபோகம்; இன்னொருவருக்கு பொன்; மற்றொருவருக்கு அதிகாரம். எல்லாருக்கும் தங்கள் விக்கிரங்களும் உள்ளன. எனக்கோ எதுவுமில்லை. நான் நித்திய கடவுளான என் பிதாவின், கீழே போட்டு மிதிக்கப்படுகிற திருச்சட்டத்தை மீண்டும் கொண்டு வருகிறேன்.

பத்துக் கற்பனைகளின் பத்துக் கட்டளைகளையும் மீண்டும் ஒரு எளிய முறையில் எடுத்துக்கூறி வருகிறேன். அவற்றை இப்போது அறியாமற்போன இருதயங்களில் அவை புகும்படியாக என் குரல் கிழியப் பேசி வருகிறேன்.”

“கொடூரம்! தேவதூஷணம்! குருவாகிய என்னிடம் இதை எப்படி சொல்லத் துணியலாம்? இஸ்ராயேலுக்குத் தேவ ஆலயம் இல்லையா? பபிலோனிய அடிமைத்தனத்தில் இருந்தவர்களைப் போலவா நாம் இருக்கிறோம்? எனக்குப் பதில் சொல்!”

“அப்படித்தான் நீங்கள் இருக்கிறீர்கள். ஏன், அதை விட அதிகமாகவே. ஒரு தேவாலயம் இருக்கிறது. ஆம். ஒரு கட்டிடம். ஆனால் தேவன் அங்கில்லை. தம் வீட்டிலிருக்கிற அருவருப்பைப் பற்றி அவர் வெளியேறி விட்டார். சரி, என் மரணம்தான் தீர்மானிக்கப்பட்டு விட்டதே. ஏன் இத்தனை கேள்விகள்?”

“நாங்கள் கொலைகாரர்கள் அல்ல. எங்களுக்கு அதிகாரம் இருந்தால், ஒரு அப்பட்டமான குறறத்திற்காக நாங்கள் கொல்வோம். ஆனால் உன்னை நான் காப்பாற்ற விரும்புகிறேன். நீ என்னிடம் சொல். உன்னைக் காப்பாற்றுகிறேன். உன் சீடர்களை எங்கே? அவர்களை என்னிடம் ஒப்படைத்தால் உன்னை விட்டுவிடுவேன். அவர்களின் பெயர்களைச் சொல். தெரிந்த சீடர்களை விட இரகசிய சீடர்களைச் சொல்.

நிக்கோதேமுஸ் உன்னுடையவர்களுள் ஒருவரா? சூசை? கமாலியேல்? எலயசார்?... எலயசாரைப் பற்றி எனக்கு ஏற்கெனவே தெரியும்... அதனால் அது அவசியமில்லை. பேசு! பேசிச் சொல்!

உன்னைக் கொல்லவும் உன்னைக் காப்பாற்றவும் என்னால் கூடுமென்பது உனக்குத் தெரியும். என்னிடம் அதிகாரம் உள்ளது.”

“நீர் சதுப்பு நிலம். ஐந்தாம் படை வேலையை அதனிடமே நான் விட்டு விடுகிறேன். நான் ஒளியாக இருக்கிறேன்.”

அப்போது ஒரு சேவகன் ஆண்டவருடைய முகத்தில் அறைகிறான்.

“நான் ஒளியாயிருக்கிறேன். ஒளியும், உண்மையும். நான் உலகத்திற்கு பகிரங்கமாகப் பேசினேன். யூதேயர்கள் கூடிவரும் ஜெபக் கூடங்களிலும் தேவாலயத்திலும் நான் போதித்தேன். நான் எதையும் மறைவாய்ப் பேசவில்லை. மீண்டும் சொல்கிறேன். நீர் என்னிடம் கேட்பானேன்? நான் என்ன சொன்னேன் என்பதைக் கேட்டவர்களிடம் நீர் கேளும். அவர்கள் அறிவார்கள்.”

இன்னொரு சேவகன் அவர் முகத்தில் அறைந்து:

“இப்படியா நீ பெரிய குருவுக்குப் பதிலளிக்கிறாய்?” என்கிறான்.

“நான் அன்னாஸிடம் பேசுகிறேன். கைப்பாஸ்தான் பெரிய குரு. இந்த மூப்பருக்குரிய மரியாதையோடுதான் நான் பேசுகிறேன். நான் ஏதும் தவறாகப் பேசியதாக நீ நினைத்தால் அதை எண்பி. அல்லாவிடில் ஏன் என்னை அடிக்கிறாய்?”

“அவனைச் சும்மா விடுங்கள். நான் கைப்பாஸிடம் போகி றேன். நான் சொல்லுகிற வரையிலும் அவனை இங்கே வைத்திருங்கள். அவன் யாரிடமும் பேசாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறிய அன்னாஸ் வெளியே போகிறான்.

சேசு பேசவில்லை. கூலிப்பட்டாளமான முரடர்களின் கூட்டத்தையும் சட்டை பண்ணாமல் துணிந்து கதவண்டை நிற்கிற அருளப்பரிடம் கூட பேசவில்லை. ஆயினும் வார்த்தை பேசாமலே சேசு, அருளப்பருக்குக் கட்டளை ஏதோ கொடுத்திருக்க வேண்டும். ஏனென்றால் அருளப்பர் அவரைத் துயரமாகப் பார்த்து விட்டு அங்கிருந்து போய்விடுகிறார். என் கண்ணில் அவர் தென்படவில்லை.

சேசு தம்மை வதைப்பவர்களுடன் இருக்கிறார். கயிறுகளால் அடியும், எச்சிலும், நிந்தைகளும், உதைகளும், முடியைப் பிய்த்தலும்தான் அவருக்குக் கிடைத்தன. அப்போது ஒரு ஊழியன் வந்து சேசுவைக் கைப்பாஸின் வீட்டுக்குக் கொண்டுபோகும்படி சொல்கிறான்.

சேசு கட்டுண்டவராய், துன்புறுத்தப்பட்டவராய் மீண்டும் மண்டபத்திற்கு வருகிறார்.

நன்றி : www.catholictamil.com

புத்தகங்கள் தொடர்பிற்கு மாதா அப்போஸ்தலர்கள் சபை, சகோதரர் பால்ராஜ் Ph : 9487257479