தவக்கால சிந்தனைகள் 31 : விசாரனை.. வேதனைப்பயணம் தொடர்கிறது...

“யார் நீ?” அன்னாஸ் கேட்கிறான்.

“நசரேனொகிய சேசு. ராபி. கிறீஸ்து. என்னை நீர் அறிவீர். இருளிலே நான் எதுவும் செய்யவில்லை.”

“இருளிலே செய்யவில்லைதான். ஆனால் நீ தெளிவில்லாத போதனைகளால் மக்கள் கூட்டங்களை வழி தவற நடத்தியிருக்கிறாய். ஆபிரகாமின் பிள்ளைகளுடைய ஆன்மாக்களைக் காப்பாற்றுவது தேவாலயத்தின் உரிமையும் கடமையுமாகும்.”

“ஆன்மாக்கள்! இஸ்ராயேலின் குருவே, இந்த மக்களுள் மிகச் சிறிய, அல்லது மிகப் பெரிய ஆன்மாவிற்காக நீர் நோவுற்றதாகக் கூற முடியுமா?”

“நீ? நோவு என்று சொல்லப்படக் கூடியதாக நீ என்ன செய்திருக்கிறாய்?”

“நான் என்ன செய்தேன்? என்னைக் கேட்பானேன்? இஸ்ராயேல் முழுவதும் என்னைப் பற்றிக் கூறுமே. பரிசுத்த பட்டணத்திலிருந்து மிக வறிய கிராமம் வரை. கற்களும் கூட நான் என்ன செய்தேன் என்று கூறுகின்றன. நான் குருடர்களுக்குப் பார்வையளித்தேன். கண் பார்வையும், இருதயப் பார்வையும். செவிடர்களின் காதுகளைத் திறந்தேன். பூமியின் குரல்களுக்கும் மோட்சக் குரல்களுக்கும். முடவர்களையும், வாதரோகிகளையும் நடக்க வைத்தேன். அவர்கள் மாம்சத்தை விட்டுப் புறப்பட்டு கடவுளை நோக்கி நடக்கவும், அதன்பின் தங்கள் உள்ளங்களால் முன்னேறிச் செல்லும்படியாகவும். குஷ்டரோகிகளைச் சுத்தமாக்கினேன் -

மோயீசனின் சட்டத்தில் சுட்டிக் காட்டப் பட்டுள்ள குஷ்டரோகத்திலிருந்தும், மனிதனைக் கடவுளின் பார்வையில் அசுத்தனாக்கும் குஷ்டமாகிய பாவத்திலிருந்தும்.

இறந்தவர்களை உயிர்ப்பித்தேன். ஆனால் ஒரு சரீரத்தை மறுபடியும் உயிருக்குக் கொண்டு வருவதை நான் ஒரு பெரிய காரியமாகச் சொல்லவில்லை. ஆனால் ஒரு பாவியை இரட்சிப்பது பெரிய காரியம். அதை நான் செய்தேன். ஏழைகளுக்கு உதவினேன். பேராசை படைத்த செல்வந்தரான எபிரேயருக்கு நம் அயலானை நேசிக்க வேண்டிய புனித கட்டளையைப் படிப்பித்தேன். என் கரங்கள் வழியாக ஒரு பொன் ஓடையே பாய்ந்த போதிலும் நான் ஏழையாகவே இருந்து செல்வங்கள் வைத்திருக்கிற உங்களனை வரையும் விட கூடுதலான கண்ணீர்களைத் துடைத்தேன்.

இறுதியாக பெயரிடப்படாத ஒரு செல்வத்தை நான் கொடுத்தேன்: வேதப் பிரமாணத்தைப் பற்றிய அறிவு - கடவுளைப் பற்றிய அறிவு - நாம் அனைவரும் சமமாயிருக்கிறோம் என்ற நிச்சயிப்பு: அதாவது, குற்றங்களும் கண்ணீர்களும். அவை சதுர்பாக ஆளுநரால் அல்லது பெரிய குருவால் செய்யப்பட்டாலோ சிந்தப்பட்டாலோ, அல்லது பிச்சைக்காரனால் அல்லது வண்டிப் பாதையில் சாகிற ஒரு குஷ்டரோகியால் அவை நடைபெற்றாலோ, அவை பரம பிதாவின் புனித பார்வையில் சமமாகவே உள்ளன. நான் செய்தவை இவை தவிர வேறெதுவுமில்லை.”

“நீ உன்னையே குற்றஞ் சாட்டுகிறாய் என்பதை உணரு கிறாயா? நீ சொல்கிறாய்: கடவுளின் பார்வையில் ஒருவனை அசுத்தனாக்குகிற குஷ்டரோகம் மோயீசனால் சுட்டிக் காட்டப்படவில்லை என்று. நீ மோயீசனை நிந்திக்கிறாய். அவருடைய பிரமாணத்தில் சில குறைபாடுகள் இருப்பதாக குறிப்பால் உணர்த்துகிறாய்...”

“அது அவருடைய பிரமாணமல்ல. அது கடவுளுடையது. அது அப்படித்தான். சரீரத்தின் நிர்ப்பாக்கியமாயிருந்து ஒரு முடிவிற்கு வருகிற குஷ்டரோகத்தை விட பெரிய நிர்ப்பாக்கியமாக இருக்கிறது பாவம் என்று நான் சொல்கிறேன். அது ஆன்மாவின் நித்திய நிர்ப்பாக்கியமாகும்.”

“நீ பாவங்களை மன்னிக்க முடியும் என்று சொல்லத் துணிகிறாயா? எப்படி உன்னால் கூடும்?”

“கொஞ்சம் சுத்திகரிக்கும் தண்ணீரைக் கொண்டும் செம்மறிக் கடாவின் பலியைக் கொண்டும் பாவத்தை ரத்துச் செய்வது சட்டபூர்வமானதும் நம்பக் கூடியதுமாகில், அவற்றால் பாவம் பரிகரிக்கப்பட்டு துப்புரவாக்கப்படுமாகில், என் இரத்தமும் என் சித்தமும் அப்படி ஏன் செய்ய முடியாது?”

“ஆனால் நீ இன்னும் செத்து விடவில்லையே! இரத்தம் எங்கேயிருக்கிறது?...”

“நான் இன்னும் சாகவில்லை. ஆனால் நான் சாவேன். ஏனென்றால் அது எழுதப்பட்டிருக்கிறது. மோட்சத்தில் சீயோன் தோன்றுமுனனே - மோயீசன் வருமுன்னே - யாக்கோபுக்கு முன்னே - ஆபிரகாமுக்கு முன்னே - தீமையின் அரசன் மனிதனுடைய இருதயத்தில் கடித்து அதை அவனிடத்திலும், அவன் சந்ததி யிடத்திலும் விஷமேறச் செய்ததிலிருந்தே அது எழுதப்பட்டு விட்டது. அது பூமியில் தீர்க்கதரிசிகளின் குரல்களைக் கொண் டிருக்கிற புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

அது இருதயங்களில் எழுதப்பட்டிருக்கிறது. உம்முடைய இருதயத்திலும், கைப்பாஸின் இருதயத்திலும் ஆலோசனைச் சங்கத்தாரின் இருதயங்களிலும் எழுதப்பட்டிருக்கிறது. அவர்கள் - இல்லை, அந்த இருதயங்கள் நான் நல்லவனாயிருப்பதை மன்னிக்கவில்லை. நான் என் இரத்தத்தின் மூலமாக அவர்களை முன்கூட்டியே மன்னித்து விட்டேன்.

இப்பொழுது நான் என் இரத்தத்தின் சுத்திகரிக்கும் குளியலால் அந்த மன்னிப்பை நிறைவேற்றுவேன்.”

“நாங்கள் பேராசை பிடித்தவர்கள், சிநேகக் கட்டளையை ஒதுக்குகிறவர்கள் என்று சொல்கிறாய்...”

“அது ஒருவேளை உண்மையில்லையோ? எதற்காக என்னைக் கொலை செய்கிறீர்கள்? உங்களை நான் பதவியிறக்கி விடுவேன் என்று பயப்படுகிறீர்கள். ஓ! அப்படிப் பயப்படாதீர்கள்! என் இராச்சியம் இவ்வுலகத்தைச் சார்ந்ததல்ல. எல்லா அதிகாரங்களுக்கும் உரிமையாளர்களாக உங்களை விட்டு விடுகிறேன். உங்களை இடி தாக்கி விழச் செய்கிற “நிறுத்துங்கள்” என்ற சொல்லை எப்பொழுது சொல்வதென்று நித்தியர் அறிவார்.”

“டோராஸைப் போல, என்ன?”

“டோராஸ் மோட்ச மின்னல் தாக்குதலால் அல்ல. அவனுடைய கோபம் மூண்ட தாக்குதலால் இறந்தான். அவனை அடிக்க கடவுள் மறுபுறத்தில் காத்து நின்றார்.”

“அவருடைய உறவினனான என்னிடம் இதை நீ திருப்பிச் சொல்கிறாயா? உனக்கு என்ன துணிச்சல்?”

“நானே சத்தியம். சத்தியம் ஒரு போதும் கோழையாயிராது.”

“ஆங்காரி! முட்டாள்!”

“அல்ல. நேர்மையுள்ளவன். உம்மை நான் நோகச் செய்ததாகக் குற்றஞ் சாட்டுகிறீர். ஆனால் நீங்கள் எல்லோரும் பகைக்கவில்லையா? நீங்கள் ஒருவரையொருவர் பகைக்கிறீர்கள். இப்பொழுது என் மேலுள்ள பகை உங்களை ஒற்றுமைப்படுத்துகிறது. ஆனால் நாளை என்னை நீங்கள் கொன்ற பிறகு, மறுபடியும் ஒருவரையொருவர் அதிகக் கொடூரமாய்ப் பகைப்பீர்கள். அந்தக் கழுதைப் புலியை உங்கள் முதுகிலும், அந்தப் பாம்பை உங்கள் இருதயத்திலும் கொண்டு வாழ்வீர்கள். "

நன்றி : www.catholictamil.com

புத்தகங்கள் தொடர்பிற்கு மாதா அப்போஸ்தலர்கள் சபை, சகோதரர் பால்ராஜ் Ph : 9487257479