தேவ பராமரிப்புக்கு நம்பிக்கையுள்ள அர்ப்பணம் சங்.சேவியர் இக்னேஷியஸ் சுவாமி எழுதியது...... பாகம் -2

நல்லவைகளோ அல்லது கெட்டவைகளோ, அனைத்து நிகழ்ச்சிகளையும் கடவுள் கட்டுப்படுத்துகிறார்:

சர்வேசுரன் சித்தங் கொள்ளாமலும், அனுமதிக்காமலும் இந்த பிரபஞ்சத்தில் எதுவும் நிகழ்வதில்லை. பாவத்தைத் தவிர மற்ற அனைத்திற்கும் இந்த வாக்கியம் பொருந்தும். 'நமது முழு வாழ்நாட்களிலும் எதுவும் தற்செயலாக நிகழ்வதில்லை. கடவுள் எவ்விடங்களிலும் குறுக்கிடுகிறார்' என்பதே திருச்சபையின் பிதாக்களுடையவும், வேத பாரகர்களுடையவும் ஒருமித்த போதனையாக இருக்கிறது.

கடவுள் தாமே இசையாஸ் தீர்க்கதரிசியின் வாய்மொழியாக, "நாமே கடவுள், நம்மையன்றி வேறில்லை. பிரகாசத்தை உண்டுபண்ணுகிறவரும், இருளை ஏற்படுத்துபவரும், சமாதானத்தை கட்டளையிடுபவரும், துன்பத்தை வருவிப்பதும் நாமே, இவைகளையெல்லாஞ் செய்யுங் கடவுளர் நாம் தாம்" (இசை. 45:6-7). "நாம் மட்டும் இருக்கிறோம். நம்மை விட வேறு தேவனில்லை; நாம் மட்டும் காயப்படுத்தி, காயப்பட்டவனைச் சொஸ்தப்படுத்துகிறோம்". (உபா.32:39) என்று மோயீசனுக்குக் கூறினார்.

சாமுவேலின் தாயாகிய அன்னாள் பாடிய சங்கீதத்தில் "ஆண்டவர் உயிரைப் பறிக்கிறார்; உயிரைக் கொடுக்கிறார்: பாதாளங்களில் கொண்டு போகிறார்; அதினின்று திரும்ப கொண்டு வருகிறார் : ஆண்டவர் தரித்திரனாக்குகிறார், ஐசுவரியனாக்குகிறார், தாழ்த்துகிறார்; மறுபடியும் உயர்த்துகிறார்” (1அரசர். 2: 6,7) என்று எழுதப்பட்டுள்ளது. "ஆண்டவர் அனுப்பாதிருக்கத் தீமை பட்டணம் புகுமோ?" (ஆமோஸ். 3:6) என்று ஆமோஸ் கேட்கிறார். “நன்மையும், தீமையும், ஜீவியமும், மரணமும், தரித்திரமும், செல்வமும் சர்வேசுரனிடத்திலிருந்தே உண்டாகின்றன” (சர்வப். 11:14) என்று சாலமோன் அறிக்கையிடுகிறார். இவ்வாறே பரிசுத்த வேதாகமங்களின் எண்ணற்ற இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நோய், சாவு, குளிர், வெப்பம் மற்றும் தன்னிச்சைப்படி நடக்க முடியாத இயற்கைக் காரணங்களால் நடக்கும் விபத்துக்கள், போன்ற சில அவசிய விளைவுகளில் இது உண்மையாக இருக்கும் அதே வேளையில், மனிதனின் சுயாதீன சித்தத்தினால் நிகழும் காரியங்களுக்கு இது பொருந்தாது என்று நீ சொல்லக் கூடும். ஏனெனில் என்னைப் பற்றி ஒருவன் அவதூறு கூறும் போதும், என்னைக் கொள்ளையடிக்கும் போதும், என்னைத் தாக்கும் போதும், என்னைத் துன்புறுத்தும் போதும், இத்தகைய முறையில் என்னை ஒருவன் நடத்துவதைச் சிறிதும் சகிக்க முடியாதவரும், உடனடியாக அதைத் தடுப்பவருமாகிய கடவுளால் தான் இவை நிகழ்கின்றன என்று நான் எப்படி சொல்ல முடியும் என்று நீ எதிர்ப்புக் கூறலாம். எனவே குற்றமனைத்தும் அந்த மனிதனின் சொந்த விருப்பத்தின் மீதும், அவனது அறியாமை அல்லது கெடுமதியின் மீதுமே உள்ளது என்ற முடிவுக்கு நீ வரலாம். இது, கடவுளிடமிருந்து மறைந்து கொள்வதற்கும், நமது தைரியக் குறைவிற்கும், பணிவு குறைவிற்கும் நாம் சொல்லும் சாக்குப் போக்காகும்.

இந்த மாதிரியான வாதங்களைக் கூறி அவற்றில் அனுகூலங்களைத் தேடிக் கொள்வதும், முயற்சிப்பதும் மிகவும் பயனற்றது. அது தேவ பராமரிப்பிற்கு நம்மை முழுவது கையளிக்காமல் இருப்பதற்கான சாக்குப் போக்காகும். கடவுளும் கூட இதை ஏற்க மறுக்கிறார். இத்தகைய நிகழ்ச்சிகளிலும், மற்ற எல்லா நிகழ்ச்சிகளிலும், அவரது உத்தரவையும், அனுமதியையும் மீறி வேறெதுவும் நிகழாது என்ற அவரது வார்த்தையை நாம் கண்டிப்பாக நம்ப வேண்டும்.

இது பற்றி வேதாகமம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

தாவீதரசர் செய்த கொலையையும், கூடா ஒழுக்கத்தையும் தண்டிக்க அவர் விரும்புகிறார். நாத்தான் தீர்க்கதரிசியின் வாய்மொழியாக கடவுளே பின்வருமாறு கூறுகிறார்:

"...ஆகையால் கர்த்தருடைய வாக்கியத்தைப் புறக்கணித்து நீ அவருடைய பார்வைக்குத் தின்மையைச் செய்ததென்ன? ஏத்தையனான உரியாசை நீ பட்டயத்தால் கொலை செய்து, அவன் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக் கொண்டு அம்மோனின் புத்திரரின் வாளாலேயல்லோ அவனைக் கொன்று போட்டாய். நீ நம்மைப் புறக்கணித்து ஏத்தையனாகிய உரியாசின் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக் கொண்டபடியினாலே பட்டயம் என்றைக்கும் உன் வீட்டை விட்டு விலகாது. ஆகையால் கர்த்தர் சொல்லுகிறது என்னவெனில்: இதோ நாம் உன் வீட்டின் தின்மையை உன்மேல் எழும்பி வரச் செய்வோம் ; உன் பார்வையிலே தானே நாம் உன் மனைவிகளை எடுத்து உன் பிறனுக்குக் கையளிப்போம். அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன் ஸ்திரீகளோடு சயனிப்பான். நீ செய்ததை ஒளிப்பிடத்தில் செய்தாய் : நாமோ கண் கூடாய் இஸ்ராயேல ரெல்லாருக்கு முன்பாகவுஞ் சூரியனுக்கு முன்பாகவும் அதைச் செய்வோமென்றார்" (2 அரசர். 12:9-12).

பிற்பாடு யூதர்கள் தங்கள் அக்கிரமங்களால் அவரை மிகக் கசப்பான முறையில் நோகச் செய்து, அவரது கடுங்கோபத்தைத் தூண்டிய போது, ''அசீரியாவுக்குக் கேடாம்! அதுவே நமது கோபத்தின் கசையாகாவும், கோலாகவும் இருக்கும்; அதன் கரத்தில் நமது சினத்தின் வாள் கொடுக்கப்படும். விசுவாசமில்லா வஞ்சக சனமிடம் அதை அனுப்புவோம்; நமது கோபாக்கிரமத்திற்கு ஆளான சனத்திற்கு விரோதமாய்ப் போய் அதின் பறிபொருளைக் கவரும்படியாயும், அதைக் கொள்ளையிடும் படியாகவும், தெருக்களில் கிடக்குஞ் சகதியைப் போல் காலால் அதைத் துவைக்கும்படியாயும் அதற்குக் கட்டளையிடுவோம்" (இசை. 10: 5-6) என்று ஆண்டவர் கூறினார்.

அப்சலோம் தனது தந்தைக்கும், அசீரியாவின் அரசன் யூதர்களுக்கும் எதிராகச் செய்த தீமைகளுக்குக் கடவுள் தம்மையே பொறுப்பாளியாக்கிக் கொண்டதை விட, இன்னும் அதிக வெளிப்படையாக அவர் தம்மையே அறிக்கையிட முடியுமோ? இதுபோன்ற வேறு உதாரணங்களைக் கண்டுபிடிப்பது எளிதுதான். ஆயினும், இவைகள் போதுமானவைகளே. எனவே, அர்ச். அகுஸ்தினாரின் வார்த்தைகளோடு இந்த வாதத்தை முடிப்போம்: "இவ்வுலகில் நமது விருப்பத்திற்கு விரோதமாக (மனிதர்களினாலோ அல்லது வேறு ஏதாவது காரணங்களினாலோ) நமக்கு நேரிடும் அனைத்தும் கடவுளின் சித்தத்தாலும், தேவ பராமரிப்பின் ஏற்பாட்டினாலும், அவரது ஆணைகளாலும், அவரது வழிகாட்டுதலின் கீழும் தான் நிகழ்கின்றன. நமது புத்தியின் பலவீனத்தால் சில நிகழ்ச்சிகளுக்கான காரணத்தை நம்மால் கண்டு பிடிக்க முடியவில்லை என்றால், அது கடவுளாலேயே நிகழ்ந்து விட்டது என்று நாம் நம்புவோம். அவரது கரங்களிலிருந்து அதை ஏற்றுக் கொள்வதன் மூலம் அவருக்குரிய மரியாதையைக் காட்டுவோம். காரணமின்றி அவர் அதை அனுப்பவில்லை என்று நாம் உறுதியாக நம்புவோமாக”.

தங்களது அடிமைத்தனமும், துன்பங்களும் கடவுளிமிடருந்தே வந்தன என்பதை ஏற்காமல், அவை தங்கள் துரதிருஷ்டத்தாலும், வேறு காரணங்களாலுமே வந்தன என்று முறுமுறுத்தவர்களும், குறைகூறியவர்களுமான யூதர்களுக்கு மறுமொழியாக, எரேமியாஸ் தீர்க்கதரிசி அவர்களைப் பார்த்து: "கர்த்தர் கற்பியாமலே (ஏதேனும்) சம்பவிக்குமென்று சொல்பவன் யார்? உன்னதக் கடவுளின் வாயினின்று நன்மைகளும் தின்மைகளும் புறப்பட்டு வரவில்லையா? தன் பாவங்களுக்காகத் (துன்பப்பட வேண்டிய) மனிதன் தனது ஜீவிய காலத்தில் முறையிடுவானேன்? நமது வழிகளைத் தேடிப் பரிசோதித்துக் கர்த்தரிடந் திரும்பி வருவோமாக! நமது இருதயங்களையுங் கைகளையும் கர்த்தரை நோக்கி வானத்துக்கேற எடுப்போமாக! நாங்கள் அக்கிரமஞ் செய்தோம்; உமக்குக் கோபத்தை மூட்டினோம்; ஆதலால் தான் எங்களுக்கு இரங்காமலிருக்கின்றீர்” (ஏரே. புலம். 3 : 37 - 42).

இந்த வார்த்தைகள் போதுமான தெளிவோடு இருக்கவில்லையா? நம் நன்மைக்காக, நாம் அவற்றை மனதில் பதித்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொன்றும் தேவ சித்தத்தின்படி தான் நடக்கின்றன என்று ஏற்றுக் கொள்வதில் கவனமாயிருப்போம். அனைத்துமே அவரது தந்தைக்குரிய கரத்தால் வழிநடத்தப்படுகின்றன என்று நம்புவோம்.