தவக்கால சிந்தனைகள் 25 : ( நம் ஆண்டவருடைய ஒவ்வொரு வார்த்தையும் தியானிக்கவும் அவரை கண்டுபிடிக்கவும் செய்யும்..) கடவுள் மனிதனின் காவியத்திலிருந்து...

“ஆண்டவரே, உம்மை எங்களுக்கு வெளிப்படுத்தி உலகிற்கு ஏன் உம்மை வெளிப்படுத்தவில்லை?” என்று யூதா ததேயுஸ் கேட்கிறார்.

“ஏனென்றால் நீங்கள் என்னை நேசிக்கிறீர்கள். என் வார்த்தைகளைக் கடைப்பிடிக்கிறீர்கள். அப்படிச் செய்கிறவன் என் பிதாவினால் சிநேகிக்கப்படுவான். நாங்கள் அவனிடம் வருவோம். அவனுடனும், அவனிலும் வாசம் பண்ணுவோம். ஆனால் என்னை நேசியாதவன் என் வார்த்தைகளை அனுசரியான். அவன் மாம்சப் பிரகாரமும் உலகப் பிரகாரமும் நடக்கிறான். இப்பொழுது இதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். நான் உங்களுக்குச் சொன்னது நாசரேத் சேசுவின் வார்த்தையல்ல. அது பிதாவின் வார்த்தையாகும். ஏனென்றால் என்னை அனுப்பின பிதாவின் வார்த்தையாக நான் இருக்கிறேன். நான் இவ்வாறு பேசி இக்காரியங்களை உங்களிடம் கூறியது ஏனென்றால் சத்தியத்தையும் ஞானத்தையும் நீங்கள் முழுவதும் கொண்டிருக்கும்படி நானே உங்களை ஆயத்தம் செய்ய ஆசிக்கிறேன்.

ஆயினும் இன்னும் நீங்கள் கண்டுபிடிக்கவோ ஞாபகத்தில் வைக்கவோ கூடாதவர்களாயிருக்கிறீர்கள். ஆனால் தேற்றுகிறவராகிய இஸ்பிரீத்துசாந்துவை என் நாமத்தினால் பிதா உங்களுக்கு அனுப்பி, அவர் உங்களிடம் வரும்போது, நீங்கள் கண்டுபிடிக்கக் கூடியவர்களாயிருப்பீர்கள். அவர் சகலத்தையும் உங்களுக்குப் படிப்பிப்பார். நான் உங்களுக்குக் கூறியவற்றை உங்களுக்கு நினைப்பூட்டுவார்.

“என் சமாதானத்தை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன். என் சமாதானத்தை உங்களுக்குத் தருகிறேன். உலகம் தருவதைப் போல் நான் உங்களுக்கு அதைத் தருவதில்லை. இதுவரையிலும் அதை நான் உங்களுக்குத் தந்தது போலுமல்ல. ஆசீர்வதிக்கப்பட்டவரின் ஆசீர்வதிக்கப்பட்ட உபசார வாழ்த்துதலை ஆசீர்வதிக்கப் பட்டவர்களுக்குக் கொடுப்பதல்ல அது. இப்பொழுது நான் உங்களுக்குக் கொடுக்கும் சமாதானம் அதை விட அதிக ஆழ்ந்ததாயிருக்கிறது. இந்த விடைபெறுதலில் நான் என்னையே உங்களுக்கு எடுத்தளிக்கிறேன். என்னுடைய சமாதானத்தின் இஸ்பிரீத்துவை உங்களுக்கு அளிக்கிறேன். என் சரீரத்தையும் இரத்தத்தையும் உங்களுக்களித்தது போல் அளிக்கிறேன்.

அடுத்திருக்கிற போரில் உங்களுக்குப் பலம் ஏற்படும்படியாக அளிக்கிறேன். சாத்தானும் உலகமும் உங்கள் சேசுவுக்கெதிராய் ஒரு போரை மூட்டி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது அவர்களின் நேரம். உங்கள் அகத்துள் சமாதானத்தைக் கொண்டிருங்கள். அது என்னுடைய இஸ்பிரீத்துவாகிய சமாதானத்தின் ஆவியாகும். ஏனெனில் நான் சமாதானத்தின் அரசராயிருக்கிறேன்.

நீங்கள் அதிகம் கைவிடப்பட்டதாக உணராதபடி அதைக் கொண்டிருங்கள். தனக்குள்ளே சர்வேசுரனுடைய சமாதானத்தைக் கொண்டவனாய் துன்பப்படுகிறவன், துன்பப்பட்டாலும் தேவதூஷணஞ் சொல்ல மாட்டான். நம்பிக்கையிழக்க மாட்டான்.

“அழாதீர்கள்"

“நான் பிதாவிடம் போகிறேன். பின் திரும்பி வருவேன்” என்று நான் சொன்னதையும் நீங்கள் கேட்டீர்கள். நீங்கள் என்னை மாம்சத்தைத் தாண்டி நேசித்தீர்களானால், நான் என் தாயகத்திற்கு வெளியே இத்தனை நீண்ட காலம் இருந்தபின் பிதாவிடம் போகிறதைப் பற்றி மகிழ்ச்சியடைவீர்கள்... என்னை நேசிக்கிறவரும் என்னிலும் பெரியவருமாயிருக்கிறவரிடம் நான் போகிறேன். இது நடைபெறுமுன் உங்களுக்குச் சொல்கிறேன். இரட்சகரின் எல்லாப் பாடுகளையும், அவற்றைச் சந்திக்குமுன் உங்களுக்கு அறிவித்தேன். காரணம், எல்லாம் நிறைவேறும்போது நீங்கள் மேலும் மேலும் என்னை விசுவசிக்கும்படியாகவே.கலக்கமடையாதீர்கள். பயப்படாதீர்கள். உங்கள் இருதயங்களுக்கு சமநிலை அவசியமாயிருக்கிறது.

நன்றி : www.catholictamil.com

புத்தகங்கள் தொடர்பிற்கு மாதா அப்போஸ்தலர்கள் சபை, சகோதரர் பால்ராஜ் Ph : 9487257479