தவக்கால சிந்தனைகள் 26 : இயேசுவுவே உண்மையான திராட்சைச் செடி... சேசுவின் மறையுரை தொடர்ச்சி..

“நான் உங்களுடன் பேச அதிக நேரமில்லை... ஆனால் சொல்ல வேண்டியவை எவ்வளவோ உள்ளன. என்னுடைய சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதின் முடிவுக்கு வந்திருக்கிற நான் எதையுமே சொல்லவில்லை. இன்னும் எவ்வளவோ சொல்லப்பட வேண்டியிருக்கிறது என்றே உணருகிறேன். உங்களுடைய மனநிலை என்னை உணர்வுப்படுத்துகிறது. ஆனால் நான் என்ன சொல்வேன்? என் அலுவலில் தோற்று விட்டேனென்றா? அல்லது நீங்கள் கடின இருதயமுடையவர்களானதால் என் வேலையால் ஒரு பயனும் இல்லையென்றா? உங்களைப் பற்றி நான் சந்தேகப்படவா? இல்லை. நான் கடவுள் மேல் நம்பிக்கை வைத்து, என் அருமை யானவர்களே, உங்களை அவரிடம் ஒப்படைக்கிறேன்.

தம்முடைய வார்த்தையானவரின் வேலையை அவர் முற்றுப்பெறச் செய்வார். மனித ஒளியைத் தவிர வேறு எந்த ஒளியுமில்லாமல் இறக்கிற தகப்பனைப் போல் நான் இல்லை. நான் சர்வேசுரனை நம்பி யிருக்கிறேன். உங்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய எல்லா ஆலோசனைகளின் அவசரத் தன்மையை நான் எனக்குள் உணர்ந்தாலும், அவை உங்களுக்குத் தேவை என நான் கண்ட போதிலும், காலம் விரைந்து செல்கிறதை நான் கண்டுபிடித்தாலும், நான் என் கதியை நோக்கி அமைதியான மனதுடனே செல்கிறேன்.

உங்களிடம் விதைக்கப்பட்ட விதைகளின் மேல் பனி பொழியப் போகிறது என்பதை அறிவேன். அது அவ்விதைகள் எல்லாவற்றையும் முளைக்கச் செய்யும். அதன்பின் தேற்றுகிறவராகிய சூரியன் வருவார். அவை பெரிய விருட்சங்களாக வளரும். இவ்வுலகத்தின் தலைவன் வரப் போகிறான். அவனிடம் எனக்கு எதுவுமில்லை. மீட்பின் காரியத்திற்கல்லாதிருந்தால் அவனுக்கு என்மேல் எந்த வல்லமையுமிராது. ஆனால் அது நடக்கிறது.

ஏனென்றால் நான் என் பிதாவை நேசிக்கிறேனென்றும் அவரை நான் எவ்வளவு நேசிக்கிறேனென்றால், மரணமட்டும் அவருக்குக் கீழ்ப்படிவேனென்றும், ஆகவே அவர் எனக்கு என்ன கட்டளையிட்டாரோ அதை நிறைவேற்றுவேன் என்றும் இந்த உலகம் அறியும்படியாகவே.

“நாம் போக நேரமாயிற்று. எழுந்திருங்கள். என் இறுதி வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள். நானே உண்மையான திராட்சைச்செடி. பிதா திராட்சையைக் கழிப்பவர். கனி கொடாத கிளையையெல்லாம் அவர் தறிக்கிறார். கனி கொடுக்கிற கிளையை, அது மேலும் அதிக கனிதரும் பொருட்டு அதைக் கழிக்கிறார். என் வார்த்தையினால் நீங்கள் சுத்தமாயிருக்கிறீர்கள். அதில் நீடித்திருக்கும்படியாக என்னில் நிலைத்திருங்கள். நானும் உங்களில் நிலைத்திருப்பேன். திராட்சைச் செடியிலிருந்து வெட்டப்பட்ட கிளை கனி கொடுக்க முடியாது. நீங்கள் என்னில் நிலைத்திராவிட்டால் உங்கள் மட்டிலும் அது உண்மையாகும்.

நானே திராட்சைச் செடி. நீங்கள் அதன் கிளைகள். என்னுடன் ஐக்கியத்தில் நிலைத்திருப்பவன் மிகுதியான கனிகளைத் தருவான். ஆனால் வெட்டப்படுகிற ஒருவன் உலர்ந்த கிளையாகி நெருப்பில் போடப்பட்டு எரிவான். ஏனென்றால் நீங்கள் என்னிடம் ஐக்கியப்பட்டிராவிட்டால், உங்களால் ஒன்றும் செய்ய இயலாது. ஆதலால் என்னில் நிலைத்திருங்கள். என் வார்த்தையும் உங்களில் நிலைத்திருக்கக் கடவது. அதன்பின் நீங்கள் விரும்பும் எதையும் கேளுங்கள். அது உங்களுக்குச் செய்யப்படும். நீங்கள் எவ்வளவிற்கதிகமாய் கனி கொடுத்து என் சீடர்களா யிருப்பீர்களோ, அந்த அளவிற்கு என் பிதா எப்போதும் அதிக மகிமை பெறுவார்.

நன்றி : www.catholictamil.com

புத்தகங்கள் தொடர்பிற்கு மாதா அப்போஸ்தலர்கள் சபை, சகோதரர் பால்ராஜ் Ph : 9487257479