தவக்கால சிந்தனைகள் 14 : கடைசி இராவுணவின் தொடர்ச்சி... கடவுள் மனிதனின் காவியத்திலிருந்து...

“கட்டுகிறவர்களால் ஒதுக்கப்பட்ட கல்லே கட்டிடத்தின் மூலைக் கல்லாயிற்று - ஆண்டவர் பெயரால் வருபவர் ஆசீர்வதிக்கப் பெற்றவர்.”

சங்கீதப் பாடல் முடிவடைய சேசு பாஸ்கா ஆட்டுக் குட்டியை மறுபடியும் வெட்டிப் பரிமாறுகிறார்.

அப்போது மத்தேயு யூதாஸிடம்: “உமக்கு உடம்புக்கு நன்றாயில்லையா?” என்று கேட்கிறார்.

அதற்கு யூதாஸ்:

“இல்லை. என்னைச் சும்மா விடும். என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்” என்று சொல்கிறான்.

மத்தேயு தோள்களை அசைக்கிறார்.

அதைச் செவியுற்ற அருளப்பர்:

“ஆண்டவருக்கும் உடம்பு நன்றாயில்லை. என் சேசு, உமக்கு என்ன செய்கிறது? உம்முடைய குரல் உடல் நலமில்லாத, அல்லது அதிகமாக அழுதுள்ளவனின் குரலைப் போல் பலவீனமாய் இருக்கிறதே” என்று சேசுவைப் பிடித்துக் கொண்டு அவர் மார்பில் தலையைச் சாய்த்தபடி கேட்கிறார்.

“நான் அதிகமாக நடந்து எனக்கு ஜலதோஷம் கண்டுள்ளது. அவர் அதிகமாகப் பேசியுள்ளார். அவ்வளவுதான்” என்று அமைதியிழந்து கூறுகிறான் யூதாஸ்.

சேசு யூதாஸுக்குப் பதில் கூறாமல் அருளப்பரிடம்:

“இதற்குள் நீ என்னை அறிந்திருக்கிறாய்... எது என்னைக் களைப்படையச் செய்கிறது எனபதும் உனக்குத் தெரியும்” என்று கூறுகிறார்.

பாஸ்கா ஆட்டுக் குட்டி ஏறக்குறைய உட்கொள்ளப்பட்டு விட்டது. சேசு மிகக் கொஞ்சமே உட்கொண்டார். ஒவ்வொரு தடவை இரசம் பருகிய போதும் ஒரு சிறுவாயளவுதான் பருகினார். அதற்கீடாக நிறைய தண்ணீர் குடித்தார் - காய்ச்சலில் இருப்பது போல. அவர் மறுபடியும் பேசத் தொடங்குகிறார்.

“சற்று முன் நான் செய்ததை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டுமென விரும்புகிறேன். முதன்மையானவன் கடைசியானவனைப் போலிருக்கிறான் என்றும் சரீரப் பிரகாரமாயில்லாத ஓர் உணவை உங்களுக்குக் கொடுக்கப் போகிறேன் என்றும் கூறினேன். உங்கள் உள்ளங்களுக்கு தாழ்ச்சியென்னும் ஊட்ட உணவைக் கொடுத்திருக்கிறேன். நீங்கள் என்னை போதகரென்றும் ஆண்டவரென்றும் அழைக்கிறீர்கள். அது சரியே. நான் அவர்தான். அப்படிப்பட்ட நான் உங்கள் பாதங்களைக் கழுவினேனாகில், நீங்கள் ஒருவர் ஒருவரின் பாதங்களைக் கழுவ வேண்டும். நான் செய்ததை நீங்களும் செய்யும்படி உங்களுக்கு முன்மாதிரிகை காண்பித்தேன்.

இதோ நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எந்த ஊழியனும் தன் எஜமானுக்கு மேற்பட்டவனல்ல. எந்த அப்போஸ்தலனும் தன்னை ஏற்படுத்தியவருக்கு மேலானவனல்ல. இந்த விஷயங்களைக் கண்டுபிடிக்க முயலுங்கள். இவற்றைக் கண்டுபிடித்து நடைமுறையில் அனுசரிப்பீர்களாகில் நீங்கள் ஆசீர்வதிக்கப் படுவீர்கள். ஆனால் உங்களில் எல்லாரும் ஆசீர்வதிக்கப்பட மாட்டீர்கள். உங்களை நான் அறிவேன். நான் யாரைத் தெரிந்து கொள்கிறேன் என்றும் அறிவேன். நான் எல்லாரைப் பற்றியும் ஒரே விதமாகப் பேசவில்லை. ஆனால் உண்மை எதுவோ, அதைச் சொல்லுகிறேன். ஆனால் என்னைப் பற்றி எழுதப்பட்டவை நிறைவேற வேண்டும்.

“என்னுடன் அப்பம் உண்பவனே எனக்கெதிராக எழும்புகிறான்.” என்னைப் பற்றி நீங்கள் எந்த சந்தேகமும் கொள்ளாதபடி நான் எல்லாவற்றையும் அவை நடைபெறுவதற்கு முன்பே உங்களுக்குச் சொல்லுகிறேன். எல்லாம் நிறைவேற்றம் அடைந்தபின் நான் நான்தான் என்று இன்னுமதிகமாக விசுவசிப்பீர்கள். என்னை ஏற்றுக் கொள்கிறவன் என்னை அனுப்பிய பரலோகத்திலிருக்கிற பிதாவை ஏற்றுக் கொள்கிறான். நான் அனுப்புகிறவர்களை ஏற்றுக் கொள்கிறவன் என்னை ஏற்றுக் கொள்கிறான். ஏனென்றால் நான் பிதாவுடன் இருக்கிறேன். நீங்கள் என்னுடன் இருக்கிறீர்கள்... இப்பொழுது நாம் சடங்கை முடிப்போம்.”

பொதுப் பான பாத்திரத்தில் மேலும் இரசத்தை ஊற்றுகிறார். ஆனால் தாமும் பருகி மற்றவர்களுக்கும் கொடுப்பதற்கு முன் அவர் எழுகிறார். எல்லாரும் அவருடன் எழுந்து நிற்கிறார்கள். முந்திப் பாடிய ஒரு சங்கீதத்தையே அவர் திரும்பவும் பாடுகிறார்:

“நான் விசுவசித்தபடியால் பேசினேன்...” (சங். 115).

இதன் பிறகு அவர் முடிவுக்கு வராத ஒரு சங்கீதத்தைப் பாடுகிறார். அது அழகானது. ஆனால் நித்தியமானது. அதன் தொடக்க வார்த்தை களிலிருந்தும் அதன் நீளத்திலிருந்தும் அதைக் கண்டுபிடித்து விட்டேன் என நினைக்கிறேன்... சங். 118. அதை அவர்கள் இப்படிப் பாடுகிறார்கள்:

ஒரு பாகத்தைப் பல்லவி போல் சேர்ந்து பாடியபின், தனிக்குரலில் சில வரிகளையும், அடுத்த சில வரிகளைச் சேர்ந்தும் இபபடியே முடிவு வரையிலும் பாடுகிறார்கள். பாடி முடியவும் அவர்களுக்குத் தாகம் ஏற்பட்டது ஆச்சரியமல்ல.

புத்தகங்கள் தொடர்பிற்கு மாதா அப்போஸ்தலர்கள் சபை, சகோதரர் பால்ராஜ் Ph : 9487257479