தவக்கால சிந்தனைகள் 15 : (இன்று முதல் சனி.. இன்றைய பதிவில் மாதாவின் வியாகுலத்தை தியானிக்க ஒரு சில வரிகள் உதவும்) திவ்ய பலி பூசையை ஏற்படுத்துதல்.. (முக்கியமான பகுதி)

சேசு அமர்கிறார். அவர் சாய்மணையில் சாயவில்லை. நாம் உட்காருவது போல அமர்ந்திருக்கிறார். அவர் கூறுகிறார்:

“பழைய சடங்கு நடந்து முடிந்து விட்டதால் இனி நான் புதிய திருச்சடங்கை நிறைவேற்றுகிறேன். ஒரு அன்பின் புதுமையை உங்களுக்கு வாக்களித்திருக்கிறேன். அதைச் செய்யும் தருணம் இதுவே. அதன் காரணமாகவே இந்தப் பாஸ்காவை நான் ஆவலாய்த் தேடினேன். இது முதல் நிரந்தரமான அன்பின் திருச்சடங்கில் உட்கொள்ளப்படும் பலிப்பொருள் இதுவாக இருக்கும். என் பிரியமுள்ள நண்பர்களே, பூமியின் முழு வாழ்நாளெல்லாம் நான் உங்களை நேசித்திருக்கிறேன். என் பிள்ளைகளே, நித்தியம் முழுவதும் நான் உங்களை நேசித்தேன். முடிவு பரியந்தம் உங்களை நேசிக்க விரும்புகிறேன். இதைவிடப் பெரிய காரியம் வேறெதுவுமில்லை. இதை மனதில் வைத்திருங்கள். நான் போகிறேன். ஆனால் நான் இப்பொழுது ஆற்றப் போகிற புதுமையின் வழியாக நாம் எக்காலத்திற்கும் ஐக்கியப் பட்டிருப்போம்.”

சேசு ஒரு முழு அப்பத்தை எடுத்து இரசம் நிரம்பிய பாத்திரத்தின் மேல் வைக்கிறார். அவற்றை ஆசீர்வதித்து ஒப்புக் கொடுக்கிறார். பின் அந்த அப்பத்தைப் பிட்டு பதின்மூன்று வாயளவு துண்டுகளை எடுத்து ஒவ்வொரு அப்போஸ்தலருக்கும் ஒன்று கொடுக்கும் போது சொல்கிறார்:

“இதை வாங்கி உண்ணுங்கள். இது என் சரீரமாயிருக்கிறது. செல்லவிருக்கிற என் ஞாபகமாக இதைச் செய்யுங்கள.” பின்னும், பான பாத்திரத்தைக் கொடுத்துச் சொல்கிறார்:

“இதை வாங்கிப் பருகுங்கள். இது என் இரத்தமாயிருக்கிறது. என் இரத்தத்திலும், என் இரத்தத்தின் வழியாகவும் செய்யப்படும் புதிய உடன்படிக்கையின் பாத்திரம் இதுவே. இது உங்களுக்காக உங்கள் பாவங்களை மன்னிக்கவும், உங்களுக்கு ஜீவியம் கொடுப்பதற்காகவும் சிந்தப்படும். இதை என் ஞாபகமாகச் செய்யுங்கள்.”

சேசு மிகவும் துயரமாயிருக்கிறார். அவர் முகத்தில் புன்னகையோ, ஒளியின் ஓர் அடையாளமோ, நிறமோ காணப் படவில்லை. ஏற்கெனவே மரண அவஸ்தைப்படும் முகமாயிருக்கிறது. முழுக் கவலையோடு அப்போஸ்தலர்கள் அவரை நோக்கிப் பார்க்கிறார்கள்.

சேசு எழுந்து சொல்கிறார்:

“நீங்கள் எழ வேண்டாம். நான் உடனே திரும்பி வருவேன்.” அப்போது அவர் பதின்மூன்றாம் அப்பத்துண்டையும் பாத்திரத்தையும் எடுத்துக்கொண்டு இராப் போஜன சாலையை விட்டு வெளியே வருகிறார்.

“அவர் தம் தாயிடம் போகிறார்” என்று அருளப்பர் மெல்லச் சொல்கிறார்.

யூதா ததேயுஸ் ஒரு பெருமூச்சுடன்:

“அவர்கள் பாவம்!” என்கிறார்.

“அவர்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறீரா?” என்று இராயப்பர் கேட்கிறார்.

“அவர்களுக்கு எல்லாம் தெரியும். எப்போதும் அவர்கள் எல்லாவற்றையும் அறிந்தேயிருக்கிறார்கள்.”

எல்லாரும் மிகத் தாழ்ந்த குரலில் பேசுகிறார்கள் - ஒரு சடலம் இருக்கிற இடத்தில் பேசுவதுபோல.

தோமையார் கேட்கிறார்: “உண்மையாகவே நீங்கள் அப்படி நினைக்கிறீர்களா?...” என்று. அவருக்கு இன்னும் நம்புவதற்கு மனம் வரவில்லை.

அதற்கு செபதேயுவின் யாகப்பர்:

“உமக்கு அதில் சந்தேகமா? இது அவருடைய நேரம்” என்கிறார்.

“நாம் பிரமாணிக்கமாக இருப்பதற்கு கடவுள் நமக்குத் திடமளிப்பாராக!” என்கிறார் தீவிர சீமோன்.

“ஓ! நான்...” என்று இராயப்பர் பேசத் தொடங்கவும் கவனத்தோடிருக்கிற அருளப்பர்:

“அமைதி! அவர் வருகிறார்” என்கிறார்.

சேசு திரும்ப உள்ளே வருகிறார். அவருடைய கரத்தில் வெறும் பாத்திரம் உள்ளது. அதன் அடியில் மாத்திரம் இரசத்தின் அடையாளம் இருக்கிறது. சர விளக்கின் வெளிச்சத்தில் அது இரத்தம் போலவே காணப்படுகிறது. யூதாஸ் இஸ்காரியோத் தன் முன்னால் இருக்கிற அந்தப் பாத்திரத்தால் கவரப்பட்டவனைப் போல் பார்க்கிறான். பின் கண்களைத் திருப்பிக் கொள்கிறான். சேசு அவனைக் கவனிக்கிறார். நடுக்கம் கொள்கிறார். அப்போது அவர் மார்பில் சாய்ந்துள்ள அருளப்பர் அதை உணருகிறார்.

“நீர் நடுங்குகிறீரே! சொல்லக் கூடாதா?” என்கிறார்.

“இல்லை. நான் காய்ச்சலால் நடுங்கவில்லை... நான் எல்லா வற்றையும் உங்களுக்குச் சொல்லி விட்டேன். எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்து விட்டேன். இதற்குமேல் வேறு எதையும் என்னால் கொடுக்க முடியாது. என்னையே உங்களுக்குக் கொடுத்து விட்டேன்.”

அவர் வழக்கமாகச் செய்யும் கையசைவைச் செய்கிறார். குவிந்திருந்த தம் கரங்களை இப்பொழுது அவர் விரித்து, அன்போடு நீட்டி, தலையைத் தாழ்த்தியிருக்கிறார். அது அவர் இப்படிச் சொல்வது போலிருக்கிறது:

“இதற்கு மேல் என்னால் கொடுக்க முடியாமைக்கு மன்னித்துக் கொள்ளுங்கள்”

சிந்தனை :

"தன்னையே தாரை வார்த்துக் எங்களுக்கு கொடுத்த முழுமையான அன்பே... உம்மை நாங்கள் நேசிக்கிறோம்"

" தன் ஒரே மகனை எங்களுக்காக பலியாக்கியது மட்டுமில்லாமல்... கடவுளுடைய தாயாக மட்டும் இல்லாமல் மனுக்குலத்தின் தாயாகவும், கடவுளுடைய முதல் சீடத்தியாகவும், முதல் கிறிஸ்தவளாகவும் முழுப்பிரமானிக்கமாக இருந்து ஆண்டவருடைய முழுப்பாடுகளில் மன தன்னையே ஒப்புக் கொடுத்து முழுமையாக பங்கேற்று எங்களை ஆண்டவரோடு சேர்ந்து மீட்ட இணை மீட்பரான பரிசுத்த தாயே உம்முடைய வியாகுலம் பெரிது, கொடியது, மிக நீளமானது அதை இன்றைய நாளில் தியானிக்க கடமைப்பட்டுள்ளோம்.. "

உங்களை எங்களுக்கு தாயாக கொடுத்த சர்வேசுவருக்கு நன்றி மற்றும் ஸ்தோத்திரம்  .

புத்தகங்கள் தொடர்பிற்கு மாதா அப்போஸ்தலர்கள் சபை, சகோதரர் பால்ராஜ் Ph : 9487257479