தவக்கால சிந்தனைகள் 13 : சுத்திகரிப்பு (பாதம் கழுவும்) சடங்கு தொடர்ச்சி... கடவுள் மனிதனின் காவியத்திலிருந்து..

சேசு முடித்து விட்டார். அவர் துண்டை எடுத்து விட்டு சுத்தமான நீரில் தம் கரங்களைக் கழுவி, தம் ஆடைகளை அணிந்து, தமதிடத்திற்குச் செல்கிறார். அவர் உட்காரும்போது: ‘நீங்கள் இப்பொழுது சுத்தமாயிருக்கிறீர்கள். ஆனால் எல்லாருமல்ல. அப்படி இருக்க விரும்பியவர்கள்தான்’ என்று சொல்கிறார்.

சேசு யூதாஸை உற்று நோக்குகிறார். யூதாஸ் இதைக் கேளாதவன் போல் நடிக்கிறான். மத்தேயுவிடம் எப்படி தன்னுடைய தகப்பன் தன்னை ஜெருசலேமுக்கு அனுப்புவதில் கருத்தா யிருந்தாரென்று விளக்கிச் சொல்வதில் முனைப்பாக இருக்கிறான். பிரயோஜனமற்ற பேச்சு. அவன் எவ்வளவு தைரியசாலியாக இருந்தாலும் நிச்சயம் அவன் கலங்காமலிருக்க முடியாது. தனக்கு ஒரு தோற்றம் கொடுக்கவே அந்தப் பேச்சு.

சேசு மூன்றாம் முறையாக பொதுப் பாத்திரத்தில் இரசம் ஊற்றுகிறார். தாமும் பருகி மற்றவர்களுக்கும் வழங்குகிறார். பின் 114-ம் சங்கீதம் என்று நினைக்கிறேன். அதை சேசு தொடங்க மற்றவர்கள் சேர்ந்து பாடுகிறார்கள்.

“ஆண்டவரை நேசிக்கிறேன். ஏனெனில் அவர் என் மன்றாட்டின் குரலைக் கேட்டார். அவர் எனக்குத் தமது செவியைச் சாய்த்தபடியால் என் வாழ்நாளளவும் நான் அவரை மன்றாடுவேன். மரணத்தின் சஞ்சலங்கள் என்னைச் சூழ்ந்து கொண்டன.”

சற்று அமைதிக்குப் பின் அவர் மறுபடியும் பாடுகிறார்: (சங். 115)

“நான் விசுவசித்தபடியால் பேசினேன். ஆனால் நான் மிகவும் சிறுமையடைந்து விட்டேன். என்னுடைய கலக்கத்தில் எல்லா மனிதனும் பொய்யன் என்று சொன்னேன்...”

சேசு யூதாஸை உற்று நோக்கிப் பார்க்கிறார். இன்று மாலை என் சேசுவின் குரல் களைத்துப் போயிருக்கிறது. ஆனால் அது பின்வரும் வசனங்களைப் பாடும்போது அதன் வலிமையை மீண்டும் பெறுகிறது:

“பரிசுத்தருடைய மரணம் ஆண்டவருடைய சமூகத்தில் விலைமதிப்பானது - என் கட்டுக்களை உடைத்தீர். உமக்குத் தோத்திரப் பலி செலுத்துவேன்; ஆண்டவருடைய திருநாமத்தைக் கூவி யழைப்பேன்...”

மேலும் சற்று அமைதி. சேசு மறுபடியும் சங்கீதத்தைத் தொடங்கிப் பாடுகிறார்:

“சகல ஜனங்களே, கர்த்தரைப் புகழுங்கள். சர்வ ஜனங்களே! அவரைத் துதியுங்கள். ஏனெனில் அவருடைய தயாளம் நமது மேல் ஸ்திரப்பட்டது. கர்த்தரின் உண்மை என்றும் நிலைத்திருக்கும் (சங். 116).

யூதாஸின் குரல் எவ்வளவு அபசுரமாக கேட்கிறதென்றால், தோமையார் தம் வலிமையான கீழ் ஸ்தாயிக் குரலால் அவன் குரலை நேராகக் கொண்டுவர வேண்டியிருந்தது. அவனை அவர் உற்றுப் பார்க்கிறார். மற்றவர்களும் அவனைப் பார்க்கிறார்கள். காரணம், பொதுவாக அவன் குரல் மற்றவர்களுடன் இசைந்தே இருக்கும். அவன் எல்லாக் காரியங்களிலும் செய்வது போல் இதிலும் தன் குரலைப் பற்றிப் பெருமை கொண்டிருப்பதாக நான் உணர்ந் திருக்கிறேன். ஆனால் இந்த மாலையில் சில பாடல் கருத்துகள் அவனை நிலையிழக்கச் செய்வதால் அவன் அபசுரங்களில் பாடுகிறான். அந்த வாக்கியங்களை அழுத்துவதாக அமைந்த சேசுவின் பார்வையும் அவனை அப்படி நிலைகுலையச் செய்கின்றது. அப்படிப்பட்ட வாக்கியங்களில் ஒன்று:

“மனிதன் மீது நம்பிக்கை கொள்வதை விட ஆண்டவர் மேல் நம்பிக்கை கொள்வது நலமாமே.”

இன்னொன்று: ‘நான் தள்ளிவிடப்பட்டபோது தள்ளாடினேன். கீழே விழப் போனேன். ஆனால் ஆண்டவர் என்னைத் தாங்கிக் கொண்டார்.’

இன்னொன்று: ‘நான் சாக மாட்டேன். நான் வாழ்ந்து ஆண்டவரின் செயல்களை எடுத்துரைப்பேன்.’ நான் சொல்லப் போகும் மேலும் இரு வாக்கியங்கள் அந்தத் துரோகியின் குரலை அவன் தொண்டையிலேயே வைத்து நசுக்குகின்றன:

“கட்டுகிறவர்களால் ஒதுக்கப்பட்ட கல்லே கட்டிடத்தின் மூலைக் கல்லாயிற்று - ஆண்டவர் பெயரால் வருபவர் ஆசீர்வதிக்கப் பெற்றவர்.”

சங்கீதப் பாடல் முடிவடைய சேசு பாஸ்கா ஆட்டுக் குட்டியை மறுபடியும் வெட்டிப் பரிமாறுகிறார்.

புத்தகங்கள் தொடர்பிற்கு மாதா அப்போஸ்தலர்கள் சபை, சகோதரர் பால்ராஜ் Ph : 9487257479