தவக்கால சிந்தனைகள் 10 : கடைசி இராப்போஜனம் தொடர்ச்சி.. கடவுள் மனிதனின் காவியத்திலிருந்து...

இராப்போஜன சாலை மீண்டும் அமைதியடைந்த போது சேசு உள்ளே வருகிறார். அவருடைய உயர்ந்த உருவம் வரக் கூடிய அளவிற்குச் சரியாக இருக்கிற சிறிய கதவின் வழியாக, படிக்கட்டின் மேல் தளத்தில் வந்து நின்றபடி, தம் சாந்தமான துயரப் புன்முறுவலோடு கரங்களை விரித்துக் கொண்டு

“உங்களுக்கு சமாதானம் வருவதாக!” என்று சொல்கிறார்.

உடலிலும் உள்ளத் திலும் நோயுற்றவரைப் போல் அவருடைய குரல் களைப்புற்றுக் காணப்படுகிறது.

சேசு கீழே இறங்கி வருகிறார். அவரிடம் ஓடி வந்துள்ள அருளப்பரின் தலையைத் தொடுகிறார். தம் சகோதரன் யூதா ததேயுஸைப் பார்த்து தமக்கு எதுவும் தெரியாதது போல் புன்னகை செய்கிறார். பின் தமது மற்ற சகோதரனைப் பார்த்து:

“நீ உன் சகோதரன் ஜோசப்பிடம் அன்பாயிருக்க வேண்டுமென்று உன் தாய் கேட்டுக் கொள்கிறாள். அவன் ஸ்திரீகளிடம் உன்னைப் பற்றியும், என்னைப் பற்றியும் சற்று முன் விசாரித்திருக்கிறான். அவனுக்கு நான் உபசாரம் கூறவில்லையே என்று வருந்துகிறேன்” என்கிறார்.

“நாளை அதைச் செய்யலாம்.”

“நாளை? ... அவனைக் காண எப்போது எனக்கு நேரம் இருக்கும்... ஓ! இராயப்பா! கடைசியாக சற்று நேரம் நாம் சேர்ந்திருக்கலாம். நேற்றிலிருந்து நீ நாடோடி போலிருக்கிறாயே. உன்னைக் கண்ட மாதிரி இருக்கும், அதற்குள் காணாமல் போய் விடுகிறாய். இன்றைக்கு உன்னை நான் இழந்து போனேன் என்றே சொல்ல வேண்டும். நீயும் சீமோன், அப்படித்தான்.”

“கருமையைவிட அதிக வெண்மையாக இருக்கிற எங்கள் உரோமம், நாங்கள் மாம்சம் விரும்பி இங்கு இல்லாமல் போகவில்லை என்று உமக்கு உறுதி கூறுமே” என்று கணத்தோடு கூறுகிறார் சீமோன்.

“ஆயினும்... எந்த வயதிலும் அந்தப் பசி ஏற்படக்கூடும். இளைஞர்களை விட வயோதிகர்களுக்கு...” என்று யூதாஸ் குத்தலாகச் சொல்கிறான்.

சீமோன் அவனைப் பார்த்து அவனுக்குப் பதில் சொல்லப் போகையில் சேசுவும் அவனைப் பார்த்து:

“உன் வலது கன்னம் வீங்கி சிவந்திருக்கிறதே, உனக்குப் பல்வலி இருக்கிறதா?” என்று கேட்கிறார்.

“ஆம். வலிக்கிறது. ஆனால் கவலைப்படத் தேவையில்லை.”

மற்றவர்கள் ஒன்றும் கூறவில்லை. விஷயம் அப்படியே ஓய்ந்து விடுகிறது.

“செய்ய வேண்டியதையெல்லாம் நீங்கள் செய்து விட்டீர்களா? மத்தேயு? பிலவேந்திரா? யூதாஸ், தேவாலய காணிக்கைக்கு ஏற்பாடு செய்துவிட்டாயா?”

அவர்கள் மூவரும்: “இன்று செய்து முடிக்கப்பட வேண்டுமென்று நீர் சொன்னவற்றையெல்லாம் செய்து முடித்து விட்டோம். கவலை வேண்டாம்” என்கிறார்கள்.

“சூசாவின் ஜோஹான்னாவுக்கு லாசரின் முந்திய பலன்களைக் கொண்டு சென்றேன். குழந்தைகளுக்குத்தான். அவர்கள்

“இந்த ஆப்பிள் கனிகள் அதிக நன்றாக உள்ளன” என்றார்கள். அவர்களுக்குப் பசியின் ருசி இருந்தது. அவை உம்முடைய கனிகளே” என்று சொல்கிறார் அருளப்பர் சிரித்தபடி கனவு கண்டது போல்.

அந்த ஞாபகத்தில் சேசுவும் சிரித்துக் கொள்கிறார்...

“நான் நிக்கோதேமுசையும் சூசையையும் கண்டேன்” என்று தோமையார் சொல்கிறார்.

“அவர்களைப் பார்த்தீரா? அவர்களிடம் பேசினீரா?” என்று அதிகப்படியான ஆர்வத்துடன் கேட்கிறான் யூதாஸ்.

“ஆம். பேசினேன். அதிலென்ன விசேஷம் இருக்கிறது? என் தகப்பனாரின் ஒரு நல்ல வாடிக்கைக்காரர் அரிமத்தியா சூசை.”

“இதைப் பற்றி நீர் முன்பு ஒருபோதும் சொல்லவில்லையே, அதுதான் நான் ஆச்சரியப்பட்டேன்.”

தோமையார் நிக்கோதேமுவையும் சூசையையும் சந்தித் ததைப் பற்றி யூதாஸ் கவலைப்பட்டதாக ஏற்படுத்திய அபிப் பிராயத்தை சமாளிப்பதற்கு முயற்சி செய்கிறான்.

அப்போது பர்தலோமேயு:

“அவர்கள் உமக்கு மரியாதை செய்ய வரவில்லையென்பது நூதனமாயிருக்கிறது. அவர்கள் வரவில்லை. சூசா வரவில்லை. மனேயனும் யாரும்...” என்று சொல்லும் போதே யூதாஸ் இடைமறித்து கேலியாய்ச் சிரிக்கிறான்:

“முதலை சரியான நேரத்தில் மறைந்து கொள்கிறது” என்கிறான்.

அப்போது சீமோன் முன்பில்லாத கோபத்துடன்: “நீர் சொல்வதின் பொருளென்ன? எதைக் குத்திக் காட்டுகிறீர்?” என்று நெருக்கிக் கேட்கிறார்.

அதற்கு சேசு:

“அமைதி! அமைதி! உங்கள் விஷயம் என்ன? இது பாஸ்காவின் மாலை. பாஸ்கா ஆட்டுக்குட்டியை உண்பதற்கு இந்த அளவு அலங்காரங்கள் இதுவரை நாம் செய்ததில்லை. ஆகவே நாம் சமாதான உள்ளத்தோடு இராப்போஜனத்தை உட்கொள்வோம். கடந்த நாட்களின் மாலைப் போதனைகளால் உங்களை சுமாரான அளவு நான் குழம்பச்செய்து விட்டேனென்று நினைக்கிறேன். ஆனால் அவை முடிந்து விட்டன. இதற்கு மேல் உங்களைக் குழம்பச் செய்யமாட்டேன். என்னைச் சம்பந்தப்பட்ட எல்லாம் சொல்லப்படவில்லை. முக்கியமானவைகள் மட்டுமே சொல்லப் பட்டன. மீதியை நீங்கள் பின்னால் கண்டுணர்வீர்கள். உங்களுக்குச் சொல்லப்படும். ஆம். உங்களுக்குச் சொல்கிறவர் வருவார். அருளப்பா, யூதாசுடனும், இன்னும் ஒருவருடனும் சென்று சுத்திகரத்திற்கு அகன்ற பாத்திரங்களைக் கொண்டு வாருங்கள். அதன்பின் நாம் பந்தியமர்வோம்.”

இருதயத்தைத் தொடக்கூடிய அளவு கருணையோடு காணப்படுகிறார் சேசு.

அருளப்பர், பிலவேந்திரர், யூதா ததேயுஸ், யாகப்பர் ஆகியோர் பெரிய அகன்ற பாத்திரத்தைக் கொண்டு வருகிறார்கள். அதனுள் தண்ணீர் விடுகிறார்கள். சேசுவுக்கும் தங்கள் உடன் சீடர்களுக்கும் துண்டுகளைக் கொடுக்கிறார்கள். (அந்தப் பாத்திரம் சுத்திகரம் செய்வதற்கான உலோக பாத்திரம்). அதை ஒரு மூலையில் வைக்கிறார்கள்.

“இப்பொழுது உங்கள் இருக்கைகளுக்குப் போங்கள். நான் இங்கிருக்கிறேன். இங்கே (அவருடைய வலது புறம், அருளப்பன், அதற்கடுத்த பக்கம் என் பிரமாணிக்கமுள்ள யாகப்பன் - இவர்கள் முதல் இரு சீடர்கள். அருளப்பனுக்கு அடுத்து என் பலமுள்ள பாறை. அதற்கடுத்து காற்றைப் போலிருக்கிற யாகப்பனுக்கு அடுத்து, அவன் இருப்பது தெரியாது. ஆனால் எப்பொழுதும் ஆறுதலளித்துக் கொண்டிருப்பவன் - பிலவேந்திரன். அவனுக்குப் பக்கத்தில் என் சகோதரன் யாகப்பன், அன்புள்ள சகோதரா, முதலில் வந்தவர் களுக்கு முதலிடத்தைக் கொடுக்கிறேன் என்பதைப் பற்றி உனக்கு வருத்தம் இல்லையே! நீதிமானின் அண்ணன் மகன் நீ. அவருடைய ஆவி என்றுமில்லாதபடி இந்த மாலை வேளையில் என்மேல் அசைந்து துடித்துக் கொண்டிருக்கிறது. என் குழந்தைப் பருவத்தின் தந்தையாயிருந்தவரே! உமது நிழலில் தாயும் குமாரனும் ஆறுதல் பெற்றிருந்த ஓக் விருட்சமே! சமாதானங் கொண்டிருப்பீராக!... இராயப்பனுக்குப் பக்கத்தில் சீமோன்... சீமோனே, சற்று இங்கே வா. உன்னுடைய பிரமாணிக்கமுள்ள முகத்தில் என் பார்வையைப் பதிக்க விரும்புகிறேன். பின்னால் உன்னை நான் நன்கு பார்க்க மாட்டேன். ஏனென்றால் மற்றவர்கள் உன்னுடைய நேர்மையான வதனத்தை மூடி விடுவார்கள். சீமோனே, நீ செய்துள்ள அனைத்திற்கும் நன்றி.” இவ்வாறு கூறி சேசு சீமோனை முத்தமிடுகிறார்.

சீமோன் கலக்கத்தின் அடையாளமாக சற்று தன் முகத்தை மூடியபடி தன் இருக்கைக்குப் போகிறார்.

சேசு தொடர்ந்து: “சீமோனுக்கெதிரே என் பர்த்தலோமேயு. ஒருவரையொருவர் பிரதிபலிக்கும் இரு நேர்மையாளரான ஞானிகள். அவர்கள் நல்ல பொருத்தமாயிருக்கிறார்கள். பர்தலோமேயுவுக்குப் பக்கத்தில் யூதா ததேயுஸ். என் சகோதரா, நீ, உன்னை நான் பார்க்கும்படியாக இரு... நான் நாசரேத்தில் இருப்பது போலுள்ளது... திருநாள்களிலே நம்மெல்லாரையும் ஒரே மேசையைச் சுற்றிக் கூடி வர வைத்ததுபோல்... கானாவூரிலும் அவ்வாறே... ஞாபகமிருக்கிறதா? நாம் சேர்ந்திருந்தோமே. விருந்து... திருமண விருந்தில்... முதல் புதுமை... தண்ணீர் இரசமாக மாற்றப்பட்டது. இன்றும் ஒரு திருநாள்தான்... இன்றும் ஒரு புதுமை நிகழும்... திராட்சை இரசம் தன் இயல்பை மாற்றி அது...”

சேசு தம் சிந்தனைகளிலே மூழ்கிப் போகிறார். அவர் தலை கவிழ்ந்து தம் இரகசிய உலகில் தனிப்படுகிறார். மற்றவர்கள் அவரை மவுனமாக நோக்குகின்றனர்.

பின் சேசு தம் சிரசை நிமிர்த்தி யூதாஸை உற்று நோக்கி: “நீ எனக்கு முன்பாக இருப்பாய்” என்கிறார்.

“என்மேல் இவ்வளவு அன்பா? சீமோனை விடவா? எப்போதும் என்னை உமக்கு முன்பாக வைக்கிறீரே?”

“அவ்வளவு அன்புதான்: நீ கூறியபடிதான்.”

“போதகரே, எதற்காக?”

“ஏனென்றால் இந்நேரத்திற்கென மற்றெல்லாரையும் விட நீதான் அதிகம் செய்திருக்கிறாய் என்பதற்காக.”

யூதாஸ் மாறிக் கொண்டேயிருக்கும் தன் பார்வையால் சேசுவையும் தன் உடன் சீடர்களையும் பார்க்கிறான். சேசுவை வஞ்சக பரிவிரக்கத்தோடு மற்றவர்களை ஒரு வெற்றிக் களிப்போடு பார்க்கிறான்.

சேசு தொடர்ந்து: “யூதாஸின் பக்கத்தில் ஒரு புறம் மத்தேயு. மறுபுறம் தோமை.”

“அப்படியென்றால் மத்தேயு என் இடப்புறமும் தோமையார் என் வலப்புறமுமா?” என்கிறான் யூதாஸ்.

“உம் விருப்பப்படி. நீர் விரும்புகிறபடி - என் இரட்சகரை என் முன்பாகக் கொண்டிருப்பதே எனக்குப் போதும்” என்கிறார் மத்தேயு.

சேசு மேலும் தொடர்ந்து: “கடைசியாக பிலிப்பு. இப்பொழுது பாருங்கள். என் பக்கத்தில் மகிமையான இடத்தில் இல்லாதவன், எனக்கு முன்பாக இருக்கும் மகிமையைப் பெறுகிறான்.”