தவக்கால சிந்தனைகள் 11 : இராப்போஜனம் தொடர்ச்சி.. கடவுள் மனிதனின் காவியத்திலிருந்து..

எதற்காக இந்தச் சடங்கு?

(எல்லார் முன்பாகவும் உயர்ந்த பான பாத்திரம் வைக்கப்பட்டிருக்கிறது. சேசு முன்னால் அவற்றை விட பெரிய பாத்திரம் உள்ளது. அதுதான் சடங்காசார பாத்திரமாயிருக்க வேண்டும். சேசு முன்பாக மற்றவர்களுடைய பாத்திரம்போல் ஒன்றும் உள்ளது.)

இப்பொழுது சேசு தம் இடத்தில் நின்றபடி தமக்கு முன்பாக வைக்கப்பட்டிருக்கிற பெரிய பாத்திரத்தில் திராட்சை இரசத்தை ஊற்றுகிறார். அதை உயர்த்தி ஒப்புக் கொடுக்கிறார். பின் மேசை மேல் வைக்கிறார்.

பின் அவர்கள் எல்லாரும் சேர்ந்து சங்கீதம் சொல்லுகிற குரலில்:

“எதற்காக இந்தச் சடங்கு?” என்று கேட்கிறார்கள். இது ஒரு ஆசாரக் கேள்வியே. சடங்கினைச் சார்ந்தது.

இக்கேள்விக்கு குடும்பத் தலைவன் என்ற முறையில் சேசு:

“எஜிப்திலிருந்து நாம் பெற்ற விடுதலையை இந்த நாள் நினைப் பூட்டுகிறது. திராட்சைத் தோட்டத்தின் கனியைச் சிருஷ்டித்த ஜெகோவா வாழ்த்தப்படுவாராக!” என்று பதிலளிக்கிறார்.

அவர் தாம் ஒப்புக் கொடுத்த இரசத்தில் ஒரு மிடறு பருகிவிட்டு பாத்திரத்தை மற்றவர்களுக்கு அனுப்புகிறார். அதன்பின் அப்பத்தை ஒப்புக்கொடுத்து அதை வாயுணவாகப் பிட்டு அதையும், சிவந்த குழம்பில் தோய்க்கப்பட்ட கீரைகளையும் அப்படியே பரிமாற அனுப்புகிறார்.

(இந்தப் பகுதியில் திருப்பலியின் நடுப்பூசையை நினைவில் கொள்க )

இராப் போஜனத்தின் இந்தப் பகுதி முடிந்தது. எல்லாரும் சேர்ந்து சில சங்கீதங்களைப் பாடுகிறார்கள்.

பின் ஒரு பக்கத்துப் பலகையிலிருந்து பொரித்த ஆட்டுக் குட்டி வைக்கப்பட்ட பெரிய தட்டை சேசுவின் முன்பாகக் கொண்டு வைக்கிறார்கள்.

குழு பாடகரில் முதல் பாடகர் என்று நீங்கள் (ஆன்ம குரு) விரும்பினால் நினைத்துக் கொள்ளக் கூடிய இராயப்பர் கேட்கிறார்:

“இந்த ஆட்டுக் குட்டி ஏன் இப்படி வைக்கப்பட்டிருக்கிறது?” என்று.

“பலியிடப்பட்ட ஆட்டுக் குட்டியால் இஸ்ராயேல் காப்பாற்றப்பட்ட சந்தர்ப்பத்தை நினைவுகூரும்படியாக எந்தக் கதவு நிலைகளிலும் மேல் படிகளிலும் அந்த இரத்தம் விளங்கியதோ, அங்கே தலைப்பேறுகள் சாகவில்லை. பின்னால், அரச மாளிகை முதல் குடிசை வீடு வரையிலும் தங்கள் இறந்த முதல் பேறுகளுக்காக எஜிப்து முழுவதும் துக்கங் கொண்டாடியபோது எபிரேய மக்கள் மோயீசனால் வழிநடத்தப்பட்டு விடுதலையான வாக்குத்தத்த நாட்டை நோக்கிப் போனார்கள். இடுப்பை வரிந்து கட்டியவர்களாய், காலில் பாதரட்சை அணிந்தவர்களாய், கைகளில் யாத்திரைக்காரரின் கோல் ஏந்தியவர்களாய் ஆபிரகாமின் மக்கள் உடனே மகிழ்ச்சிக் கீதங்களைப் பாடிக் கொண்டு புறப்பட்டுப் போனார்கள்” என்று சடங்காசாரப் பதிலை ஆண்டவர் கூறுகிறார்.

பின் எல்லாரும் எழுந்து நின்று:

“எஜிப்தினின்று இஸ்ராயேலர் வெளிவந்த அந்நாளிலே, யாக்கோபின் வீட்டார் துஷ்ட சனத்திலிருந்து புறப்படுகையில்...” என்ற சங்கீதத்தைப் பாடுகின் றனர். அது சங்கீதம் 113 - நான் சரியாகக் கண்டுபிடித்தால்.

சேசு உணவைப் பரிமாறுகிறார். ஒரு குடும்பத்தின் பிள்ளைகளையெல்லாம் அதிகம் நேசிக்கிற தகப்பனைப் போல் ஒவ்வொருவருக்கும் நல்ல அளவு கிடைக்கும்படி கவலையா யிருக்கிறார். அவர் கம்பீரமாகவும் சற்றுத்துயரமாகவும் இவ்வாறு கூறுகிறார்:

“நான் இந்தப் பாஸ்காவை உங்களோடு உண்ண ஆசை மேல் ஆசையாயிருந்தேன். நித்தியம் முதலே, நான் “இரட்சகரா" யிருந்ததிலிருந்தே இது என் ஆசையாக இருந்தது. இந்தத் தருணம் அந்த நேரத்திற்கு முன்பாக வரும் என்பதை அறிந்திருந்தேன். என்னை முழுவதும் கையளிப்பதன் மகிழ்ச்சி என் வேதனைகளுக்கு ஒரு ஆறுதலை முன்கூட்டியே கொண்டு வந்தது... இந்தப் பாஸ்காவை உங்களுடன் நான் புசிக்க மிகவும் ஆவலாயிருந்தேன். ஏனென்றால் சர்வேசுரனுடைய இராச்சியம் வரும் வரையிலும் திராட்சைக் கனியின் இரசத்தை இனியொருபோதும் நான் சுவைபார்க்க மாட்டேன். அதன்பின் நான் மறுபடியும் தெரிந்தெடுக்கப் பட்டவர்களுடன் செம்மறியானவரின் விருந்தில், ஜீவிக் கிறவர்களுடன் ஜீவியர்களின் விவாக விருந்தில் அமர்வேன். ஆனால் என்னைப் போல் தாழ்மையுள்ளவர்களும் இருதயத் தூய்மையுடையவர்களும் மட்டுமே அதற்கு வருவார்கள்.”

அப்போது பர்தலோமேயு கேட்கிறார்:

“ஆண்டவரே! இருக்கையின் மகிமையைப் பெறாதவன் உமக்கு முன்பாக அமரும் மகிமையைப் பெறுகிறான் என்று சற்று முன் சொன்னீரே. அப்படியென்றால் எங்களுக்குள் முதன்மையானது யார் என்று நாங்கள் எப்படி அறிவது?” என்று.

அதற்கு சேசு: “ஒவ்வொருவரும் முதன்மைதான் - ஒருவரும் முதன்மை இல்லைதான். ஒரு தடவை... நாம் திரும்பி வந்து கொண்டிருந்தோம். நாம் களைப்பாயிருந்தோம்... பரிசேயர்களின் கடுமையான பகையைப் பற்றி எரிச்சலுடன் இருந்தோம். ஆயினும் உங்களில் யார் பெரியவன் என்று உங்களுக்குள் தர்க்கிக்க தடை செய்யக் கூடிய அளவு நீங்கள் களைப்பு கொண்டிருக்கவில்லை... ஒரு சிறு பையன் என்னிடம் ஓடி வந்தான்... என் சிறிய நண்பன்... அவனுடைய மாசின்மை எத்தனையோ காரியங்களைப் பற்றிய என் அருவெறுப்பைக் குறைத்தது. அவற்றுள் பிடிவாதமுள்ள உங்கள் மனிதத் தன்மை குறைந்ததல்ல. சின்ன பெஞ்சமினே! இப்போது நீ எங்கே இருக்கிறாய்? ஒரு ஞானமான பதிலை நீ வரமாகப் பெற்றுக் கூறினாய். நீ ஒரு சம்மனசாயிருந்ததால் அந்தப் பதில் மோட்சத்திலிருந்து உனக்கு வந்தது. ஆவியானவர் உன்னிடம் பேசினார். அப்போது நான் உங்களிடம் கூறினேன்:

“உங்களுக்குள் முதலாவதாக இருக்க விரும்புகிறவன் கடைசியானவனாக, எல்லாருடையவும் ஊழியனாக இருக்க வேண்டும்” என்று. அந்த விவேகமுடைய சிறுவனை உங்களுக்கு முன்மாதிரிகையாகக் கொடுத்தேன். இப்பொழுது உங்களுக்குச் சொல்கிறேன்: ஜனங்களின் இராஜாக்கள் அவர்களை ஆதிக்கம் செய்கிறார்கள். நசுக்கப்பட்ட ஜனங்கள் அவர்களைப் பகைத்தாலும், அரசர்களைப் பாராட்டி ஆர்ப்பரிக்கிறார்கள். அரசர்களும் “உபகாரிகள்” என்றும் “தேச பிதாக்கள்” என்றும் அழைக்கப்படுகிறார்கள். இந்தப் போலி ஆசாரத்தினடியில் பகை புகைந்து கொண்டிருக்கிறது. ஆனால் இதுபோல் உங்களிடம் இருக்க வேண்டாம். மிகப் பெரியவ னாயிருப்பவன் மிகச் சிறியவனாயிருக்கட்டும். தலைமையாயிருப் பவன் ஊழியஞ் செய்கிறவனாயிருக்கட்டும். உண்மையில் பார்த்தால் யார் பெரியவன்? பந்தியில் அமர்ந்திருக்கிறவனா? பந்தி பரிமாறுகிறவனா? பந்தியில் அமர்ந்திருக்கிறவனே. அப்படியிருந்தும் நான் உங்களுக்குப் பரிமாறுகிறேன். வெகு சீக்கிரமே இதை விட அதிகமாக நான் ஊழியம் புரிவேன். என் துன்ப சோதனைகளில் என்னுடன் இருந்தவர்கள் நீங்களே. என் இராச்சியத்தில் உங்களுக்கு ஓர் இடம் தயார் செய்வேன். பிதாவின் சித்தப்படி அங்கே நான் அரசனாயிருப்பது போலவே உங்களுக்கும் அப்படிச் செய்வேன். அங்கே நீங்கள் என் நித்திய பந்தியில் உண்டு பானம் செய்வீர்கள். இஸ்ராயேலின் பன்னிரு கோத்திரங்களையும் நீதி விசாரிக்க அரியாசனங்களில் அமர்வீர்கள். என் துன்ப சோதனைகளில் என்னுடன் நீங்கள் இருந்தீர்கள். இந்த ஒன்றும்தான் பிதாவின் பார்வையில் உங்களைப் பெரியவர்களாக்குகிறது.”