திவ்ய நற்கருணை நாதர் – 5

ஆ ! மிகவும் மதுரம் பொருந்திய ஆண்டவராகிய இயேசுவே ! உமது பந்தியில் அழைக்கப்பட்டு உட்காருவது பக்தியுள்ள ஆத்துமத்துற்கு எவ்வளவோ பெரிதான இன்பமாயிருக்கிறது. அந்தப் பந்தியில் உம்மை மாத்திரமே அதற்கு புசிக்க கொடுக்கப்படுகிறது. “ அதன் இதயத்திற்கு சகலத்தையும் பார்க்க அதிக அன்புள்ளவரும் ஏக நேசருமாகிய நீரேயன்றி வேறென்ன? “

உமது சந்நதியில் அன்பில் மிகுதியால் கண்ணீர் விட்டு அக்கண்ணீர்களால் பக்தியுள்ள மதலேனாளைப் போல் உமது பாதங்களைக் கழுவுகிறது எனக்கும் இன்பமாகவல்லோ இருக்கும். ஆனால் அப்படிக்கொத்த பக்தியில் அந்தப் பரிசுத்த கண்ணீர்ப் பிரவாகமும் எங்கேயிருந்து வரும் ?

ஆம், உமது சந்நிதியிலும் சம்மனசுக்களுக்கு முன்னதாகவும் என் இருதயம் முழுவதும் பற்றியெறிந்து, சந்தோசக் கண்ணீர் சொரிய வேண்டியதுதான். ஏனெனில் தேவ நற்கருணையில் நீர் அப்ப தோற்றத்தில் மறைந்திருந்த போதிலும் அதில் நீர் உண்மையாகவே பிரசன்னமாயிருக்கிறீர். எனக்கு உண்மையாகவே சொந்தமாயிருக்கிறீர்.

ஏனெனில் உமக்குரிய தெய்வீக மகிமை பிரதாபத்தைப் பார்க்க என் கண்கள் தாளாது. உமது மகத்துவத்தின் மகிமைக்கு முன், உலகம் முழுவதும் ஒன்றுமில்லாமையாக் குன்றிப்போகும். ஆதலால் தேவ நற்கருணையில் நீர் உம்மை மறைத்துக் கொண்டிருப்பது என் பலவீனத்தை முன்னிட்டே.

பரலோகத்தில் சம்மனசுக்களால் ஆராதிக்கப்படுகிறவர் எனக்கு மெய்யாகவே சொந்தமாயிருக்கிறார் நான் அவரை ஆராதிக்கிறேன். ஆனால் நான் இன்னும் விசுவாசத்தினால் அவரை தரிசிக்கிறேன். அவர்களோ யாதொர் மறைவில்லாமல் முகமுமாய்த் தரிசிக்கிறார்கள்.

நன்றி : கிறிஸ்து நாதர் அனுசாரம், ஆசிரியர் தாமஸ் கெம்பீஸ்.

சிந்தனை : தகுந்த தயாரிப்போடு திவ்ய திருப்பலியில் பங்கேற்று மிகுந்த வணக்கத்தோடும், மரியாதையோடும், பக்தியோடும் முழங்காலில் நின்று நாவில் நம் ஆண்டவரை வாங்குவோம்..

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !