இணை-மீட்பர் என்னும் மகிமையை நாம் மாதாவுக்குச் சூட்டுவதை சாத்தான் எப்படி ஏற்றுக் கொள்வான்? ஆண்டவருக்கு பாவப்பரிகாரமும் நன்றியும் மன்றாட்டும் செய்யப்படுவது போல் மாதாவுக்கும் செய்யப்படுவதை சாத்தான் சகிக்க மாட்டாமல் செய்யும் இறுதிப் புரட்சியும் எதிர்ப்புமே இன்றைய திருச்சபையிலும் உலகத்திலும் நாம் காணும் கலாபனைகளும் கொந்தளிப்புகளுமாகும்.
"ஒரு ஸ்திரீ உன் தலையை நசுக்குவாள்” (ஆதி. 3:15) என்று சர்வேசுரன் கூறிய மாதாவின் மகிமை பற்றிய தீர்க்கதரிசனம் நிறைவேறும் காலம் நெருங்கியுள்ளதை சாத்தான் அறிவான். அதனாலேயே 500 ஆண்டுகளுக்கு முன் புராட்டஸ்டான்ட் பதிதத்தைத் தூண்டிவிட்டான். மாதாவை எவ்வகையிலெல்லாம் மட்டந்தட்ட முடியுமோ அத்தனையையும் செய்தான். முடிவு நெருங்க நெருங்க சாத்தானுடைய கலாபனையும் கூடுகிறது. கத்தோலிக்கத் திருச்சபையாகிய சேசு -மாமரியின் ஞான சரீரம் பேதகங்களாலும் பதிதங்களாலும் பிரிவினைகளாலும் சின்னா பின்னமாகச் சிதைக்கப்படுகிறது. சத்திய திருச்சபையின் கொள்கைகள் மாற்றப்பட்டு குறைக்கப்பட்டு மதிப்பிழக்கின்றன. அதன் தெய்வீக வழிபாடாகிய பலிபூசையும் தேவ திரவிய அனுமானங்களும் கட்டளைச் செபங்களும் திருடப்பட்டு, திருத்தப்பட்டு, உருவமிழந்து காணப்படுகின்றன. தேவ வார்த்தையாகிய வேதாகமம் பொது மொழிபெயர்ப்புகள் என்ற பெயரில் மாற்றப்பட்டுள்ளது. ஒழுக்க நெறிகள் மாற்றப்பட்டு பரிசுத்த வாழ்வும் தூய்மையும் பரிகசிக்கப்படுகின்றன. இவற்றால் திருச்சபையின் மக்கள் அவதி, வேதனை, அவஸ்தைப்பட்டு வேத கலாபனை அனுபவிக்கின்றனர்.
இத்தனை செய்தும் சாத்தான் வெற்றி பெறுவானா? வெற்றி பெற மாட்டான். மாதா அவன் தலையை இறுதியாய் நசுக்கி சர்வேசுரனின் முழு மகிமையையும் நிச்சயமாகத் துலங்கச் செய்வார்கள். ஏனென்றால்,
“என் திரு இருதயத்துடன் என் தாயின் மாசற்ற இருதயத்தை இணையாக வைத்து வணங்கி வழிபட வேண்டும்”
என்ற நமதாண்டவராகிய சேசுகிறீஸ்துவின் தீராத விருப்பம் பாத்திமா செய்தியின் சிகரமாகத் தரப்பட்டுவிட்டது. அது நிறைவேறப் போகிறது. அதற்கு முன்னோடியாக திருச்சபையிலும்,
“மாதா சேசுகிறீஸ்துவுடன் மானிட இரட்சண்யத்தில் இணை-மீட்பராயிருக்கிறார்கள்”
என்ற சத்தியத்தை விசுவாச சத்தியமாக அறிவிக்க ஏற்பாடுகள் ஏற்கெனவே தொடங்கி நடைபெற்று வருகின்றன!
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பாத்திமா செய்தியை அதின் எல்லாப் பாகங்களிலும் நாம் கடைப் பிடிப்போமானால், நிச்சயமாக இக்கலாபனையின் காலத்தில் நாம் காப்பாற்றப்படுவோம்; கடவுளின் மாபெரும் மாதா திட்டமும் மாதாவின் சமாதான காலமும் நிறைவேறி, உலக முடிவை நாம் அச்சமின்றி எதிர்கொள்வோம். உலக முடிவிற்கு முன் அதற்கு ஆயத்தம் செய்ய நமக்குத் தரப்படும் மரியாயின் மாசற்ற இருதய வெற்றியின் சமாதான காலம் விரைவில் வருவதாக!