பாத்திமா காட்சிகளும் செய்திகளும்: சம்மனசின் ஆயத்தக்காட்சிகள்

(இங்கே காட்சிகளின் நிகழ்ச்சிகளும், உரையாடல் களும் அப்படியே தரப்படுகின்றன.)

காலம்: 1915-ம் ஆண்டு, ஏப்ரல் முதல் அக்டோபர் மாதங்களுக்குள். 

அப்போது லூஸியா, ஜஸிந்தா, பிரான்ஸிஸ் மூவரும் சேர்ந்து ஆடுகளை மேய்க்கத் தொடங்கவில்லை. லூஸியா வேறு மூன்று சிறுமிகளுடன் தன் ஆடுகளை மேய்த்து வந்தாள்.

அவர்கள் கபேசோ மலைச் சாரலில் இருந்தனர். மத்தியான வேளையில் தங்கள் பகலுணவைச் சாப்பிட்ட பின் லூஸியா அழைக்க மற்றவர்கள் ஜெபமாலை சொல்ல இசைந்தனர். ஜெபமாலை தொடங்கவும், மலைச்சாரலின் கீழே காணப்பட்ட மரங்களுக்கு மேலாக ஒரு மனித உருவம் வெண்பனியால் செய்யப்பட்டது போல் மிதந்து வருவதாகக் காணப்பட்டது. அதைப் பார்த்தபடியே ஜெபமாலையும் முடிந்தது. அத்துடன் அந்த உருவமும் கலைந்து விட்ட து.

இது பற்றி லூஸியா யாரிடமும் சொல்லவில்லை. மற்றச் சிறுமிகள் அது என்னவென்று கேட்டதற்கு அவள் “எனக்குத் தெரியவில்லை” என்றே கூறினாள். அந்தச் சிறுமிகள் தங்கள் வீடுகளில் இதைச் சொன்னதால், அந்தச் செய்தி லூஸியா வீட்டையும் எட்டியது. வீட்டார் அவளிடம் கேட்டபோது “எனக்குத் தெரியவில்லை. போர்வை போர்த்திய ஆள் மாதிரி இருந்தது. கண் கை என்று எதுவும் தெரியவில்லை” என்று கூறினாள். 

கொஞ்ச நாளைக்குப் பிறகு அவ்வுருவம் மறுபடியும் அதே மாதிரி காணப்பட்டது. அதையும் லூஸியாவைத் தவிர மற்றச் சிறுமிகள் வீடுகளில் சொன்னார்கள். அந்த உருவம் மூன்றாம் முறையும் காணப்பட்டது.

லூஸியாவின் தாய் மறுபடியும் அவளிடம் கேட் டாள். அவளும் “எனக்குத் தெரியவில்லை” என்றே கூறினாள். லூஸியாவின் மூத்த சகோதரிகள் அவளைப் பரிகசிக்கத் தொடங்கினர். “போர்வை போர்த்திய ஆளைக் கண்டாயா?” என்று குத்தலாகப் பேசினர்.

இம் மூன்று தோற்றங்களும் 1916-ல் வரவிருந்த சம்மனசின் காட்சிகளுக்கு முன்னறிவிப்பாய் அமைந்தன.