பாத்திமா காட்சிகள்

சர்வேசுரனின் மானிட இரட்சண்யத் திட்டம் இது: கடவுள் மனிதனாக வந்து, போதித்து, நமக்கு வாழும் முன்மாதிரிகை காட்டி, பாடுகள் அனுபவித்து நம் பாவங்களைப் பரிகரித்த திட்டம். இது மனிதனால் முற்றிலும் கண்டுபிடிக்க முடியாத உயர்ந்த அன்பின் திட்டமாகும். இப்படி மீட்கப்பட்ட மனுக்குலம் சுயாதீனமாய் அந்தத் தேவ அன்பிற்குப் பதிலன்பு காட்ட வேண்டும். அதாவது, கடவுளால் நிறைவேற்றப்பட்டுள்ள மானிட இரட்சண்யத்தை மனிதர்கள் கைப்பற்ற வேண்டும். தேடித் தரப்பட்ட இரட்சண்ய செல்வத்தை மனிதர்கள் தங்களுடைய சொந்த மாக்கிக் கொள்ள வேண்டும். எவ்வளவுக்கு அதிகமான பேர் அப்படிச் செய்வார்களோ அவ்வளவிற்கு அதிகமாய் சர்வேசுரனின் புற மகிழ்ச்சியும் மகிமையும் பெருகும். (அவருடைய அகமகிழ்ச்சியும் மகிமையும் சதாகாலமும் நிறைவு பெற்றதாயிருக்கிறது).  

மனிதர்கள் கடவுள் தங்களுக்களித்த இரட்சண்யத்தை எப்படி தங்கள் சொந்தமாக்குவார்கள்?

கடவுளிடமிருந்து நேரடியாக இரட்சண்யத்தைப் பெற்றுக்கொள்ளத் தகுதி படைத்த மனிதன் யாருமே இல்லையே!

மாதாவால் மட்டுமே கடவுளிடமிருந்து அதைப் பெற்று நமக்கு அளிக்க முடியும். ஏனெனில் அவர்களே சர்வேசுரனின் தகுதி பெற்ற தாயாயிருக்கிறார்கள். அவர்களையே கடவுள் தம் இரட்சண்யத் திட்டத்தின் கருவியாகவும் வாய்க்காலாகவும் இணை-மீட்பராகவும் தெரிந்து கொண்டார். 

இணை மீட்பரான மாதா வழியாகவே நமக்கு இரட்சண்யம் தரப்பட்டது.

இவ்விரட்சண்யத் திட்டத்திற்கு மகுடம் வைத்தாற் போல் கடவுளிடம் இன்னொரு திட்டம் இருக்கிறது. அதுவே மாதாவின் மகிமையின் திட்டம்.

இரட்சிக்கப்பட்ட மனுக்குலம், இரட்சகரான ஆண்டவரை மட்டுமல்ல, இணை-இரட்சகியான தேவ தாயையும் மகிமைப்படுத்த வேண்டும். மாதாவை சேசுகிறீஸ்துவுடன் நாம் அங்கீகரித்து, ஆண்டவரான சேசுவுக்கு எப்படிப் பாவப்பரிகாரம் செய்ய வேண்டுமோ அப்படியே மாதாவுக்கும் பாவப்பரிகாரம் செய்ய வேண்டும். இந்த மாதாவின் மகிமையின் திட்டத்தை மனுக்குலத்துக்கு அறிவிப்பதே பாத்திமா காட்சியின் சாரமான, நுட்பமான செய்தியாகும்.