பரிதாபத்திற்குரிய பாவசங்கீர்த்தன குருக்களே!

பாவசங்கீர்த்தனம் செய்பவர்களில் பெரும்பாலானவர்களிடம் இந்த பிரதிக்கினைகளையும், செயல்களையும் கொண்டு வர நீங்கள் என்ன முயற்சி எடுக்கிறீர்கள்? இவை இல்லாமல் பாவசங்கீர்த்தனம் ஒரு தேவ துரோகமாகவும், பாவமன்னிப்பு ஒரு தண்டனைத் தீர்ப்பாகவும், தவம் என்பது வெறும் கற்பனையாகவும் இருக்குமே!

கிறிஸ்தவர்களிடையே இரட்சிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நரகத் தீர்ப்படைபவர்களின் எண்ணிக்கையை விட அதிகமானது என்று நம்புபவர்களும், இந்த தங்கள் நம்பிக்கையை நியாயப்படுத்தும்படி வளர்ந்த கத்தோலிக்கர்களில் பெரும்பான்மையினர் திருச்சபையின் தேவதிரவிய அனுமானங்களை ஆயுதங்களாகத் தரித்தபடி, தங்கள் படுக்கைகளில் மரணமடைகிறார்கள். ஆகவே பெரும்பாலான வளர்ந்த கத்தோலிக்கர்கள் இரட்சிக்கப்படுகிறார்கள் என்று காரணம் கூறுபவர்களும் இப்போது எங்கே இருக்கிறார்கள்? ஓ, என்ன ஒரு அருமையான காரணம் இது! அப்படியே உண்மைக்கு நேர்மாறானதை நீங்கள் சொல்கிறீர்கள்.

பெரும்பாலான கத்தோலிக்கர்கள் மரணப்படுக்கையில் மோசமான விதத்தில் பாவசங்கீர்த்தனம் செய்கிறார்கள். ஆகவே, அவர்களில் பெரும்பாலானவர்கள் நித்தியத்திற்கும் சபிக்கப்படுகிறார்கள். இன்னும் அதிக உறுதியோடு என்று நான் சொல்லுகிறேன். ஏனெனில் இப்போது மரணத் தறுவாயில் இருப்பவனும், நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தபோது, நன்றாக பாவசங்கீர்த்தனம் செய்யாதவனுமான மனிதன், கனத்த இருதயத்தோடும், தடுமாறும் அறிவோடும், குழப்பமுற்ற மனதோடும் இருக்கும் சமயத்தில் நல்ல பாவசங்கீர்த்தனம் செய்வதை இன்னும் கடினமானதாக உணர்வான். அவன் இச்சமயத்தில் இன்னும் தன்னில் உயிரோடிருக்கிற ஆசைகளாலும், இன்னும் புதிதாயிருக்கிற பாவ சந்தர்ப்பங்களாலும், தானே விரும்பி ஏற்றுக் கொண்ட பாவப் பழக்கங்களாலும், எல்லாவற்றிற்கும் மேலாக, எப்படியாவது தன்னை நரகத்திற்கு இழுத்துச் சென்று விட முயற்சி செய்து கொண்டிருக்கும் பசாசுகளாலும் எல்லா வழிகளிலும் எதிர்க்கப்படுவான்.

இனி இந்த கள்ளப் பாவசங்கீர்த்தனம் செய்பவர்களோடு, பாவத்தில் எதிர்பாராத விதத்தில் இறப்பவர்களை, அல்லது நிலநடுக்கங்களில் உயிரோடு புதைக்கப்படுபவர்களை, அல்லது மூளைத் தாக்குதலால்/ அல்லது ஒரு சண்டையில், அல்லது ஒரு வலையில் சிக்கி, அல்லது இடியால் தாக்கப்பட்டு, அல்லது எரிக்கப்பட்டு, அல்லது தண்ணீரில் மூழ்கி இறப்பவர்களையும் சேர்ப்பீர்கள் என்றால் வளர்ச்சி பெற்ற கிறிஸ்தவர்களில் பெரும்பாலானவர்கள் நரகத்திற்குச் செல்கிறார்கள் என்ற முடிவுக்குத்தான் நீங்களும் வருவீர்கள் அல்லவா?

புனித கிறிசோஸ்தம் அருளப்பரின் வாதமும் இதுதான். மிகப் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் நரகத்திற்குச் செல்லும் பாதையில் நடந்து கொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்க, பெரும் எண்ணிக்கையிலான கிறிஸ்தவர்கள் நரகத்திற்குச் செல்கிறார்கள் என்பதில் நீங்கள் ஏன் இவ்வளவு ஆச்சரியப்படுகிறீர்கள்? ஒரு வாசலை வந்தடைவதற்கு நீங்கள் அதற்கு இட்டுச் செல்லும் பாதையில் செல்ல வேண்டும் என்று இந்த புனிதர் சொல்கிறார். இத்தகைய வலிமையான வாதத்திற்கு நீங்கள் என்ன பதில் தர முடியும்?

கடவுளின் இரக்கம் பெரியது என்பதுதான் இதற்கான பதில் என்று நீங்கள் சொல்வீர்கள். ஆம், அவருக்கு அஞ்சி நடப்பவர்களுக்கு அவருடைய இரக்கம் பெரிது என்று தீர்க்கதரிசியானவர் சொல்லுகிறார். ஆனால் அவருக்குப் பயந்து நடக்காத ஒருவனுக்கு அவருடைய நீதி மிகப் பெரியதாக இருக்கிறது, அது பாவத்தில் பிடிவாதமாக நிலைத்திருக்கும் எல்லாப் பாவிகளுக்கும் தண்டனைத் தீர்ப்பிடுகிறது. ஆகவே நீங்கள் என்னிடம், சரி அப்படியானால் கிறிஸ்தவர்கள் அன்றி வேறு யார் மோட்சத்தில் இருக்கிறார்கள்? என்று கேட்பீர்கள். அது கிறிஸ்தவர்களுக்கானது என்பது உண்மைதான். ஆனால், தங்கள் ஞானஸ்நான முத்திரையை அவமதிக்காதவர்களும், கிறிஸ்தவர்களாக வாழ்பவர்களுமாகிய கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே மோட்சம் உரியது.

மேலும் தேவ வரப்பிரசாதத்தில் மரணமடையும் வளர்ச்சி பெற்ற கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையோடு, ஞானஸ்நானம் பெற்றபின், புத்தி விபரம் அடையும் முன் மரிக்கிற எண்ணற்ற குழந்தைகளின் படையணிகளையும் சேர்ப்பீர்கள் என்றால், அப்போஸ்தலரான புனித அருளப்பர் இரட்சிக்கப்படுபவர்களைப் பற்றிப் பேசும்போது, எவராலும் எண்ணக்கூடாத, பெருந்திரளான மக்கள் கூட்டத்தைக் கண்டேன் என்று கூறுவது பற்றி நீங்கள் வியப்படைய மாட்டீர்கள்.

கத்தோலிக்கரிடையே இரட்சிக்கப்படுவோரின் எண்ணிக்கை, சபிக்கப்பட்டோரின் எண்ணிக்கையைவிட அதிகமானது என்று பாசாங்கு செய்பவர்களை ஏமாற்றுவது இதுவே... இந்த எண்ணிக்கையோடு, மாசற்றதனத்தின் வெண்ணாடையைக் கறைபடாமல் காத்துக் கொண்ட வளர்ச்சி பெற்ற கிறிஸ்தவர்களையும், அதைக் கறைப்படுத்திய பின், மனஸ்தாபக் கண்ணீரில் அதைக் கழுவி சுத்தமாக்கிக் கொண்டவர்களையும் அதில் சேர்ப்பீர்கள் என்றால், அதிக எண்ணிக்கையிலான கிறிஸ்தவர்கள் இரட்சிக்கப்படுகிறார்கள் என்பது உறுதியாகும். இது பெருந்திரளான மக்கள் கூட்டத்தைக் கண்டேன் என்ற புனித அருளப்பரின் வார்த்தைகளையும் அநேகர் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வந்து, பரலோக இராச்சியத்தில் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களோடு கூடப் பந்தியில் அமருவார்கள் என்ற ஆண்டவரின் வார்த்தைகளையும், இந்தக் கருத்துக்கு சாதகமாக வழக்கமாக மேற்கோள் காட்டப்படும் மற்ற உருவகங்களையும் விளக்குகிறது.

ஆனால் நீங்கள் வளர்ச்சி பெற்ற கிறிஸ்தவர்களைப் பற்றி பேசுகிறீர்கள் என்றால், அவர்களில் பெரும் எண்ணிக்கையினர் தண்டனைத் தீர்ப்படைகிறார்கள் என்று எண்பிப்பதில் அனுபவம், அறிவு, அதிகாரம், சரியான கிறிஸ்தவ நடத்தை , பரிசுத்த விவிலியம் ஆகிய அனைத்துமே நன்றாக ஒத்துப் போகின்றன. இதன் காரணமாக, மோட்சம் வெறுமையாயிருக்கிறது என்று நினைத்து விடாதீர்கள். இதற்கு மாறாக, அது ஆத்துமங்களால் பெருமளவுக்கு நிறைந்திருக்கிற இராச்சியமாக இருக்கிறது.

சபிக்கப்பட்டவர்கள் "கடற்கரை மணலைப்போல எண்ணற்றவர்களாக இருக்கிறார்கள் என்றால், இரட்சிக்கப்படுபவர்கள் வானத்து நட்சத்திரங்களைப் போல எண்ணற்றவர்களாக இருக்கிறார்கள். அதாவது இரண்டிற்கும் அளவில்தான் வேறுபாடு உண்டே தவிர, இரண்டுமே எண்ணற்றவைதான்.

புனித கிறிசோஸ்தம் அருளப்பர் கான்ஸ்டாண்டிநோபிள் மறைமாவட்ட ஆலயத்தில் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். அப்போது மேற்கூறிய எண்ணிக்கைகளை நினைத்துக் கொண்ட அவர் , உடல் பேரச்சத்தால் நடுங்க, மக்களைப் பார்த்து "இவ்வளவு பெருந்திரளான மக்களில் எத்தனை பேர் இரட்சிக்கப்படுவார்கள் என்று நினைக்கிறீர்கள்?" என்று கேட்டார். அதன்பின் பதிலுக்காகக் காத்திராமல் அவரே தொடர்ந்து "இவ்வளவு அதிகமான ஆயிரக்கணக்கான மக்களில், இரட்சிக்கப்படுகிறவர்களாக நூறு பேரைக்கூட காண முடியவில்லை. நூறு பேருக்கும் குறைவானவர்கள்கூட இரட்சிக்கப்படுவார்களா என்பதுகூட எனக்கு சந்தேகம்தான்" என்றார்.

என்ன ஒரு பயங்கரமான விஷயம்! இவ்வளவு அதிகமான மக்களில் நூறு பேருக்கும் குறைவானவர்களே இரட்சிக்கப்படுவார்கள் என்றும், அதுகூட நிச்சயமில்லை என்றும் இந்த மாபெரும் புனிதர் நம்பினார். நான் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருப்பவர்களே, உங்களுக்கு என்ன ஆகும்? இறைவா! இதைச் சிந்திக்கும்போது என்னால் நடுங்காமல் இருக்க முடியவில்லையே! சகோதரரே, இரட்சணியம் என்ற பிரச்சினை மிகக் கடினமானது. ஏனெனில் மறைவல்லுனர்களின் கூற்றுகளின்படி ஒரு நோக்கத்தை அடைய மிகப் பெரும் முயற்சிகள் தேவைப்படும்போது, மிகச் சிலர் மட்டுமே அதை அடைந்து கொள்கிறார்கள்.

அதனால்தான் வானதூதருக்கு ஒப்பான புனித தாமஸ் அக்குவினாஸ், தமது ஆழ்ந்த ஞானத்தில் இந்த உண்மைக்குச் சாதகமானவையும், எதிரானவை. யுமான எல்லாக் காரணங்களையும் சீர்தூக்கிப் பார்த்தபின், இறுதியாக, வளர்ச்சியடைந்த கத்தோலிக்கர்களில் அதிக எண்ணிக்கையினர் நரகத்திற்குச் செல்கிறார்கள் என்று முடிக்கிறார். "நித்திய பேரின்பமாகிய தேவ காட்சி என்பது சுபாவ அந்தஸ்துக்கு அப்பாற்பட்டது. குறிப்பாக இந்த அந்தஸ்து ஆரம்பத்தில் அளிக்கப்பட்ட வரப்பிரசாதத்திலிருந்து விலக்கப்பட்டு, கெட்டுப் போயுள்ளது. ஆகவே, சிறிய எண்ணிக்கையினர் மட்டுமே இரட்சிக்கப்படுகிறார்கள்" என்று அவர் சொல்கிறார்.

ஆகவே, சுயப்பற்றால் குருடாக்கப்பட்டுள்ள உங்கள் கண்களை மறைத்துள்ள திரையை அகற்றுங்கள். அது கடவுளின் நீதியைப் பற்றி மிகப் பொய்யான கருத்துக்களை உங்களுக்குத் தருவதன் மூலம் இப்படிப்பட்ட, இவ்வளவு வெளிப்படையான ஒரு சத்தியத்தை நீங்கள் விசுவசிக்க முடியாதபடி செய்கிறது. "நீதியுள்ள தந்தையே, உலகம் உம்மை அறிந்திருக்கவில்லை" என்றார் நமதாண்டவராகிய இயேசு கிறிஸ்துநாதர். எல்லாம் வல்ல தந்தையே! மிக நல்லவரும் இரக்கமுள்ளவருமான தந்தையே என்கிறார். மனிதர்கள் எவற்றிற்கு உட்பட அஞ்சுகிறார்களோ, அவற்றை விசுவசிக்க மறுக்கிறார்கள் என்பதால் கடவுளின் சகல இலட்சணங்களிலும் அவரது நீதியை விடக் குறைவாக அறியப்பட்டுள்ள இலட்சணம் வேறு எதுவுமில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஆண்டவர் இப்படிச் சொல்கிறார்.

ஆகவே உங்கள் கண்களைக் கட்டியுள்ள துகிலை அகற்றி, கண்ணீர் வழிய அந்தோ கத்தோலிக்கர்களில் அதிகமானோர், இங்கே வசிப்பவர்களில் அதிகமானோர், ஏன் இங்கே கூடியுள்ளவர்களிலும் அதிகமானோர் தண்டனைத் தீர்ப்படைவார்கள் என்று சொல்லுங்கள். இந்த தியானக் கருத்தைவிட உங்கள் கண்ணீருக்கு அதிகத் தகுதியுள்ளது வேறு என்ன இருக்க முடியும்?

செர்க்செஸ் அரசன் ஒருநாள் ஒரு குன்றின்மீது நின்று கொண்டு, கீழே போருக்கு அணிவகுத்து நின்ற ஒரு இலட்சம் போர்வீரர்கள் அடங்கிய தனது படையைப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது, இன்னும் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இவர்களில் யாருமே உயிரோடு இருக்க மாட்டார்கள் என்ற எண்ணம் அவனுக்கு வர அவனால் தன் கண்ணீரை அடக்கிக் கொள்ள முடியவில்லை. இவ்வளவு அதிகமான கத்தோலிக்கர்களில் மிக அதிகமானோர் நரகம் செல்வார்கள் என்று நினைக்கும்போது, நாம் அழுவதற்கு அதுவே போதுமான காரணமாக இல்லையா? இந்த எண்ணம் நம் கண்களில் கண்ணீரின் ஆறுகளைப் பெருகச் செய்ய வேண்டாமா? அல்லது குறைந்த பட்சம் புனித அகுஸ்தினார் சபைச் சகோதரர் வணக்கத்துக்குரிய புனித தோமினிக்கின் மார்செல்லஸ் என்பவர் உணர்ந்த பரிதாப உணர்வையாவது அது நம் உள்ளத்தில் விளைவிக்க வேண்டாமா?

ஒருநாள் இந்தச் சகோதரர் நித்திய வேதனைகளை தீர்மானித்துக் கொண்டிருந்தபோது, அக்கணத்தில் எத்தனை ஆன்மாக்கள் நரகத்திற்குச் செல்கிறார்கள் என்பதை ஆண்டவர் அவருக்குக் காட்டினார். மேலும் ஓர் அகன்ற சாலையில் 22,000 சபிக்கப்பட்ட ஆன்மாக்கள் ஒருவரையொருவர் இடித்தபடி பாதாளத்தை நோக்கி ஓடிக் கொண்டிருந்ததையும், அவர் காணச் செய்தார். இந்த தேவ ஊழியர் இந்தக் காட்சியில் மதி மயங்கியவராக, "ஓ! எவ்வளவு பெரிய தொகை! எவ்வளவு பெரிய தொகை! இன்னும் அதிகமானவர்கள் வந்து கொண்டிருக்கிறார்களே, இயேசுவே! இயேசுவே! இது என்ன பைத்தியக்காரத்தனம்" என்று புலம்பினார். சீயோன் மகள் கொல்லப்பட்டதன் நிமித்தம் பகலும் இரவும் நான் அழுமாறு என் தலைக்கு தண்ணீரும், என் கண்களுக்கு கண்ணீர் ஊற்றும் யார் தருவார்கள்?" என்று எரேமியாவோடு நாமும் சொல்லக்கடவோம்.

பரிதாபத்துக்குரிய ஆன்மாக்களே! நரகத்தை நோக்கி இவ்வளவு அவசரமாக ஓட உங்களால் எப்படி முடிகிறது? இரக்கத்தின் பொருட்டு ஒரு கணம் நின்று நான் சொல்வதைக் கேளுங்கள்! இரட்சிக்கப்படுவது, நித்தியத்திற்கும் சபிக்கப்படுவது என்பதன் பொருள் என்ன என்று நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள் அல்லது புரிந்து கொள்வதில்லை. நீங்கள் இதைப் புரிந்து கொண்டும், அதற்குப் பதிலாக இன்றே உங்கள் வாழ்வைத் திருத்தவும், நல்ல பாவசங்கீர்த்தனம் செய்யவும், உலகத்தை உங்கள் காலின்கீழ் மிதிக்கவும் நீங்கள் தீர்மானிக்கவில்லை என்றால், உங்களிடம் விசுவாசம் இல்லை என்று நான் சொல்கிறேன். இதை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால், நீங்கள் மன்னிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில், அப்போது உங்களுக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். நித்தியத்திற்கும் இரட்சிக்கப்படுவது அல்லது நித்தியத்திற்கும் சபிக்கப்படுவது இவை இரண்டில் ஒன்றைத் தவிர்த்து, இன்னொன்றை உறுதிப்படுத்திக் கொள்ள உங்கள் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளாதிருப்பதும் கற்பனைக்கும் எட்டாத காரியம்.