கடவுளின் நன்மைத்தனம்

நான் இப்போது உங்களுக்குக் கற்பித்துள்ள இந்த பயங்கரமுள்ள சத்தியங்களை நீங்கள் ஒருவேளை இன்னும் விசுவசியாமல் இருக்கலாம். ஆனால் என் வழியாக மிக உயர்ந்த மறைவல்லுனர்களும், மிகவும் புகழ் பெற்ற திருச்சபைத் தந்தையருமே உங்களிடம் பேசியிருக்கிறார்கள். ஆகவே, பரிசுத்த விவிலியத்திலுள்ள மிக அநேக உதாரணங்களாலும், வார்த்தைகளாலும் தாங்கப்படுகிற இந்தக் காரணங்களை நீங்கள் எப்படி மறுக்க முடியும்? இவ்வளவையும் மீறி நீங்கள் இன்னும் தயங்குவீர்கள் என்றால், இதற்கு எதிரான கருத்தையே உங்கள் மனம் ஆதரிக்கிறது என்றால் அந்த எண்ணமே கூட உங்களை நடுங்கச் செய்யப் போதுமானதாக இல்லையா? ஓ! உங்கள் இரட்சணியத்தைப் பற்றி உங்களுக்குப் பெரிய அளவுக்கு அக்கறையில்லை என்பதையே இது காட்டுகிறது.

உணர்வுள்ள ஒரு மனிதன், ஆத்துமம் சம்பந்தப்படாத மற்ற விவகாரங்களில் ஒரு முழுமையான அழிவை எதிர்கொள்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த அழிவால் அவன் தாக்கப்படுவதைவிட, இந்த முக்கியமான காரியத்தில், தான் உட்பட்டிருக்கிற ஆபத்தான நிலை பற்றிய மிக அற்பமான சந்தேகத்தாலும்கூட அதிக பலமாகத் தாக்கப்படுகிறான்.

"ஒரே ஒரு மனிதன் மட்டும் நரகத்திற்குப் போக கடவுளால் தீர்ப்பிடப்படுவான் என்றாலும், நான் அந்த மனிதனாக இராதபடி, என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்வேன்" என்று பிரான்சிஸ்கன் துறவிகளில் ஒருவரான முத்திப்பேறு பெற்ற ஜைல்ஸ் என்பவர் சொல்வது வழக்கமாக இருந்தது.

ஆகவே, மிகப் பெரும் எண்ணிக்கையிலான மனிதர்கள் நரகத்திற்குத் தீர்வையிடப்பட இருக்கிறார்கள் என்பதை அறிந்துள்ள நாம் என்ன செய்ய வேண்டும்? இரட்சிக்கப்படுகிற சிறுதொகையினரில் நாமும் ஒருவராக இருக்கப் பிரதிக்கினை செய்வோம். கிறிஸ்துநாதர் எனக்குத் தண்டனை தீர்ப்பிட விரும்பினார் என்றால், அவர் ஏன் என்னைப் படைத்தார் என்று நீங்கள் கேட்கிறீர்களா? அடங்கு, அவசரமுள்ள நாவே! எந்த மனிதனையும் சபிக்கும்படி அவர் அவனைப் படைக்கவில்லை , ஆனால், சபிக்கப்படுகிற எவனும், தன் விருப்பத்தினாலேயே அப்படி சபிக்கப்படுகிறான். ஆகவே, நான் இப்போது என் கடவுளின் நன்மைத்தனத்தை ஆதரித்துப் பேசவும், அது குற்றமற்றது என்று எண்பிக்கவும் கடுமையாக முயற்சி செய்வேன். அதுவே இரண்டாவது தியானக் கருத்தாக இருக்கும்.

தொடர்ந்து பேசுவதற்கு முன் நாம் ஒரு பக்கத்தில் லூத்தர் மற்றும் கால்வினின் எல்லாப் புத்தகங்களையும், எல்லாத் தப்பறைகளையும் மறுபக்கத்தில் பெலேஜிய மற்றும் செமிபெலேஜியப் பதிதர்களின் எல்லாப் புத்தகங்களையும் தப்பறைகளையும் குவித்து வைத்து அவற்றை எரிப்போமாக. அவற்றில் சில வரப்பிரசாதத்தை அழிக்கின்றன. அவை எல்லாமே தப்பறைகளால் மிகுந்துள்ளன. ஆகவே நாம் அவற்றை நெருப்பில் வீசியெறிவோம். சபிக்கப்பட்டவர்கள் அனைவரும் தங்கள் நெற்றியில் உன் அழிவு உன்னிடமிருந்தே வருகிறது என்ற ஓசேயா இறைவாக்கினரின் வாக்கியத்தை தாங்கியிருக்கிறார்கள். எவனொருவன் நரகத்திற்குச் சபிக்கப்பட்டாலும், அவன் தன் சொந்த தீய குணத்தின் காரணமாகவும், தான் சபிக்கப்பட விரும்புவதாலுமே சபிக்கப்படுகிறான் என்பதை இவ்வாறு அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

முதலாவதாக, இந்த இரண்டு மறுக்க முடியாத சத்தியங்களை அடிப்படையாக எடுத்துக் கொள்வோம். அவையாவன: 

எல்லா மனிதர்களும் இரட்சிக்கப்படுவதையே கடவுள் விரும்புகிறார்! எல்லோருக்கும் தேவ வரப்பிரசாதம் தேவையாயிருக்கிறது!

இனி, எல்லா மனிதர்களையும் இரட்சிக்கவே கடவுள் விரும்புகிறார் என்றும், இந்த நோக்கத்திற்காக அவர் அவர்கள் அனைவருக்கும் தமது வரப்பிரசாதத்தையும், அந்த

பக்திக்குரிய நோக்கத்தை அடைவதற்கு அவசியமான எல்லா வழிகளையும் தருகிறார் என்று நான் உங்களுக்கு எடுத்துக் காட்டுவேன் என்றால், சபிக்கப்படுபவன் எவனும் தன் சொந்த துர்க்குணத்தின் காரணமாகவே சபிக்கப் -படுகிறான் என்பதையும், கிறிஸ்தவர்களில் பெரும் தொகையினர் நரகத்தில் தள்ளப்படு கிறார்கள் என்றால், அவர்களே அதை விரும்பி தேடிக்கொள்கிறார்கள் என்பதே அதற்குக் காரணம் என்பதையும் நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கும்.

'உன் நித்திய அழிவு உன்னிடமிருந்தே வருகிறது; என்னில் மட்டுமே உனக்கு உதவியுண்டு' - இது ஒரு மிகையான வாக்கியம்.

ஆனால், கடவுள் நம் இரட்சணியத்தை எவ்வளவு விரும்பினார், இன்றும் எவ்வளவு விரும்புகிறார் என்றால் அவர் அதன்மீதுள்ள ஆசையினால் மரித்தார், நமக்கு உயிர் தரும்படி அவர் மரணத்தை அனுபவித்தார். ஆகவே, சகல மனிதர்களையும் இரட்சிக்க வேண்டும் என்ற இந்த சித்தம், கடவுளிலுள்ள ஒரு பாதிக்கப்பட்ட, மேலோட்டமான, வெளிப்படையான சித்தமல்ல; அது நிஜமான, பலனுள்ள, நன்மை பயக்கிற சித்தமாக இருக்கிறது. ஏனெனில் நாம் இரட்சிக்கப்படுவதற்கு மிகப் பொருத்தமான எல்லா வழிகளையும், அவர் நமக்குத் தருகிறார். அந்த வழிகள் நித்திய சீவியத்தை நமக்குப் பெற்றுத் தரக்கூடாது என்ற எண்ணத்தில் அவற்றை அவர் தருவதில்லை.

ஓர் உண்மையுள்ள சித்தத்தோடு அவை தங்கள் நோக்கத்தை அடைந்து கொள்ள வேண்டும் என்ற கருத்துடனேயே அவர் அவற்றைத் தருகிறார். அவர்கள் அதைப் பெற்றுக் கொள்வதில்லை என்றால் அது பற்றித் துயரமும், வேதனையும் அடைபவராக அவர் தம்மைக் காட்டுகிறார். மிகக் கொடிய பாவிகளும்கூட தாங்கள் இரட்சிக்கப்படும்படியாக, அவற்றைப் பயன்படுத்துமாறு அவர் கட்டளையிடுகிறார். இதைச் செய்யும்படி அவர்களுக்கு அறிவுறுத்துகிறார். அதை அவர்களுக்குக் கடமையாக்குகிறார். அவர்கள் அதைச் செய்யவில்லை என்றால் அப்போது அவர்கள் பாவம் செய்கிறார்கள். ஆகவே, அவர்கள் இதைச் செய்து அதன்மூலம் இரட்சிக்கப்பட முடியும்.

இன்னும் மேலாக, தம் உதவியின்றி தம் வரப்பிரசாதத்தைப் பயன்படுத்த நம்மால் இயலாது என்று கடவுள் காண்பதால், அவர் நமக்கு மற்ற உதவிகளை தருகிறார். சில சமயங்களில் அவை பயனற்றவையாகவே இருக்கின்றன என்றால், அது நம் தவறுதான். ஏனெனில், இதே உதவிகளை ஒருவன் தவறாகப் பயன்படுத்தவும், அவற்றின் காரணமாகவே தண்டனைத் தீர்ப்படையவும்கூடிய அதே சமயத்தில் வேறொருவன் சரியாகச் செய்து இரட்சிக்கப்பட முடியும். இன்னும் குறைந்த வலிமையுள்ள உதவிகளைக் கொண்டும்கூட அவன் இரட்சிக்கப்படலாம். ஆம், இது எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம். ஒன்றில் ஒருவன் ஒரு அதிகப் பெரிதான வரப்பிரசாதத்தை துர்ப்பிரயோகம் செய்து, அதனால் நரகத் தீர்ப்படையலாம் அல்லது மற்றொருவன் குறைவான ஒரு வரப்பிரசாதத்தோடு ஒத்துழைத்து இரட்சிக்கப்படலாம்.

"ஆகவே, ஒருவன் நீதியினின்று விலகுகிறான் என்றால் அவன் தன் இச்சையால் நடத்தப்பட்டு தன் சொந்தப் பிடிவாதத்தால் ஏமாற்றப்பட்டு தன் சொந்த சித்தத்தால் அடித்துச் செல்லப்படுகிறான்" என்று புனித அகுஸ்தினார் கூறுகிறார். ஆனால் நம் திருமறையைப் புரிந்து கொள்ளாதவர்களுக்கு நான் சொல்வது இதோ:

கடவுள் எவ்வளவு நல்லவராக இருக்கிறார் என்றால், ஒரு பாவி தன் அழிவை நோக்கி ஓடுவதைக் காணும்போது, அவர் அவன் பின்னால் ஓடுகிறார். அவனைக் கூப்பிடுகிறார், கெஞ்சுகிறார், நரக வாசல் வரைக்கும்கூட தொடர்ந்து போகிறார். அவனை மனம் திருப்ப அவர் என்னதான் செய்ய மாட்டார்? அவனுக்கு நல்ல ஏவுதல்களையும், பரிசுத்த எண்ணங்களையும் - அனுப்புகிறார். அவற்றால் அவன் பலனடையவில்லை என்றால், அவர் கோபமும் எரிச்சலும் கொண்டு அவனைத் தூக்கிக் கொண்டு வருகிறார். அவர் அவனைத் தாக்குவாரா? இல்லை . அவர் அவனை மன்னிக்கிறார். ஆனால், பாவியோ இன்னும் மனம் திரும்பிய பாடில்லை .

ஆகவே மரணத்திற்கு ஏதுவான ஒரு நோயைக் கடவுள் அவனுக்கு அனுப்புகிறார். இத்துடன் எல்லாம் முடிந்து விட்டதா? இல்லை சகோதரரே! அவரே அவனைக் குணப்படுத்துகிறார். பாவியோ தீமையில் இன்னும் அதிகப் பிடிவாதமுள்ளவனாகிறான். கடவுளோ தம் இரக்கத்தில் ஏக்கத் தவிப்போடு மற்றொரு வழியைத் தேடுகிறார். அவர் அவனுக்கு இன்னுமொரு வருட காலம் தருகிறார். அந்த வருடம் முடியும்போது, மேலும் ஒரு வருடத்தை அவனுக்குத் தந்தருளுகிறார்.

ஆனால் இவ்வளவையும் மீறி பாவியானவன் நரகத்தில் விழ விரும்புவான் என்றால் கடவுள் என்ன செய்வார்? அவனைக் கைவிட்டு விடுவாரா? இல்லை! அவர் அவனது கையைப் பற்றிக் கொள்கிறார். அவன் நரகத்தில் ஒரு காலையும், வெளியே மறு காலையும் வைத்திருக்கையில், அவர் இன்னும் அவனுக்கு அறிவுரை கூறுகிறார். தமது வரப்பிரசாதங்களை வீணாக்காதபடி அவனிடம் கெஞ்சுகிறார். இப்போது நான் உங்களிடம் கேட்கிறேன். அந்த மனிதன் நரகத் தீர்வையடைகிறான் என்றால், தேவ சித்தத்திற்கு எதிராகவும், தானே நரகத்தில் விழ விரும்பியதாலும்தான் அவன் இந்தத் தீர்வைக்கு உள்ளாகிறான் அல்லவா? இப்போது கடவுள் எனக்குத் தண்டனை தீர்ப்பிட விரும்பினார் என்றால் அவர் ஏன் என்னைப் படைத்தார் என்று என்னிடம் கேளுங்கள் பார்ப்போம்!

நன்றியற்ற பாவியே! நீ நரக தண்டனை அடைகிறாய் என்றால். அதற்காக குற்றம் சாட்டப்படவேண்டியவர் கடவுளல்ல. மாறாக, நீயும், உன் சுய சித்தமுமே என்பதைக் கற்றுக் கொள். இதை நீ உறுதியாக நம்பும்படி, பாதாளத்தின் ஆழங்களுக்குள் மனதால் இறங்கிப் போ. அங்கே, நரகத்தில் எரிந்து கொண்டிருக்கிற சபிக்கப்பட்ட ஆன்மாக்களில் ஒருவன் உண்மையை உனக்கு விளக்கும்படி, அவனை நான் உன்னிடம் கூட்டி வருவேன். இதோ ஒருவன் இருக்கிறான்: "நீ யார் என்று எனக்குச் சொல்"

"நான் ஓர் அறியாத நாட்டில் பிறந்த பரிதாபத்திற்குரிய விக்கிரக ஆராதனையாளன். மோட்சம் அல்லது நரகத்தைப் பற்றியோ, இப்போது நான் அனுபவித்துக் கொண்டிருக்கும் துன்பத்தைப் பற்றியோ நான் கேள்விப்பட்டதேயில்லை"

"பரிதாபத்திற்குரியவனே, போய்விடு, நான் தேடுவது உன்னையல்ல" 

மற்றொருவன் வருகிறான். இதோ அவன் "யார் நீ?" "நான் டார்டாரியின் எல்லையில் வசித்த ஒரு பிரிவினைவாதி. நான் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதை அறியாது, நாகரீகமற்ற ஒரு நாட்டில் எப்போதும் வாழ்ந்தவன்"

இதோ இன்னுமொருவன் "நீ யார்?" "நான் வடக்கைச் சேர்ந்த ஒரு பரிதாபத்திற்குரிய பதிதன். நான் துருவப் பகுதியில் பிறந்தேன். சூரிய ஒளியையோ, விசுவாச ஒளியையோ நான் ஒருபோதும் கண்டதேயில்லை"

"நான் தேடுவது உன்னையுமல்ல. நரகத்திற்குத் திரும்பிப் போ "

சகோதரர்களே, சபிக்கப்பட்டவர்கள் மத்தியில் உண்மையான விசுவாசத்தை ஒருபோதும் அறியாமலே இருந்த இந்தப் பரிதாபத்திற்குரியவர்களைக் காணும்போது என் இருதயம் உடைகிறது. அப்படியிருந்தும், அவர்களை ஆண்டவர் தண்டனைத் தீர்ப்பிட்டார் என்பதையும், உன் தண்டனைத் தீர்வை உன்னிடமிருந்தே வருகிறது என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது என்பதையும் அறிந்திடுங்கள். அவர்கள் விரும்பியதாலேயே நரகத் தீர்வை பெற்றார்கள். இரட்சிக்கப்படும்படி ஏராளமான உதவிகளை அவர்கள் கடவுளிடமிருந்து பெற்றார்கள்! அவை என்னவென்று நமக்குத் தெரியாது என்றாலும் அவர்கள் அவற்றை அறிந்திருக்கிறார்கள். இப்போது ஆண்டவரே, நீர் நீதியுள்ளவர், உமது தீர்ப்புகள் நியாயமானவை என்று சொல்லிக் கதறுகிறார்கள்.

சகோதரர்களே, உலகின் மிகப் பழைமையான நம்பிக்கை கடவுளின் திருச்சட்டமே. அது நம் இதயங்களில் எழுதப்பட்டுள்ளது. மேலும், எந்த ஆசிரியருமின்றி, அதைக் கற்றுக் கொள்ளலாம். அந்தத் திருச்சட்டத்தின் எல்லா விதிகளையும் அறிந்திருப்பதற்கு, அறிவின் ஒளியைக் கொண்டிருப்பது போதுமானது. இவற்றை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அதனால்தான் காட்டுமிராண்டிகளும்கூட, தாங்கள் பாவம் செய்தபோது தவறான ஒன்றைத் தாங்கள் செய்வதை அறிந்து ஒளிந்து கொண்டார்கள். தங்கள் இருதயத்தில் எழுதப்பட்டிருந்த இயற்கைச் சட்டத்தை அனுசரிக்காததால் அவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். ஏனெனில், அதை அவர்கள் அனுசரித்திருந்தால், கடவுள் அவர்களுக்குத் தண்டனை தீர்ப்பிடுவதற்குப் பதிலாக, ஒரு புதுமையைச் செய்தாவது அவர்களை இரட்சித்திருப்பார். அவர்களுக்குக் கற்பிக்கும்படி யாரையாவது அனுப்பியிருப்பார், மற்ற உதவிகளையும் அவர்களுக்குத் தந்திருப்பார்.

ஆனால் அவர்களோ, தாங்கள் செய்ய வேண்டிய நன்மை பற்றியும், தவிர்க்க வேண்டிய தீமை பற்றியும் ஓயாமல் எச்சரித்துக் கொண்டிருந்த தங்கள் சொந்த மனசாட்சியின் ஏவுதல்களுக்கு வாழாததன் மூலம், இந்த தேவ உதவிகளுக்கு தங்களை தகுதியற்றவர்கள் ஆக்கிக் கொண்டார்கள். ஆகவே, கடவுளின் நீதியாசனத்தின் முன்பாக அவர்களுடைய மனசாட்சியே அவர்களைக் குற்றம் சாட்டியது. உன் நித்திய சாபம் உன்னிடமிருந்தே வருகிறது என்று அது ஓயாமல் அவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறது. அதற்கு என்ன பதில் சொல்வதென்று அவர்களுக்குத் தெரியவில்லை. தங்களது இழிநிலைக்கு தாங்களே காரணம் என்று ஒப்புக் கொள்ள அவர்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

இந்த அவிசுவாசிகளும் கூட சாக்குச் சொல்ல இடமில்லை என்றால், இத்தனை தேவதிரவிய அனுமானங்களையும், இவ்வளவு அதிகமான பிரசங்கங்களையும், தேவ உதவிகளையும் கடவுளிடமிருந்து பெற்றுக் கொண்ட ஒரு கத்தோலிக்கன் என்ன சாக்குப்போக்கு சொல்வான்? கடவுள் எனக்கு நரகத் தீர்வையிடுவதாக இருந்தார் என்றால், அவர் ஏன் என்னைப் படைத்தார் என்று கேட்க அவன் எப்படித் துணிவான்? - இரட்சிக்கப்படுவதற்கு இவ்வளவு அதிகமான உதவிகளை கடவுள் அவனுக்குத் தந்திருக்க, அவன் இந்த முறையில் பேச எப்படித் துணிவான்? ஆகவே, நாம் அவனைக் கேள்விகளால் மேற்கொள்வோம்.

"இப்போது பாதாளத்தில் துன்பப்பட்டுக் கொண்டிருப்பவனே, எனக்குப் பதில் சொல்! உங்கள் மத்தியில் கத்தோலிக்கர்கள் யாரேனும் இருக்கிறார்களா?" "நிச்சயமாக இருக்கிறார்கள்" "எத்தனை பேர்? அவர்களில் ஒருவன் இங்கே வரட்டும்" "அதற்கு சாத்தியமேயில்லை. அவர்கள் கீழே மிகவும் ஆழத்தில் இருக்கிறார்கள். அவர்களை மேலே வரச் செய்வதற்கு நரகத்தை அப்படியே தலைகீழாகத் திருப்ப வேண்டும். அதைவிட, அவர்களில் ஒருவன் நரகத்தில் விழும்போது, அவனைத் தடுத்து நிறுத்துவது அதிக எளிதாயிருக்கும்"

ஆகவே, சாவான பாவத்திலும், வெறுப்பிலும் அசுத்தப் பாவச் சேற்றிலும் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பவனும், ஒவ்வொரு நாளும் நரகத்தை மென்மேலும் நெருங்கிச் செல்பவனுமாகிய உன்னிடம் நான் பேசுகிறேன். நில், திரும்பு; உன்னை அழைப்பவர் இயேசுநாதர்தான். அவர் தமது திருக்காயங்களைக் கொண்டு, ஏராளமான வாய்ச்சாலகமுள்ள குரல்களில் பேசுவதுபோல உன்னை நோக்கி "என் மகனே! நீ நரகத் தீர்ப்பிடப்படுவாய் என்றால் அதற்காகக் குற்றம் சாட்டப்பட வேண்டியவன் நீ ஒருவன்தான். உன் கண்களை உயர்த்தி, உன் நித்திய சீவியத்தை உறுதிப்படுத்தும்படி உன்னை வளப்படுத்துமாறு நான் உன்மீது பொழியத் திருவுளமான சகல வரப்பிரசாதங்களையும் பார்.

ஒரு காட்டில் ஒரு காட்டுமிராண்டியாக உன்னை நான் பிறக்க வைத்திருக்கலாம். வேறு அநேகருக்கு நான் செய்தது அதுதான். ஆனால் நான் உன்னை கத்தோலிக்க விசுவாசத்தில் பிறக்கச் செய்தேன். மிக நல்லவரான ஒரு தந்தையாலும், அற்புதமான ஒரு தாயாலும், மிகப் பரிசுத்தமான போதனைகளோடும், படிப்பினைகளோடும் நீ வளரச் செய்தேன். இதையும் மீறி நீ சபிக்கப்படுகிறாய் என்றால் அது யார் தவறு? உன்னுடையதுதான், என் மகனே உன்னுடையதுதான். உன் தண்டனை தீர்ப்பு உன்னிடமிருந்தே வருகிறது.

"நீ முதல் சாவான பாவத்தைக் கட்டிக் கொண்ட மாத்திரத்தில், உனது இரண்டாவது சாவான பாவத்திற்காக காத்துக் கொண்டிராமல், உடனே உன்னை நான் நரகத்தில் தள்ளியிருக்க முடியும். மிக அநேகருக்கு நான் இதைச் செய்தேன். ஆனால் உன்னைப் பற்றியோ நான் பொறுமையாயிருந்தேன். பல நீண்ட வருடங்களாக நான் உனக்காகக் காத்திருந்தேன். இன்று வரையிலும் கூட நீ தவம் செய்வதைக் காண நான் காத்துக் கொண்டிருக்கிறேன். இதையெல்லாம் மீறி நீ சபிக்கப்படுவாய் என்றால் அது யாருடைய தவறு? உன்னுடைய தவறுதான்.

உன் தண்டனைத் தீர்ப்பு உன்னிடமிருந்தே வருகிறது. உன் கண்களுக்கு முன்பாகவே எத்தனை பேர் இறந்து, நரகத் தீர்வை பெற்றார்கள் என்பது உனக்கு தெரியும். அது உனக்கு ஓர் எச்சரிக்கையாக இருந்தது. உனக்கு நல்ல முன்மாதிரிகை தருவதற்காக வேறு எத்தனை பேரை நான் சரியான பாதைக்கு திரும்பக் கொண்டு வந்தேன் என்பதை நீ அறிவாய். அந்த அற்புதமான பாவசங்கீர்த்தன குரு உன்னிடம் என்ன சொன்னார் என்பது உனக்கு நினைவிருக்கிறதா? நான்தான் அவர் அதை உன்னிடம் சொல்லும்படி செய்தேன். உன் வாழ்வைத் திருத்தவும், நல்ல பாவசங்கீர்த்தனம் செய்யவும் அவர் உனக்குக் கட்டளையிடவில்லையா? அப்படிச் செய்ய நானே அவரைத் தூண்டினேன். உன் இருதயத்தைத் தொட்ட அந்த பிரசங்கம் உனக்கு நினைவிருக்கிறதா? உன்னை அங்கே கூட்டிச் சென்றவர் நான்தான். உன் இருதயத்தின் இரகசியத்தில், உனக்கும் எனக்குமிடையே நடந்த காரியத்தை உன்னால் ஒருபோதும் மறக்க முடியாது.

அந்த உள்ளரங்க ஏவுதல்களையும், அந்த தெளிவான அறிவையும், அந்த ஓயாத மன உறுத்தலையும் நீ மறுக்கத் துணிவாயா? இவையெல்லாம் என் வரப்பிரசாதத்தின் மிக அநேக உதவிகளாக இருந்தன. ஏனெனில் நான் உன்னை இரட்சிக்க விரும்பினேன். வேறு பலருக்கு அவற்றைத் தர நான் மறுத்தேன்.

உன்னை நான் கனிவாக நேசித்ததால் அவற்றை உனக்கு தந்தேன். என் மகனே, என் மகளே, இன்று நான் உன்னிடம் பேசுவதுபோல, அவர்களோடு நான் பரிவோடு பேசியிருந்தேன் என்றால், வேறு எத்தனை அதிக ஆன்மாக்கள் சரியான பாதிக்கும் திரும்பி வந்திருப்பார்கள்! நீயோ... நீயோ... எனக்கு உன் முதுகைத் திருப்புகிறாய். நான் உனக்குச் சொல்லப் போவதைக் கேள். ஏனெனில் இவையே என் கடைசி வார்த்தைகள்: - "உனக்காக நான் என் இரத்தத்தை சிந்தச் செய்தாய். நான் உனக்காக சிந்திய இரத்தத்தையும் மீறி நரகத் தீர்ப்படைய நீ விரும்புகிறாய் என்றால், அதற்காக என்னைக் குற்றம் சொல்லாதே. உன்னைத்தான் நீ குற்றம் சாட்டிக் கொள்ள வேண்டும். மேலும் நித்தியம் முழுவதிலும் என்னையும் மீறியே நீ சபிக்கப்பட்டிருக்கிறாய் என்பதை மறவாதே. நீ தண்டனைத் தீர்ப்படைய விரும்பியதால்தான் இப்படி சபிக்கப்பட்டிருக்கிறாய். உன் தண்டனைத் தீர்ப்பு உன்னிடமிருந்தே வருகிறது."

"ஓ என் நல்ல இயேசுவே! இத்தகைய இனிய வார்த்தைகளையும் கருணையோடு நீர் வெளிப்படுத்தும் உணர்வுகளையும் கேட்டு கற்களும்கூட நெக்குவிட்டுப் பிளந்திருக்கும். இவ்வளவு அதிக வரப்பிரசாதங்களோடும், உதவிகளோடும் நித்தியத்திற்கும் சபிக்கப்பட விரும்புபவன் யாராவது இங்கே இருக்கிறானா? அப்படி ஒருவன் இருந்தால், நான் சொல்வதை அவன் கேட்கட்டும். அதன்பின் முடிந்தால், அதை அவன் எதிர்த்து நிற்கட்டும்.

விசுவாசத்தை மறுத்தவனான ஜூலியன் என்பவனது இழிவான விசுவாச மறுதலிப்பிற்குப் பிறகு, பரிசுத்த ஞானஸ்நானத்தின்மீது அவன் தன் உள்ளத்தில் எத்தகைய பெரும் வெறுப்பை வளர்த்துக் கொண்டான் என்றால், பகலும் இரவும் தன் சொந்த ஞானஸ்நானத்தை தன் ஆத்துமத்திலிருந்து அழித்து விடக்கூடிய வழியை அவன் தேடிக் கொண்டேயிருந்தான். இந்த நோக்கத்திற்காக அவன் வெள்ளாட்டு இரத்தத்தை ஒரு தொட்டியில் சேகரித்து அதில் தன்னை அமிழ்த்திக் கொண்டான்.

சீனஸ் என்னும் பொய்த் தெய்வத்திற்கு பலியிடப்பட்ட ஒரு பலியாட்டின் அசுத்த இரத்தம் தன் ஆத்துமத்திலிருந்து ஞானஸ்நானத்தின் பரிசுத்த முத்திரையை அழித்து விட வேண்டும் என்று விரும்பியே அவன் இப்படிச் செய்தான். இத்தகைய நடத்தை அருவருப்பானதாக உங்களுக்குத் தோன்றுகிறது. ஆனால் ஜூலியனின் திட்டம் வெற்றி பெற்றிருக்குமானால் அவன் நரகத்தில் மிகக் குறைந்த அளவிலேயே துன்பப்பட்டிருப்பான் என்பது உறுதி!

பாவிகளே! நான் உங்களுக்குத் தர விரும்பும் அறிவுரை உங்களுக்கு வினோதமாகத் தோன்றும் என்பதில் சந்தேகமில்லை . ஆனால், இதற்கு மாறாக, நீங்கள் அதை நன்றாகப் புரிந்து கொள்வீர்கள் என்றால் உங்கள் மீது நான் கொண்டுள்ள பரிவும், பரிதாபமும், நிறைந்த தயவிரக்கத்தாலேயே அது தூண்டப்பட்டதாக இருக்கிறது. கிறிஸ்துநாதரின் திரு இரத்தத்தின் முன்னிலையிலும், மரியாயின் மாசற்ற திருஇருதயத்தின் முன்னிலையிலும் உங்கள் வாழ்வைத் திருத்தும்படியும், மோட்சப் பாதைக்கு திரும்பி வரும்படியும், இரட்சிக்கப்படுவோரின் மிகச் சிறிய தொகையினரில் நீங்களும் ஒருவராயிருக்க உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்யும்படியும் நான் உங்கள் முன் மண்டியிட்டு மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.

ஒருவேளை அதற்குப் பதிலாக, நரகத்திற்குச் செல்லும் பாதையிலேயே தொடர்ந்து நடந்து கொண்டிருக்க நீங்கள் விரும்புவீர்கள் என்றால், குறைந்த பட்சம் உங்கள் ஞானஸ்நான அடையாளத்தை உங்கள் ஆத்துமத்திலிருந்து அழித்து விடவாவது ஒரு வழியைக் கண்டு பிடியுங்கள். கிறிஸ்துநாதரின் திருப்பெயரையும், உங்கள் இருதயத்தின்மீது செதுக்கப்பட்டுள்ள பரிசுத்த முத்திரையையும் நரகத்திற்கு எடுத்துச் செல்வீர்கள் என்றால் உங்களுக்கு ஐயோ கேடு! நீங்கள் தண்டிக்கப்படும் விதம் மிகக் கடுமையாய் இருக்கும். ஆகவே, என் அறிவுரைப்படி செயல்படுங்கள்.

நீங்கள் மனம் திரும்ப விரும்பவில்லை என்றால், ஒருவேளை நீங்கள் கிறிஸ்தவர்களாக இருந்தீர்கள் என்ற நினைவே இனி இராமல் போகும்படி இன்றே உங்கள் பங்கு குருவிடம் சென்று ஞானஸ்நானப் பதிவேட்டிலிருந்து உங்கள் பெயரை அழித்து விடும்படி அவரைக் கேட்டுக் கொள்ளுங்கள். மேலும், கடவுளின் உத்தரவுகளின்படி, உங்கள் காவல் சம்மனசானவர் உங்களுக்குத் தந்த பரிசுத்த ஏவுதல்களையும், உதவிகளையும் அவரது வரப்பிரசாதங்களின் புத்தகத்திலிருந்து அழித்து விடும்படி அவரிடம் மன்றாடுங்கள். ஏனெனில் அவர் அவற்றை நினைவுகூர்வார் என்றால் உங்களுக்கு ஐயோ கேடு! தமது விசுவாசத்தையும், தமது ஞானஸ்நானத்தையும், தமது தேவ திரவிய அனுமானங்களையும் திரும்பப் பெற்றுக் கொள்ளும்படி நம் ஆண்டவரிடம் கூறுங்கள்'

இத்தகைய எண்ணம் உங்களை திகிலடையச் செய்கிறதா? சரி, அப்படியானால் இயேசு கிறிஸ்துநாதரின் திருப்பாதங்களில் விழுந்து கண்ணீர் நிரம்பிய கண்களோடும், மனஸ்தாபமுள்ள இருதயத்தோடும் அவரிடம் "ஆண்டவரே, இப்போதுவரை நான் ஒரு கிறிஸ்தவனாக வாழவில்லை . உம்மால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களில் ஒருவனாக எண்ணப்பட நான் தகுதியற்றவன். நரகத் தீர்வை பெற நான் தகுதியுள்ளவனாக இருக்கக் காண்கிறேன். ஆயினும் உமது இரக்கம் பெரிது. ஆகையால் உமது வரப்பிரசாதத்தில் முழு நம்பிக்கை கொண்டு, நான் உம்மிடம் சொல்வது யாதெனில், நான் இரட்சிக்கப்படும்படி என் சொத்து சுகங்களையும், என் நற்பெயரையும், என் வாழ்வையுமேகூட பரித்தியாகம் செய்தாவது நான் என் ஆத்துமத்தை இரட்சித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இதுவரை நான் உமக்குப் பிரமாணிக்கமற்றவனாக இருந்திருந்தாலும், நான் மனஸ்தாபப்படுகிறேன், மனம் வருந்தி அழுகிறேன். என் பிரமாணிக்கமின்மையை நான் வெறுக்கிறேன். அதற்காக என்னை மன்னிக்கும்படி தாழ்ச்சியோடு உம்மை மன்றாடுகிறேன். நல்ல இயேசுவே! என்னை மன்னியும், நான் இரட்சிக்கப்படும்படி என்னைப் பலப்படுத்தும். உம்மிடம் செல்வத்தையும், பட்டம் பதவியையும், சொத்து சுகங்களையும் நான் கேட்கவில்லை. என் ஆன்ம இரட்சணியம் என்ற ஒரே ஒரு காரியத்தை மட்டும் நான் உம்மிடம் கேட்கிறேன்" என்று மன்றாடுங்கள்.

நீரோ, என் இயேசுவே! தேவரீர் என்ன சொல்கிறீர்? ஓ என் நல்ல மேய்ப்பரே, உம்மிடம் திரும்பி வருகிற வழி தவறிய ஆட்டைப் பாரும்; இந்த மனஸ்தாபமுள்ள பாவியை அரவணைத்துக் கொள்ளும். அவனுடைய பெரு மூச்சுக்களையும், கண்ணீரையும் ஆசீர்வதித்தருளும் அல்லது அதைவிட மேலாக, மிக நல்ல மனநிலை உள்ளவர்களும், தங்கள் இரட்சணியத்தைத் தவிர வேறு எதையும் விரும்பாதவர்களுமான இந்த மக்களை ஆசீர்வதித்தருளும். சகோதரரே! நமது ஆண்டவரின் திருப்பாதங்களில் விழுந்து என்ன விலை கொடுத்தாவது நம் ஆத்துமத்தை நாம் இரட்சித்துக் கொள்ள விரும்புவதாகச் சொல்வோம்.

நாம் எல்லோரும் சேர்ந்து கண்ணீர் நிரம்பிய கண்களோடு "நல்ல இயேசுவே! நான் என் ஆத்துமத்தை இரட்சித்துக் கொள்ள விரும்புகிறேன்!" என்று சொல்வோம். ஓ! ஆசீர்வதிக்கப்பட்ட கண்ணீர்த் துளிகளே! ஓ, ஆசீர்வதிக்கப்பட்ட பெருமூச்சுக்களே!