பல்வேறு வாழ்வு நிலைகளில் இரட்சணியம்

ஆனால் இப்படிப் பொதுவாக பேசும்போது நான் சொல்ல வந்ததைச் சொல்லாமல் விட்டு விடுகிறேன் என்று உணர்கிறேன். ஆகவே இந்த உண்மையை பல்வேறு வாழ்வின் நிலைகளுக்குப் பொருத்திப் பார்ப்போம். அப்போது ஒன்றில் நீங்கள் உண்மையை மறுத்து ஒரு விசுவாசியிடம் அறிவு, அனுபவம் மற்றும் பொது அறிவு ஆகிய எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளி விட வேண்டும் அல்லது பெரும் எண்ணிக்கையிலான கத்தோலிக்கர்கள் நரகத் தீர்ப்படைகிறார்கள் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். மாசற்றதனத்தில் இருக்கும் ஒருவன் இரட்சிக்கப்படுவது மிக எளிது. மக்களோ கடவுளின் போர்ப்படை அதிகாரிகளாகிய குருக்களின் தகுதியைவிட இந்த நிலையை உயர்வானதாகக் கருதுகிறார்கள். இந்த மாசற்ற தகுதியைவிட ஆண்டவருக்குப் பிரியமான தகுதி எதுவும் உலகில் இருக்கிறதா? முதல் பார்வையில் குருக்களில் பெரும்பாலானவர்கள் நல்லவர்கள் மட்டுமல்ல, அவர்கள் உத்தமமானவர்களும்கூட என்று யார்தான் நினைக்கமாட்டார்கள்?

புனித எரோணிமுஸ் சொல்வதைக் கேட்கும்போது நான் கடும் அச்சத்தால் தாக்கப்படுகிறேன். உலகம் முழுதும் குருக்களால் நிரம்பியிருந்தாலும், அவர்களில் நூற்றில் ஒருவர்கூட தங்கள் நிலைக்குத் தகுதியுள்ள முறையில் வாழ்வதில்லை என்று அவர் அறிவிக்கிறார். நரகத்தில் விழும் குருக்களின் எண்ணிக்கை எவ்வளவு அதிகமாயிருக்கிறது என்றால், பூமியில் யாராவது எஞ்சியிருப்பது சாத்தியமேயில்லை என்று தமக்குத் தோன்றுவதாக இறை ஊழியர் ஒருவர் சொன்னதை நான் கேட்டேன். இதை அவர் ஒரு தேவ வெளிப்படுத்தலின் மூலம் அறிந்து கொண்டார். புனித கிறிசோஸ்தம் அருளப்பர் தம் கண்களில் கண்ணீரோடு, பல குருக்கள் இரட்சிக்கப்படுகிறார்கள் என்று நான் நம்பவில்லை, இதற்கு மாறானதையே நம்புகிறேன். அதாவது நித்திய சாபத்திற்கு உள்ளாகிய குருக்களின் எண்ணிக்கை மிகப் பெரியது, மிக மிகப் பெரியது என்று அதிசயத்தபடி கூறினார்.

இன்னும் உயரே பாருங்கள்: பரிசுத்த திருச்சபையில் ஆயர்கள். ஆன்மாக்களை தங்கள் பொறுப்பில் கொண்டுள்ள மேய்ப்பர்களைப் பாருங்கள். அவர்களிடையே இரட்சிக்கப்படுவோரின் எண்ணிக்கை, நரகத் தீர்ப்படைபவர்களை விடப் பெரிதாயிருக்கிறதா?

கேன்டிம்ப்ரே விவரிக்கிற ஒரு நிகழ்ச்சியைக் கேளுங்கள். பாரீஸ் நகரில் ஒரு மாநாடு நடைபெற்றது. அதில் பல ஆயர்களும், ஆத்தும மேய்ப்பர்களும் பங்கு பெற்றார்கள். புகழ் பெற்ற ஒரு கத்தோலிக்க போதகர் பிரசங்கம் செய்ய அழைக்கப்பட்டிருந்தார். அவர் தம் பிரசங்கத்தைத் தயார் செய்து கொண்டிருந்தபோது, ஒரு பிசாசு பயங்கரத் தோற்றத்தோடு தோன்றி அவரிடம், "உம் புத்தகங்களை மூடி வையும். இந்த ஆயர்கள், ஆத்தும மேய்ப்பர்களுக்கு உண்மையாகவே பயனுள்ள ஒரு பிரசங்கம் செய்ய விரும்புகிறீர் என்றால், எங்கள் சார்பாக இந்த வார்த்தைகளைச் சொல்லும். இருளின் அரசர்களாகிய நாங்கள், ஆயர்களும், ஆத்தும மேய்ப்பர்களுமான உங்களுக்கு நன்றி கூறுகிறோம். ஏனெனில் உங்கள் அசட்டைத்தனத்தால் ஏராளமான விசுவாசிகள் நித்தியத்திற்குள் சபிக்கப்படுகிறார்கள். நீங்கள் எங்களோடு நரகத்தில் இருக்கும்போது நாங்கள் உங்களுக்கு சன்மானம் தருவோம்" என்றது.

மற்றவர்களுக்கு கட்டளைகள் தருகிறவர்களே, உங்களுக்கு ஐயோ கேடு! உங்கள் தவறால், மிகப் பலர் நித்தியத்திற்கும் சபிக்கப்படுகிறார்கள் என்றால் உங்களுக்கு என்ன நிகழும்? முதலில் சர்வேசுரனுடைய திருச்சபையில் இருக்கிற வெகு சிலர் மட்டுமே இரட்சிக்கப்படுகிறார்கள் என்றால் உங்களுக்கு என்ன நிகழும்? இருபாலரான எல்லா நிலையினரையும், எல்லா நிலைகளையும், கணவர்கள், மனை வியர் , விதவைகள், இளம் பெண்கள், இளம் ஆண்க ள், வீரர்கள், வியாபாரிகள் , கைவினைஞர்கள், செல்வந்தர்கள் , ஏழை கள் , மேற்குடியினர், உழைக்கும் வர்க்கத்தினர் ஆகிய அனைவரையும் எடுத்துக் கொள்ளுங்கள். மிக மோசமான வாழ்வு நடத்தும் இவர்கள் எல்லோரையும் பற்றி நாம் என்ன சொல்வோம்?

புனித வின்சென்ட் பெரர் சொல்லும் பின்வரும் நிகழ்ச்சி இதை உங்களுக்குத் தெளிவுபடுத்தும். லயோன்ஸ் துணை ஆயர் ஒருவர் தமது பதவியைத் துறந்து, காட்டிற்குச் சென்று தனிமையில் தவ வாழ்வில் ஈடுபட்டார். புனித பெர்நார்து இறந்த அதே நாளில் இவரும் இறந்தார். தமது மரணத்திற்குப் பிறகு, அவர் தமது ஆயருக்குக் காணப்பட்டு "ஆயரவர்களே, நான் மரித்த அதே நேரத்தில், உலகில் முப்பத்து மூவாயிரம் பேர் இறந்தார்கள். இவர்களில் பெர்நார்தும் நானும் மட்டுமே எந்தத் தாமதமுமின்றி நேராக மோட்சத்திற்குச் சென்றோம். மூவர் உத்தரிக்கிற ஸ்தலத்திற்கு சென்றார்கள். மற்றவர்கள் 32,995 பேர் நரகத்தில் விழுந்தார்கள்” என்றார். 

அதாவது 

இறந்தவர்கள் எண்ணிக்கை - 33,000 

மோட்சம் சென்றவர்கள் - 2

இவர்களில் உத்தரிக்கிற ஸ்தலம் சென்றவர்கள் - 3

நரகத்தில் விழுந்தவர்கள் - 32,995 

எங்கள் சபையின் காலப் பதிவேடுகள் இன்னும் அதிக பயங்கரமுள்ள ஒரு நிகழ்ச்சியை விவரிக்கின்றன. எங்கள் சகோதரத் துறவிகளில் தமது போதகங்களுக்காகவும், பரிசுத்ததனத்திற்காகவும் புகழ் பெற்ற ஒருவர் ஒருமுறை ஜெர்மனி நாட்டில் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். இந்தப் பிரசங்கத்தில் அவர் எந்த அளவுக்கு உடலின் அசுத்தப் பாவங்களின் அருவருப்பான தன்மையை தத்ரூபமாக விளக்கிக் காட்டினார் என்றால். இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு பெண்மணி மிகுந்த துயரத்திற்குள்ளாகி எல்லோர் முன்பாகவும் இறந்து விழுந்தாள். அதன்பின் மீண்டும் உயிர் பெற்ற அவள், "நான் கடவுளின் நீதியாசனத்தின் முன்பாக நின்ற அதே சமயத்தில் உலகின் எல்லாப் பாகங்களிலுமிருந்து அறுபதாயிரம் மனிதர்கள் அங்கு வந்து சேர்ந்தார்கள். அவர்களில் மூவர் மட்டுமே உத்தரிக்கிற ஸ்தலத்திற்கு தீர்ப்பிடப்பட்டு மீட்படைந்தார்கள். மற்றவர்கள் எல்லோரும் நரகத்திற்குத் தீர்ப்பிடப்பட்டார்கள்” என்றாள். 

அதாவது 

இறந்தவர்கள் எண்ணிக்கை - 60,000 

உத்தரிக்கிற ஸ்தலம் சென்றவர்கள் - 3 

நரகத்திற்குச் சென்றவர்கள் - - 59,997

ஓ! கடவுளின் தீர்ப்புகளின் பாதாளமே! 33,000 பேரில் வெறும் 5 பேர் மட்டுமே இரட்சிக்கப்பட்டனர். 60,000 பேரில் வெறும் மூன்று பேர் மட்டுமே உத்தரிக்கிற ஸ்தலத்திற்குச் சென்றார்கள். பாவிகளே! இதில் எந்த வகையில் நீங்கள் சேர்க்கப்பட இருக்கிறீர்கள்? நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? என்ன நினைக்கிறீர்கள்?

அதிசய உணர்வாலும் கடும் அச்சத்தாலும் நிரப்பப்பட்டவர்களாக ஏறக்குறைய நீங்கள் அனைவருமே தலை குனிவதைப் பார்க்கிறேன். ஆனாலும் நமது இந்தப் பிரமிப்பை ஒதுக்கி வைப்போம். இந்த நம் பயத்திலிருந்து சற்று ஆதாயம் பெற முயற்சி செய்வோம். மோட்சத்தை அடைய மாசற்றதனம், மனஸ்தாபப்பட்டு மனந்திரும்புதல் என்னும் இரண்டு சாலைகள் இருக்கின்றன என்பது உண்மையல்லவா? இனி வெகு சிலரே இந்த இரண்டு சாலைகளிலும் செல்லத் தொடங்குகிறார்கள் என்று நான் உங்களுக்குக் காண்பித்தால், பகுத்தறிவுள்ள மக்கள் என்ற முறையில், வெகுசிலர் மட்டுமே இரட்சிக்கப்படுகிறார்கள் என்ற முடிவுக்கு நீங்கள் வருவீர்கள்.

ஒரு சில மாசற்றவர்களைக் கண்டுபிடிப்பதைவிட, எல்லா வகையான அக்கிரமங்களிலும் மூழ்கியிருக்கிற எண்ணற்ற பாவிகளின் பெருங்கூட்டத்தைக் கண்டு பிடிப்பது எளிது என்று சால்வியானுஸ் என்பவர் தம் காலத்தின் நிலைமையைப் பற்றிச் சொன்னதை ஒப்பிட்டு நம் காலத்தைப் பற்றியும் நாம் சொல்ல முடியும்.

எத்தனை ஊழியர்கள் தங்கள் கடமைகளில் முழு நேர்மையாகவும், பிரமாணிக்கமாகவும் இருக்கிறார்கள்? எத்தனை வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் நியாயமாக இருக்கிறார்கள்? எத்தனை கைவினைஞர்கள் நுட்பமாகவும், உண்மையுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்? சட்டத் துறையைச் சார்ந்த மனிதர்களில் எத்தனை பேர் நியாயத்தைக் கைவிடாமல் இருக்கிறார்கள்? எத்தனை போர்வீரர்கள் மாசற்றதனத்தை மிதித்தபடி செல்லாமலிருக்கிறார்கள்? எத்தனை எஜமானர்கள் தங்கள் ஊழியர்களின் சம்பளத்தை அநியாயமான முறையில் பிடித்து வைக்காமல் அல்லது தங்களுக்கு கீழ்ப்பட்டவர்களின்மீது ஆதிக்கம் செலுத்த முயலாமல் இருக்கிறார்கள்?

எல்லா இடங்களிலும் நல்லவர்கள் அபூர்வமாகவும், கெட்டவர்கள் பெரும் எண்ணிக்கையிலுமே இருக்கிறார்கள். இன்று முதிர்ச்சியடைந்த மனிதர்களில் மிக அதிகமான தான்தோன்றித்தனமும், சிறுவர் சிறுமிகளிடம் சுதந்திரமான மனப்போக்கும், பெண்களிடையே வீண் பெருமையும், பகட்டும், உயர்குடியினரிடையே உடல் இச்சையும், நடுத்தர வர்க்கத்தில் சீர்கேடும், ஏழைகளிடையே மரியாதையின்மையும் மலிந்திருப்பது யாருக்குத்தான் தெரியாது? எல்லாரும் வழிபிசகிப் போனார்கள், நல்லவன் யாருமில்லை , ஒருவன் கூட இல்லை என்று தாவீது தம் காலத்தைப் பற்றிக் கூறியதை இவர்களைப் பற்றியும் நாம் கூற முடியும்.

தெருக்களிலும், சதுக்கங்களிலும், அரண்மனைக்குள்ளும், வீட்டுக்குள்ளும், நகரத்திற்குள்ளும், நாட்டுப்புறத்திற்குள்ளும், நீதிமன்றத்தினுள்ளும் கூட சென்று பாருங்கள். புண்ணியத்தை எங்கே காண முடிகிறது? அந்தோ! தீமையைக் கண்டு பறந்தோடும் மிகச்சிறிய எண்ணிக்கையினரைத் தவிர, கிறிஸ்தவர்களின் கூட்டம் துர்க்குணங்களின் ஒரு தொட்டியே அன்றி வேறென்ன? என்று புலம்புகிறார் சால்வியானுஸ்.

எல்லா இடங்களிலும் நாம் காண முடிவதெல்லாம் சுயநலம், பேராசை, போசனப்பிரியம், சொகுசான வாழ்வு இவற்றைத்தான். மனிதர்களில் பெரும்பகுதியினர் அசுத்தத்தனம் என்னும் துர்க்குணத்தால் கறைபட்டவர்களாக இல்லையா? உலகம் முழுவதும் - அதாவது மிகவும் கெட்டுப் போன உலகம் - தீமையில் அமர்ந்துள்ளது என்று புனித அருளப்பர் கூறியது சரிதான் அல்லவா? இதை உங்களுக்குச் சொல்பவன் நானல்ல. மிக மோசமாக வாழ்பவர்களில், மிகச் சிலர் மட்டுமே இரட்சிக்கப்படுகிறார்கள் என்று நம்பும்படி உங்கள் அறிவே உங்களைத் தூண்டுகிறது.

ஆனால் மாசற்றதனத்தை இழந்த குற்றத்திற்குத் தவம் செய்வதன் மூலம் சரியான பரிகாரம் செய்ய முடியாதா என்று கேட்பீர்கள். உண்மைதான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால் தவம் செய்வது நடைமுறையில் மிகக் கடினமானது என்பதையும் நான் அறிந்திருக்கிறேன். இதனால் தவம் செய்யும் வழக்கத்தையே நாம் முழுவதுமாக விட்டு விட்டோம். மேலும் இது எந்த அளவுக்குப் பாவிகளால் தவறாகப் பயன்படுத்துகிறது என்றால் தவத்தின் பாதையில் வெகு சிலர் மட்டுமே இரட்சிக்கப்படுகிறார்கள் என்று உங்களை நம்பச் செய்வதற்கு இது ஒன்றே போதுமானதாக இருக்க வேண்டும்.

ஓ, தவத்தின் பாதை எவ்வளவு செங்குத்தாகவும், ஒடுக்கமாகவும், முட்கள் நிறைந்ததாகவும், பார்க்க பயம் தருவதாகவும், ஏறக் கடினமானதாகவும் இருக்கிறது! நாம் பார்க்கும் இடங்களிலெல்லாம் இரத்தச் சுவடுகளையும், சோகமான நினைவுகளை எழுப்பும் காரியங்களையுமே நாம் காண்கிறோம். பலர் அதைப் பார்த்தவுடனேயே பலவீனப்பட்டு விடுகிறார்கள். பலர் தொடக்கத்திலேயே பின்வாங்கி விடுகிறார்கள். பலர் சோர்ந்து போய் நடுவில் விழுந்து விடுகிறார்கள். பலர் முடிவு நெருங்கும்போது பரிதாபமான முறையில் இதைக் கைவிட்டு விடுகிறார்கள். மரணம் வரைக்கும் நிலையாய் இருப்பவர்கள் எவ்வளவு குறைவாக இருக்கிறார்கள்! தகுதியான முறையில் பரிகாரம் செய்துள்ளவர்கள் யாரையாவது கண்டுபிடிப்பதைவிட, தங்கள் மாசற்றதனத்தை காத்துக் கொண்டவர்களை கண்டுபிடிப்பது எளிது என்று புனித அம்புரோஸ் கூறுகிறார்.

பாவசங்கீர்த்தனத்தை எடுத்துக் கொண்டால், பலர் கள்ளப் பாவசங்கீர்த்தனம் செய்கிறார்கள். பலர் புதிது புதிதாக சாக்குப்போக்குகள் கண்டுபிடிக்கிறார்கள். மிகப் பலர் மனஸ்தாபமே இல்லாமல் பாவசங்கீர்த்தனம் செய்கிறார்கள். மிக அநேக போலியான வாக்குறுதிகள், நிறை பயனற்ற பிரதிக்கினைகள், நிறைய நிறைவேறாத பாவ மன்னிப்புகள்! அசுத்தப் பாவங்களைப் பற்றிப் பாவசங்கீர்த்தனத்தில் தன்னைக் குற்றஞ்சாட்டிக் கொண்டாலும், அந்தப் பாவத்திற்குரிய சந்தர்ப்பங்களை விட்டு விலகாதிருப்பவர்கள் நல்ல பாவசங்கீர்த்தனம் செய்திருப்பதாக நினைப்பீர்களா? அல்லது தான் செய்த அநியாயங்களை பாவசங்கீர்த்தனத்தில் சொன்னாலும், அவற்றிற்கு எந்த விதத்திலும் பரிகாரம் செய்யும் கருத்து இல்லாதவர்களைப் பற்றி? அல்லது பாவசங்கீர்த்தனம் செய்தபின் உடனே அதே பாவத்தில் மீண்டும் விழுகிற ஒருவனைப் பற்றி? ஓ, இவ்வளவு மேன்மையுள்ள ஒரு தேவதிரவிய அனுமானம் இப்படி எவ்வளவு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது!

ஒருவன் திருச்சபை விலக்கத்தைத் தவிர்ப்பதற்காக பாவசங்கீர்த்தனம் செய்கிறான்.

மற்றொருவன் தன் மனஸ்தாபத்தைக் காட்ட பாவசங்கீர்த்தனம் செய்கிறான்.

ஒருவன் தன் மனவுறுத்தலை அமைதிப்படுத்த தன் பாவங்களை விட்டு விலகுகிறான். வேறொருவன் வெட்கத்தின் காரணமாக அவற்றை மறைக்கிறான்.

ஒருவன் கெடுமதியின் காரணமாக, பாவங்களை குறைத்துச் சொல்கிறான்.

மற்றொருவன் பழக்கதோஷத்தில் அவற்றை வெளிப்படுத்துகிறான்.

ஒருவனிடம் மனதில் இந்த தேவதிரவிய அனுமானத்தின் உண்மையான நோக்கம் இல்லை.

மற்றொருவனிடம் அவசியமான துக்கம் இல்லை . இன்னொருவனிடம் உறுதியான பிரதிக்கினை இல்லை.