இருபதாம் நூற்றாண்டின் தீர்க்கதரிசனம்: பாத்திமா

1. இச்சிற்றுரை பாத்திமா செய்தியின், குறிப்பாக பாத்திமா பரம இரகசியத்தின் சரித்திரபூர்வமான, வேத சாஸ்திர ரீதியான, ஆத்தும சம்பந்தமான ஒரு ஆராய்ச்சியும், ஆழ்ந்த சிந்தனையின் விளைவும் ஆகும். இது கோர்வையாகக் கட்டப்பெற்ற பல உண்மைகளை உள்ளடக்கியுள்ளது.

2. இந்த உரையைக் கேட்குமுன் இரண்டு முக்கியக் கருத்துக்களை நினைவில் கொள்ள வேண்டும்.

முதலாவதாக: - பாத்திமா உண்மைகளைப் பற்றி நம்மில் அநேகருக்கு விவரம் பற்றாது. ஏதோ பாத்திமா மாதா, பாத்திமா செய்தி என்று மேற்போக்காகச் சிறிதளவு தெரிந்து வைத்திருக்கிறோம். ஆனால் சாதாரண கத்தோலிக்கர்களான நாம் பாத்திமா செய்தி பற்றி அறிந்துகொள்ள வேண்டி யதும், கண்டுபிடித்துக் கொள்ள வேண்டியதுமான பரம இரகசியங்கள் மிக அதிகம் உள்ளன. பாத்திமா செய்தி சுருக்கமானதுதான். ஆனால் அதனை அகழ்ந்து புரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள் இன்னும் ஏராளம் இருக்கின்றன.

3. இரண்டாவதாக: - பாத்திமா செய்தி எதிர்ப்பின் அடையாளமாக இருந்து வந்திருக்கிறது. இன்னும் அப்படி இருக்கிறது. இனியும் அப்படித்தான் இருக்கும். பாத்திமா செய்தி தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது, எதிர்க்கப்படுகிறது. இச்செய்தியை வேதசாஸ்திர ரீதியாக, அல்லது அப்போஸ்தல ஊழியமாக போதிக்க முயல்வது சங்கடங்களைச் சந்திப்பதாகும். இருப்பினும் இந்த இடையூறுகள் நமது அன்னை நம்மிடம் எதிர்பார்க்கும் பல தியாகங்களில் ஒன்றே.

4. பாத்திமா செய்தி பற்றிய எனது சிந்தனைகளை இரண்டு படிகளாக விவரிக்க முயலுகிறேன். முதற்படியாக, பாத்திமாவின் வரலாறு, உண்மைகள், செய்திகளை சுருக்கமாக உங்கள் நினைவுக்குக் கொண்டு வருகிறேன். இரண்டாவது பாத்திமா செய்தி, பாத்திமா இரகசியம் இவை பற்றி வேதசாஸ்திர அடிப்படையிலும், வரலாற்று அடிப்படையிலும் சிந்தித்து, ஆழ்ந்த விழிப்புணர்வு கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றிக் கூறுகிறேன். 

முதல் பாகம்

பாத்திமா செய்தியின் எளிமையும், சிக்கலும்

5. பாத்திமா செய்தி மிகவும் எளிதானது. அதே சமயம் அது மிகவும் சிக்கலானது. பாத்திமா செய்தி முழுவதையும் ஒரு சில வார்த்தைகளில் அடக்கி விடலாம். "உலக முழுவதிலும் மரியாயின் மாசற்ற இருதய பக்தியை ஏற்படுத்த கடவுள் விரும்புகிறார்." இதுவே பாத்திமா செய்தியின் சாராம்சம்.

6. இருப்பினும் இச்செய்தி மிகவும் சிக்கலாக இருப்பது ஏனெனில், 1917-ல் வெளியிடப்பட்ட இச்செய்தி படிப்படியாக வளர்ச்சியடைந்து வந்திருக்கிறது. ஆகவே, நாம் இந்த வளர்ச்சியைப் பின்தொடர்ந்து ஆராய வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இவற்றைப் பரிசீலித்து, ஆராய்ந்து, மதிப்பீடு செய்வதும் தேவையாகிறது. அது மட்டுமல்ல, பாத்திமா செய்தி மக்களால் ஒப்புக்கொள்ளப்படவும் வேண்டியிருக்கிறது. 

பாத்திமா செய்தியின் சுருக்கம்

7. பாத்திமா உண்மைகளை நினைவுக்குக் கொண்டு வருவோம். அநேகருக்குத் தெரிந்திருப்பது: தேவ அன்னை 1917-ம் ஆண்டு மே மாதம் 13 முதல் அக்டோபர் 13 வரை அளித்த ஆறு காட்சிகளே. ஆனால் இந்தக் காட்சிகளுக்கு முன்னதாக தேவதூதனின் ஆறு காட்சிகள் நிகழ்ந்தன என்பதை நினைவுகூர வேண்டும் (1915, 1916-ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்தவை). இவற்றில் மூன்று காட்சிகள் துலக்கமில்லாத மவுனக் காட்சிகள். மற்ற மூன்றிலும் "சமாதானத் தூதன்” என்று தம்மை அழைத்த சம்மனசானவர் ஒரு இளைஞன் உருவில் வந்து மிகவும் முக்கியமான ஒரு செய்தியை அளித்தார். 

8. பாத்திமாவில் நிகழ்ந்தவற்றை மும்மேடைக் காட்சிகளாக நாம் உருவகிக்கலாம். இதில் நடுமேடையில் கன்னித் தாயின் ஆறு காட்சிகளையும், இடது பக்க மேடையில் தேவதூதன் அளித்த ஆயத்தக் காட்சிகளையும், வலது புற மேடையில் சகோதரி லூசியாவின் அலுவலையும் காண்கிறோம். நடுக்காட்சிக்கு முன் கிடைத்த செய்தியும், அதற்குப் பின் தரப்பட்ட செய்திகளும், நமது தேவ அன்னை அளித்த நடுக்காட்சிகளின் செய்திகளை நாம் நன்றாகப் புரிந்து கொள்ள உதவுகின்றன. இந்த மூன்று சித்திரங்களையும் நாம் ஒரே நோக்கில் பார்க்க வேண்டும்.

ஆச்சரியமான ஒற்றுமை

9. மூன்று மேடைச் சித்திரங்களாகப் பகுக்கப்பட்ட இந்த நிகழ்ச்சிகளுக்கும், மானிட மீட்பின் வரலாற்றுக்கும் ஆச்சரியமான ஒற்றுமை இருக்கிறது. நமது ஆண்டவரின் வருகைக்கு ஆயத்தம், ஆண்டவரின் 33 ஆண்டுகால வாழ்வு, அவருக்குப் பின் திருச்சபையின் வரலாற்றில் அவருடைய அலுவலின் நிறைவேற்றம் ஆகிய மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கிறது மீட்பின் வரலாறு. இதைப் போலவே பாத்திமா நிகழ்ச்சிகளிலும் சம்மனசின் மூலமாகத் தயாரிப்பு, நமது பாத்திமா அன்னையின் செய்தி, தெரிந்தெடுக்கப்பட்ட கருவியாகிய சகோதரி லூசியாவின் மூலம் அச்செய்தி நிறைவேற்றப்படல் ஆகிய மூன்று பகுதிகளைக் காண்கிறோம். இந்த ஒற்றுமையை நான் தெளிவுபடுத்த முக்கியமான காரணம் இருக்கிறது. பாத்திமா நிகழ்ச்சிகளைப் பற்றி ஆய்ந்தறிந்த சிலர், “நாங்கள் 1917-ல் கன்னி மாதா கூறியதை ஏற்றுக் கொள்கிறோம். அதன்பின் நிகழ்ந்தவற்றை, குறிப்பாக சகோதரி லூசியாவின் மூலம் பெறப்பட்ட செய்திகளை ஏற்றுக்கொள்ளவில்லை” என்று கூறுகிறார்கள்.

சகோதரி லூசியாவின் பங்கு இன்றியமையாதது. ஏன்?

10. மேற்கூறப்பட்ட சிலரின் கருத்து ஏற்கக்கூடியதல்ல. ஏனென்றால், 1917 ஜூன் 13ல், நமது அன்னை லூசியாவிடம்: “என்னை மக்கள் அறிந்து நேசிக்கும்படி சேசு உன்னைப் பயன்படுத்த விரும்புகிறார். உலகத்தில் என் மாசற்ற இருதய பக்தியை ஏற்படுத்த சேசு ஆசிக்கிறார்” என்று திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார்கள் -- (இரண்டாவது காட்சி). எனவே 1917 ஜூன் 13-லேயே பாத்திமா செய்திக்குச் சாட்சியம் கூற, சேசுவின் சித்தத்தை அறிவிக்கும் தீர்க்கதரிசியாக லூசியா நமது அன்னையால் தேர்ந்தெடுக்கப்பட்டாள். லூசியா பெற்ற ஊழியம் திருச்சபை சட்டபூர்வ மானதல்ல; ஆனால் தீர்க்கதரிசன ஊழியம் ஆகும். நம் தேவ அன்னையின் மேற்கூறப்பட்ட வார்த்தைகளை நம்பியே லூசியாவிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் ஊழியத்தின் முக்கியத்துவத்தை நாம் ஏற்கிறோம். இப்பொழுது நாம் இருப்பது பாத்திமா அன்னையின் வேண்டுகோள் நிறை வேற்றப்பட வேண்டிய காலமாகும். 

பாத்திமா செய்தி எது?

11. பாத்திமா செய்தியின் சாராம்சம் 1917 ஜூலை 13-ல் நமது அன்னை அளித்த 3-ஆம் காட்சியில் அடங்கியிருக்கிறது. “யுத்தம் முடிவடையவும், உலக சமாதானத்தைப் பெற்றுக் கொள்ளவும் தொடர்ந்து தினமும் ஜெபமாலை சொல்லுங்கள். ஏனெனில் என்னால் மட்டுமே உங்களுக்கு உதவ முடியும்... பாவிகள் செல்லும் நரகத்தைக் கண்டீர்கள். அவர்களைக் காப்பாற்ற உலகில் என் மாசற்ற இருதயத்தின்மீது பக்தியை ஏற்படுத்த கடவுள் விரும்புகிறார்... நான் உங்களிடம் கூறுவதை நீங்கள் செய்தால் அநேக ஆன்மாக்கள் காப்பாற்றப்படுவார்கள். சமாதானமும் நிலவும்.” இந்தச் செய்தியை நாம் ஆராய்ந்து பார்ப்போமானால் இதில் ஒரு அடிப்படையான வேத சத்தியமும் ஒரு வேண்டுகோளும் அடங்கியிருப்பது புலப்படும். இதில் அடங்கியிருக்கும் வேத சத்தியம்: கன்னிமாமரி மீட்பருக்கும், மானிடருக்கும் நடுவே நிற்கும் மத்தியஸ்தி என்பதே! "என்னால் மட்டுமே உங்களுக்கு உதவ முடியும்” என்ற வார்த்தைகளைக் கவனிக்கவும். மரியாயின் மத்தியஸ்தத்திலேயே அனைத்தும் சார்ந்திருக்க வேண்டும் என கடவுள் விரும்புகிறார். இதுவே பாத்திமா செய்தியின் இருதயமாக விளங்கும் வேதசத்தியம் ஆகும்.

12. இந்த வேத சத்தியத்தின் இயல்பான நடை முறை: நாம் இரட்சிக்கப்படுவதற்கும், சமாதானத்தை அடைந்து கொள்வதற்கும் தேவதாய் கன்னிமரியாயிடம் செல்ல வேண்டும். அவர்கள் நம்மிடம் கேட்ட பக்தி முயற்சிகளைக் கைக்கொள்ள வேண்டும் என்பதே. 

13. கருவாக அமைந்த இந்த இரண்டு உண்மைகளிலுமிருந்து மேலும் இரண்டு விஷயங்கள் பின்தொடருகின்றன. முதலாவது: அதிமுக்கியமான ஒரு எச்சரிக்கை. நமது அன்னை பாவத்தைக் கண்டித்து அதை விட்டுவிடும் படி நம்மை எச்சரிக்கிறார்கள். பாவமே உலகின் சகல துன்பத் திற்கும் காரணம் என்கிறார்கள். இரண்டாவது: நம்பிக்கை யூட்டும் தீர்க்கதரிசனமும், வாக்குறுதியும். “இறுதியில் என் மாசற்ற இருதயம் வெற்றி பெறும்... உலகிற்கு ஒரு சமாதான காலம் கொடுக்கப்படும்” என்பது. 

14. இந்த நான்கையும் சுருக்கமாக வரிசைப்படுத்துவோம்.

 (1) பாவத்தால் உலகிற்கு ஏற்படப் போகும் ஆபத்தைப் பற்றிய எச்சரிக்கை.

(2) மாமரி மத்தியஸ்தி என்ற சுவிசேஷ ஆதாரமுள்ள வேதசத்தியம். தேவ அன்னை ஒருவரே பாவத்தில் இருந்தும் அதன் விளைவுகளிலிருந்தும் நம்மைக் காக்க முடியும்.

(3) "மரியாயிடம் செல்லுங்கள்; அவர்களின் மாசற்ற இருதயப் பக்தியைக் கைக்கொள்ளுங்கள்” என்ற வேண்டுகோள். 

(4) மகிழ்ச்சியான முடிவின் வாக்குறுதி: “இறுதியில் என் மாசற்ற இருதயம் வெற்றி பெறும்."

இதுவே உண்மையான பாத்திமா செய்தியாகும். இச்செய்தியோ சிறியது தான். ஆனால் சிந்தித்துப் பார்த்தோமானால், மிகச் சிலவாகிய இந்த வார்த்தைகளில் பிரகாசமுடைய பரலோக செல்வத்தையும், அளவற்ற ஆழத்தையும் காண்கிறோம். உண்மையிலேயே சுவிசேஷத்தின் முழு ஆழமும் இதிலே உள்ளது. ஏனென்றால் பாத்திமா செய்தி என்பது மரியாயின் மாசற்ற இருதயத்தின் வழியாக வெளிப்படும் சுவிசேஷச் செய்தியேயாகும். இனி இந்த நான்கு அம்சங்களையும் ஒவ்வொன்றாகச் சிந்திப்போம்.