பாவத்தைப் பற்றிய எச்சரிக்கை

முதல் அம்சம்

15. பாவத்தைப் பற்றிய எச்சரிக்கை தேவதூதனின் வார்த்தைகளிலும் இருக்கிறது. உலகில் மிகப் பெரியதும், நாம் கண்டு மிகவும் பயப்பட வேண்டியதுமான தீமை பாவம்தான். மற்ற எல்லாக் கஷ்டங்களும் வறுமை, வேதனை, குழப்பம், யுத்தம், சாவு ஆகிய அனைத்துமே பாவத்தின் விளைவுகள்தாம். பாவத்தின் விளைவுகளான இவை நம் காலத்தின் முடிவையே கொண்டு வருவதாயிருந்தாலும் கூட அவைகளுக்குப் பயப்படுவதை விட அதிகமாக நாம் பாவத்திற்கே பயப்பட வேண்டும். ஆன்மாக்கள் இழக்கப்படுவதற்கும், யுத்தங்களுக்கும், பெரும் நாசங்களுக்கும் மூலகாரணம் பாவமே. இப்படிப்பட்ட பாவத்தையே மாதா கண்டித்து பாவத்திற்கு எதிராக நம்மை எச்சரிக்கிறார்கள்.

நாஸ்திகம் என்னும் தலையாய பாவம்

16. முடிவில்லாமல் நீண்டு பெருகிக் கொண்டே வருகின்றன உலகத்தின் பாவங்கள். உலகமே பெரும் பாவ சமுத்திரம் ஆகிவிட்டது. இத்தனை பாவங்களுக்குள்ளும் தலையாய பாவம் ஒன்று இருக்கிறது. அதுதான் நாஸ்திகம். அது சர்வேசுரனை வேண்டாமென மறுதலிக்கும் கொள்கை; கடவுளை நிராகரிக்கும் கொள்கை; கடவுளே இல்லை என்று சாதிக்கும் தப்பறை. பொது மக்கள் மத்தியில் இந்த நாஸ்திகம் பரவியுள்ளது. நாஸ்திகம், போரிடும் நிர்வாக அமைப்போடும், வெல்லும் சக்தியோடும் காணப்படுகிறது. மனித வரலாற்றிலேயே ஒரு நூதன விஷயமாக வந்துள்ளது. இந்த நாஸ்திகம் வேறெதுவுமல்ல, ஆதி மனிதர்களான ஆதாம் ஏவாள் முதல் முறையாகக் கடவுளை மறுதலித்ததன் பயனாக வரும் ஜென்மப் பாவத்தினுடையவும், அதன் தோஷத்தினுடையவும் பலதிறப்பட்ட விளைவே யாகும். ஆகவே பாத்திமாவில் நமது அன்னை கண்டித்துள்ள முதல் பாவம் உலகத்தின் மற்ற எல்லாப் பாவங்களையும் உற்பத்தியாக்குகிற நாஸ்திகம் என்னும் பாவமே.

17. நமது அன்னை, தன் மாசற்ற இருதயத்திற்கு எதிராகச் செய்யப்படும் பாவங்கள் என்று கூறுவதையும் நாம் கவனிக்க வேண்டும். கடவுளுக்கு எதிராகவே பாவம் கட்டிக் கொள்ளப்படுவதால் மாதாவின் இவ்வார்த்தைகள் தெளிவாக்கப்பட வேண்டும். தாவீதரசர் சங்கீதத்தில் (சங்.50:5) கூறுகிறார்: “உமக்கெதிராக மட்டுமே பாவம் செய்தேன்” என்று. ஆம். பாவம் என்பது சர்வேசுரனுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றமே. (சின்னக் குறிப்பிடம்: “பாவம் ஆவதென்ன? தேவ கட்டளைகளை மீறுகிறதே பாவம்.”) ஆனால் கடவுள், அவதரித்த வார்த்தையாகிய சேசு கிறீஸ்துவின் திரு இருதயத்திலே வேதனைப்படுகிறார். அதாவது, பாவமானது கடவுளை கிறீஸ்துவின் மனுஷீகத்திலே, அவரது மானிட சரீரத்தின் வழியாகப் புண்படுத்துகிறது. கிறீஸ்துவோ, தாம் எந்த மாசற்ற கன்னிகையிடத்தில் மாமிசமானாரோ, அந்த மரியாயிடமிருந்து பிரிக்கப்பட முடியாதவராயிருக்கிறார். ஆகையால், கிறீஸ்துவின் திருச்சரீரத்தில் சர்வேசுரனைப் புண்படுத்துகிற பாவங்கள், அதே நேரத்தில் மரியாயின் மாசற்ற இருதயத்தையும் காயப்படுத்துகின்றன.

18. ஆகவே தேவனையும், தேவ தாயையும் ஒரே சமயத்தில் காயப்படுத்தும் அடிப்படைப் பாவம் நாஸ்திகமே. இதனாலேயே பாத்திமா செய்தியில் நாஸ்திக ரஷ்யா விசேஷமாகக் குறிப்பிடப்படுகிறது. சாத்தான் தன்னுடைய ஆட்சியை உலகமெங்கும் நிறுவுவதற்கென தெரிந்து கொண்ட கருவி கம்யூனிஸ்ட் ரஷ்யா ஆகும். கம்யூனிஸ்ட் ரஷ்யாவின் இந்தப் பாவத்திற்குப் பரிகாரமாகவும், உலகத்தைக் காப்பாற்றவும் மாதா தன் மாசற்ற இருதயத்திற்கு ரஷ்யா ஒப்புக்கொடுக்கப்பட வேண்டுமென்று கேட்டார்கள்.

19. நாஸ்திகம் என்னும் பிரதான பாவத்திற்கும், போராடும் நாஸ்திக கருவியாக இருந்து சாத்தானின் ஆட்சியை உலகில் ஸ்தாபிக்க முயலும் கம்யூனிஸ்ட் ரஷ்யாவின் பாவத்திற்கும் உள்ள தொடர்பை இப்பொழுது நீங்கள் காண்பீர்கள் என நம்புகிறேன். 

20. இதுவரையிலும் பாத்திமா செய்தியில் பாவத்தைப் பற்றிக் கூறப்பட்டுள்ள எச்சரிக்கையைப் பார்த்தோம். ஆனால் நமது அன்னை யுத்தத்தைப் பற்றியும் எச்சரித்தார்கள். 1918-ம் ஆண்டில் யுத்தம் முடிவடைந்து, (முதல் உலகப் போர்) சமாதானம் உண்டாகுமென்று 1917-ல் கூறினார்கள். அதோடு 1939 முதல் 1945 வரை நடை பெற்ற இரண்டாம் உலகப்போர் பற்றியும் முன்னறி வித்தார்கள். இன்னும் பாத்திமா செய்தியின் மூன்றாம் பாகமாக அன்னை கூறிய செய்தி வெளியிடப்படாத இரகசியமாக இருந்து வருகிறது. அதில் என்ன கூறப்பட்டுள்ளது என்று நமக்குத் தெரியாது. ஆனாலும் இந்த மூன்றாம் செய்தி, நமக்கு ஏற்கெனவே தெரிந்துள்ளவற்றின் அகக் காரணங்களில் இருந்து பார்த்தால், வரவிருக்கும் மூன்றாம் உலக யுத்தம் பற்றிய எச்சரிக்கையாக இருக்கலாம் என நாம் யூகிக்கலாம். காரணம்: எவ்வளவோ எச்சரிக்கைகளுக்குப் பின்னும் நாஸ்திகம் பரவுவதிலிருந்து தடுக்கப்பட வில்லை. தேவதாயின் வேண்டுகோள்களும் கவனிக்கப்பட வில்லை.

21. இதுவரை நாம் பரிசீலித்த கருத்துக்களாவன: கம்யூனிஸ்ட் ரஷ்யா என்ற கருவியின் மூலமாகப் பரப்பப்படும் நாஸ்திகம் என்ற பாவத்தால் உலக யுத்தங்கள், மிகப் பெரும் அழிவுகள் முதலியன ஏற்படுகின்றன. மாதா முன்னறிவித்த இவை இன்று உண்மையாகியுள்ளதை நாம் கண் முன்னால் காண்கிறோம். இந்நிலையை மாற்றியமைக்கும் மருந்து எது? பாவத்திலிருந்தும் அதன் கொடிய விளைவுகளில் இருந்தும் உலகத்தைக் காப்பாற்ற என்ன வழி இருக்கிறது? அந்த வழியைப் பின்பற்றுமாறு நாம் திருச்சபைக்கும், உலகிற்கும் வலியுறுத்திக் கூற வேண்டியது மிக மிக அவசியம். பாவத்திலிருந்தும், அதன் விளைவுகளிலிருந்தும் விடுபட வழி. அதை விட்டால் வேறு எதுவும் இல்லாத ஒரே ஒரு வழி: மரியாயின் மாசற்ற இருதயமே! பாத்திமாவில் மாதா விடுத்துள்ள வேண்டுகோளுக்கு நாம் பதில் அளிப்பதனால் அதை நாம் அடையலாம்; அடைய வேண்டும். திருச்சபையும், உலகமும் இதை உணர வேண்டும்.

இவ்வாறாக, மாதாவின் எச்சரிக்கையிலிருந்து அவர்களின் வேண்டுகோளுக்கும், அவ்வேண்டுகோளுக்கு நாம் கொடுக்க வேண்டிய பதிலுக்கும் வருகிறோம்.