சேசுவின் உன்னத விருப்பம்: மாதாவை தம்மளவிற்கு உயர்த்துவது

அன்பின் தத்துவமே சமத்துவம்தான். சேசு தம் தகுதி பெற்ற தாயை தமக்குச் சமமாக உயர்த்தி நேசிக்க விரும்புவது மிக இயல்பானதே.

அர்ச். சிலுவை அருளப்பர் கூறுகிறார்: கடவுளை நேசிக்கிற ஆன்மாவை அவர் தம்முடன் சமமாக்கி நேசிக்கிறார் என்று. இது மறுவுலகிலேயே முழு அளவில் நடைமுறைப்படுத்தப்படும். அப்படியானால் மாதாவை சர்வேசுரன் தம் அளவிற்கு நேசிக்க விரும்புவது - அதை இவ்வுலகிலேயே நிறைவாகக் கொண்டு, மனுக்குலம் அதை அறிந்து போற்ற வைக்க விரும்புவது ஆச்சரியமல்ல. அதனாலேயே சேசு தம் தாயை தம்முடன் இணையாக ஏற்றுக்கொண்டு இருவருமாக நம் இரட்சண்யத்தை சம்பாதித்தார்கள். அதனால்தான் மாதா இணை மீட்பர் என அழைக்கப்படுகிறார்கள். திருச்சபையும் அதை ஒரு விசுவாச சத்தியமாக அறிவிக்க ஏற்பாடு செய்து வருகிறது.

இந்த உந்நத விருப்பம் பாத்திமா செய்தியின் உச்சப் பொருளாய் விளங்குகிறது. எப்படியென்றால், உலகத்திற்கு சமாதானத்தைத் தர ரஷ்யாவை மனந்திருப்ப வேண்டியுள்ளதே, அதை ரஷ்ய ஐக்கிய அர்ப்பணம் இல்லாமல் ஆண்டவர் ஏன் செய்யக்கூடாது? ரஷ்யாவை பாப்பரசர் ஐக்கிய அர்ப்பணமாய் ஒப்புக்கொடுப்பது உலகம் முழுவதையுமே பாதிக்கிற கடினமான காரியமாயிருக்கிறதே! என்று சகோதரி லூஸியா ஒருநாள் ஆண்டவருடன் அந்யோந்நியமாய் ஜெபிக்கையில் அவரிடம் கேட்டாள். அதற்கு ஆண்டவர் இவ்வாறு பதிலளித்தார்:

“ஏனென்றால், அந்த ரஷ்ய அர்ப்பணமானது மரியாயின் மாசற்ற இருதயத்தின் வெற்றியாக இருக்கிற தென்பதை என்னுடைய திருச்சபை முழுவதும் கண்டு பிடிக்க வேண்டுமென நான் ஆசிக்கிறேன். மேலும் இம்மாசற்ற இருதயப் பக்தியை என் திரு இருதயப் பக்திக்கு இணையாக வைக்க விரும்புகிறேன்... மாதாவின் மாசற்ற இருதயமே ரஷ்யாவைக் காப்பாற்றும். அது அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது” என்று.

முடிவுரை

கடவுள் இக்கடைசி காலங்களுக்கென நமக்களிக்கிற பாத்திமா செய்தி மிகச் சுருக்கமாய் இங்கே கூறப்பட்டுள்ளது. இதிலே வரும் ஜெபங்களையும் மாதாவின் வார்த்தைகளையும் சேசுவின் வாக்கியங்களையும் மாதா அப்போஸ்தலர்களும் பிள்ளைகளும் மிகக் கவனமாய் ஆழ்ந்து சிந்தித்து ஜெபிக்க வேண்டும். அப்போது அவற்றின் உண்மையான பொருள் விளங்கும். ஆன்மா நிறைவடையும். மனதில் ஊக்கம் பிறக்கும். மாதாவுக்காக எதையும் செய்யக் கூடிய ஆவல் எழும். அதுவே இச்சிறு நூலின் பயனாக இருக்கும்.